Sunday, July 31, 2005

தினமணி ராமன் ராஜா திறமூலத் தொடர் - பாகம் 2

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்:2 கலாமின் நெத்தியடி!
ராமன் ராஜா

முதல்பாகம்

போனவாரம் முற்றுப்புள்ளி வைத்த மைக்ரோ சாப்டின் "நெட்ஸ்கேப் அடி' என்ற வர்ம அடி ரகசியத்தை சொல்கிறேன். அது என்ன தெரியுமா? உங்கள் மென்பொருள் போலவே தாங்களும் ஒன்றைத் தயாரித்து விண்டோஸýடன் சேர்த்து இலவச சீயக்காய் பாக்கெட் போல விநியோகித்தே போட்டியாளர்களை ஒழித்துக்கட்டிவிடுவது!

ஆனால் ஒன்று: இப்படி அடிப்போரில் நெருப்பு வைக்கும் வேலைகளைச் செய்யாமல் இருந்தால் மைக்ரோசாப்ட் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது. நாயை நாய் தின்னும் அமெரிக்கப் பொருளாதாரம் அப்படி. எல்லா மென்பொருள் கம்பெனிகளுக்கும் தற்போது தலையாய பிரச்சினை, அமெரிக்க மார்க்கெட் விளிம்பு வரை நிறைந்துவிட்டது.

அவர்களுக்குத் தொடர்ந்து வருவாய் வரவேண்டுமென்றால் நம்மை மறுபடி மறுபடி சாப்ட்வேர் வாங்க வைக்கவேண்டும். 95, 98, 2000 என்றெல்லாம் நம்பரை மட்டும் மாற்றி அடிப்படையில் அதே சரக்கையே திரும்ப ரிலீஸ் செய்துகொண்டிருப்பது ஒரு வழி. ஆனால் இப்போது பொதுமக்களும் உஷாராகி லேசில் பர்ûஸத் திறக்க மறுக்கிறார்கள். எனவே அவர்கள் லைசென்ஸ் விதிகளை மாற்றி மென்பொருளுக்கும் கேபிள் டிவி போல மாதா மாதம் சந்தா வசூலிக்கத் திட்டம் தீட்டி வருகிறார்கள். இன்டெல் மற்றும் சில ஆடியோ கம்பெனிகளும் இந்தச் சதியில் கூட்டு. உங்கள் கம்ப்யூட்டருக்குள் பொல்லாத சில்லு ஒன்றைப் பதித்து, ஒண்ணாம் தேதியன்று பணம் கட்டவில்லையென்றால் கம்ப்யூட்டர் நாக்கைத் துருத்திக்கொண்டு மல்லாந்து கிடக்கும்படி செய்யும் தொழில்நுட்பம் வரப்போகிறது.

இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்தான் நம் கதாநாயகர்கள் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அங்கங்கே துண்டு துண்டாக நடந்துகொண்டிருந்த இந்த இயக்கத்திற்கு காந்தி மாதிரி, மண்டேலா மாதிரி ஒரு தலைவர் தேவைப்பட்டார். இந்த நேரத்தில்தான் லைனஸ் தோர்வால்ட் என்ற இளைஞர் இருண்ட மேடையில் ஸ்பாட் லைட் தொடரக் காட்சியில் நுழைகிறார்.

இந்த பின்லாந்து மாணவர் விளையாட்டாக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை எழுத ஆரம்பித்து, உதவி கேட்டு இன்டர்நெட்டில் ஒரு நோட்டீஸ் ஒட்டினார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்து சிலர் சேர்ந்துகொண்டார்கள். பத்து நூறானது, நூறு ஆயிரமானது. கடைசியில் உலகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் இணையத்தின் வழியாகவே கலந்து பேசி ஒத்துழைத்து ஓர் அபாரமான ஆபரேட்டிங் சிஸ்டத்தை எழுதியே முடித்துவிட்டார்கள். அதுதான் லினக்ஸ்!முதலில் மைக்ரோசாப்ட் போன்ற கம்பெனிகள் இதை எள்ளி நகையாடின. நாங்கள் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் என்ஜினியர்களே தப்புத் தப்பாக ப்ரோக்ராம் எழுதித் தத்தளிக்கிறார்கள். இதில் ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் தலைக்குத் தலை எழுத ஆரம்பித்தால் என்ன ஆவது என்று சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால் லினக்ஸின் முக்கிய பலம், அதன் மூல ஆணைத் தொடரை எல்லாரும் படிக்கும்படி திறந்து வைத்திருப்பதுதான். ஒருவர் ஒரு தப்பு செய்தால் அது வேறு யார் கண்ணிலாவது நிச்சயம் பட்டுவிடும்.

இருபத்து நாலு மணி நேரமும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பதால் மளமளவென்று வளர்ந்தது லினக்ஸ். கூலிப் பட்டாளங்களுக்கு இல்லாத மன உறுதியும் சாதிக்கும் வெறியும் பொதுநல நோக்கமும் இருப்பதால் ஓப்பன் சோர்ஸில் வேலை செய்யும் பலருக்கு தொழில்நுட்ப வட்டாரங்களில் மிகுந்த மரியாதை இருக்கிறது. முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதால் பலர் உடனே லினக்ஸýக்கு மாறிவிட்டார்கள்.

ஐ.பி.எம். போன்ற பெரிய கம்பெனிகள் மைக்ரோசாப்டை வஞ்சம் தீர்த்துக்கொள்ள லினக்ûஸ ஆதரிக்கின்றன. சீனாவில் அரசாங்கமே லினக்ûஸ அதிகாரபூர்வமாக்கிவிட்டது. அவர்களுக்கு அமெரிக்கர்கள், குறிப்பாக சி.ஐ.ஏ. மீது எப்போதும் சந்தேகம்; தங்கள் தகவல்களையெல்லாம் ஒட்டுக் கேட்க சாப்ட்வேரில் ஏதேனும் ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்து அனுப்பியிருந்தால்?... லினக்ஸ் ஒரு திறந்த புத்தகமாகையால் பயமில்லாமல் உபயோகிக்கிறார்கள்.

வெளியிலிருந்து பார்த்தால், சாப்ட்வேர் என்ஜினியர்கள் இப்படி பசி தாகம் மறந்து ஓய்வு நேரத்தைத் துறந்து இலவச சேவை செய்ய முன்வருவது கொஞ்சம் புதிராகத் தோன்றலாம். இதில் முக்கிய விஷயம், மென்பொருள் எழுதுவது தொழில்நுட்பம் மட்டுமில்லாமல் ஒரு கலையும் கூட. கதை, கவிதை எழுதுவது போலவே இதற்கும் ஒரு படைப்புத் திறன் -கிரியேடிவிட்டி தேவைப்படுகிறது. ஒரு புதுக்கவிதை எழுதியவுடன் அதை அச்சில் பார்க்கும் ஆசையில் இலக்கியப் பத்திரிகைக்கு அனுப்புவது போல் தங்கள் மென்பொருளை உலகமே பார்க்கவேண்டும் என்ற விருப்பம் ஒரு காரணம்.

இந்த அவசர யுகத்தில் மற்ற எல்லாவற்றையும் போலவே மென்பொருள் எழுதுவதும் இயந்திரமயமாகிவிட்டது. பத்து வருடம் முன்பெல்லாம், நாள்கணக்கில் சிலை வடிப்பது போல் கையால் செதுக்கி அழகு பார்த்த மென்பொருள்கள், இப்போது ரெடிமேடாக லெகோ பொம்மை மாதிரி பார்ட் பார்ட்டாகக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக் கோர்த்துக் கொடுப்பதுதான் சாப்ட்வேர் என்ஜினியர்களின் வேலை என்று இந்தத் தொழிலே முட்டாள்தனப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதனால் கொஞ்சம் அழகுணர்ச்சி மிச்சமிருப்பவர்கள் வெறுத்துப்போய், பகலெல்லாம் அலுவலகத்தில் காசுக்கு மாரடித்தாலும் இரவில் ஓப்பன் சோர்ஸ் எழுதுவதில் இருக்கும் சவாலை விரும்பி வருகிறார்கள். அதிலும் நல்ல ப்ரோக்ராம்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும். ஜாவாவை இயற்றிய ஜேம்ஸ் காஸ்லிங் இந்தியா வந்தபோது இளைஞர்கள் ஆட்டோகிராப் கேட்டு மொய்த்தார்கள். மற்றபடி இந்தத் துறையிலும் பாராட்டு -புகழ் மாலை, பொறாமை -புகைச்சல், கோஷ்டிப் பூசல் -கைகலப்பு அத்தனையும் தப்பாமல் உண்டு.

லினக்ஸ் தந்த தெம்பில் அவரவர்கள் களத்தில் இறங்கி ஆபரேடிங் சிஸ்டம் அல்லாத மற்ற மென்பொருள்களையும் திறவூற்றில் கொண்டுவந்துவிட்டார்கள். வெப் சர்வர், அப் சர்வர், அலுவலக மென்பொருள் என்று எதை எடுத்தாலும் அதற்கு ஒரு ஓப்பன் சோர்ஸ் வடிவம் கிடைக்கிறது. விக்கிபீடியா என்று உலகமே சேர்ந்து ஒரு கலைக்களஞ்சியத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. (நான் கூட இட்லி செய்வது பற்றி ஒரு குடும்ப ரகசியத்தை வெளியிட்டிருக்கிறேன்). சோர்ஸ் ஃபோர்ஜ் என்ற இணைய தளத்தில் மட்டுமே ப்ராஜெக்டுகளின் எண்ணிக்கை
ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. லினக்ûஸ உலகின் எல்லா மொழிகளிலும் அவரவர்கள் உற்சாகத்துடன் கொண்டுவந்திருக்கிறார்கள்.

தமிழிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கோஷ்டிகள், ஒரு கையால் லினக்ஸ எழுதிக்கொண்டே மறு கையால் பரஸ்பரம் இங்க் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் திறவூற்றை ஆதரிப்பவர்களில் முக்கியமானவர் அப்துல் கலாம் அவர்கள். சமீபத்தில் தன்னைச் சந்திக்க வந்த வி.ஐ.பி. ஒருவரிடம் "இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மைக்ரோசாப்ட் எல்லாம் சரிப்படாது. ஓப்பன் சோர்ஸ்தான் எங்கள் ஒரே நம்பிக்கை'' என்று அடித்துச் சொன்னார். அந்த வி.ஐ.பி. -பில் கேட்ஸ்!

3 comments:

சுட்டுவிரல் said...

//இந்தியாவில் திறவூற்றை ஆதரிப்பவர்களில் முக்கியமானவர் அப்துல் கலாம் அவர்கள். சமீபத்தில் தன்னைச் சந்திக்க வந்த வி.ஐ.பி. ஒருவரிடம் "இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மைக்ரோசாப்ட் எல்லாம் சரிப்படாது. ஓப்பன் சோர்ஸ்தான் எங்கள் ஒரே நம்பிக்கை'' என்று அடித்துச் சொன்னார். அந்த வி.ஐ.பி. -பில் கேட்ஸ்!//

நெத்தியடி என்பது நிஜம் தான்!

சுட்டிப் பையன் said...

தமிழ் நாட்டில் இந்த முயற்சியில் யாரெல்லாம் ஈடுபட்டு இருக்கிறாகள் என்று தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

மு.மயூரன் said...

திறந்த ஆணைமூல உலகைப்பற்றிய நல்ல அறிமுகக்கட்டுரை.
எளிமையாக இருப்பது மேலும் சிறப்பு.

லினஸ் டோவால்டின் வருகையை மிகைப்படுத்துவது உறுத்தலாயிருக்கிறது.

லினஸ் வருவதற்கு முன்னரே, பலகாலத்துக்கு முன்னரே க்னூ செயற்திட்டம் ஆரம்பித்துவிட்டது.

இங்கே கட்டுரையில் தகவல் பிழை இருக்கிறது.

க்னூ ஏறத்தாழ முற்றுப்பெறும் நிலையில், பெரிய கோயில் உச்சிக்கல்லை கிழவி கொடுத்து உதவினாற்போல லினஸ் , கேர்னலை வழங்குகிறார்.

அதிலும் கேர்னலை திறந்த ஆணைமூலமாக்குவதற்கு க்னூவின் ரிச்சர்ட் ஸ்டால்மன் தான் உழைத்திருக்கிறார்.

ஸ்டால்மனை விட்டுவிட்டு எப்படி திறந்த ஆணைமூலம் பற்றி கதைப்பது>

ஸ்டால்மன் பணி ஆரம்பித்தது எண்பத்தைந்து வாக்கில், லினஸ் காட்சியில் வந்தது தொண்ணூற்று ஒன்று அல்லது இரண்டு வாக்கில்.

லினஸ் அல்ல ஸ்டால்மனே இங்கு கதாநாயகன்.

பார்க்க-
mauran.blogspot.com/2005/02/richard-stallman.html