Wednesday, December 21, 2005

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 1

கிறிஸ்துமஸ் என்றால் என்ன ? அது ஏன், எதற்கு, எப்படிக் கொண்டாடப்படுகிறது ? அதன் பின்னே உள்ள உயர்ந்த தத்துவங்களைப் பற்றியும் அது கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படி ஒரு தவிர்க்க இயலாத கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பதைப்பற்றியும் எழுத ஆசை. மேலும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய கிறிஸ்துமஸ் தாதா, பரிசுப்பொருள்களின் பரிமாற்றம், கத்தோலிக்கத் திருச்சபைகளில் பின்பற்றப்படும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய பாரம்பரியங்கள் , டிசம்பர் 25 என்ற நாள் எப்படி வந்தது? கிறிஸ்துமஸ் பாடல்கள் (கரோல்கள்) என்று அதன் தாக்கங்கள் என்று நிறைய எழுத ஆசை.

எனக்கு பிற மதத்தவர்களின் நம்பிக்கைகள் பற்றியும் அவர்களின் பண்டிகைகள், கொண்டாடங்கள் பற்றியும் அறிய மிகவும் ஆசை. இதைப்போலவே கிறிஸ்தவர்களின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி அறிய விரும்புவர்கள் இதைப் படிக்கலாம். எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த வரையில் முழுத்தகவல்களோடு நன்றாக எழுத முயற்சிக்கிறேன். மேலும் ரெம்ப நாளா ஒரு நல்ல தொடர் எழுத வேண்டும் என்ற எனது ஆசையும் இதன் மூலம் நிறைவேறிவிடும்.


கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவுக்கான திருப்பலி (Christmas , originally the Mass of Christ derived from the old English Cristes mæsse) என்று பொருள்படும். இது தமிழில் கிறிஸ்துஜெயந்தி அல்லது கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் Xmas என்றும் சிலநேரங்களில் சுருக்கி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகாமத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள், இவைகள் எழுதப்பட்ட காலத்தில் உலகப்பொதுமொழியாக விளங்கிய கிரேக்க மொழியில் X என்பது பொதுவாக கிறிஸ்து என்பதன் சுருக்கமாகப் பார்க்கப்படுகிறது. In Greek, X resembles the Χ (chi) which has often historically been used as an abbreviation for Christ (Χριστός in Greek). கடவுளாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்தப் பூமியில் அவதானித்த திருநாளே கிறிஸ்துமஸ் ஆகும்.

திரித்துவம்

திரித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் கிறிஸ்துமஸ் பற்றிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது.
நம்மை எல்லாம் படைத்துக், காக்கும் கடவுள் ஒருவரே. அவரே எல்லாமானவர். ஆனால் கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று கடவுளை மூன்று பேர்களாக வணங்குகிறார்கள். இவர்கள் மூவரும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள், ஆனால் ஒருவரே. ஒரே கடவுள் ஆனால் மூன்று பேர். இது புரிந்து கொள்ள சிறிது கடினமானதுதான். நான் எளிதாக விளக்க முற்படுகிறேன்.

நான் தற்போது இருக்கும் மாலத்தீவு, நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளது. நான் கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப்பார்க்கிறேன். ஆர்ப்பரிக்கும் அலைகளோடு , அளப்பரிய சக்தியோடும் சில் நேரங்களில் ஆர்ப்பாட்டமாகவும், சில நேரங்களில் ஒரு ஓடையப்போன்று அமைதியாகவும் உள்ளது. அலைகள் கடற்கரையே நோக்கி வரும்பொழுது வேகமெடுக்கின்றது. பின் கரையில் மோதுகிறது, பின்பு மீண்டும் கல்டலுக்குள்ளேயே சென்று விடுகிறது. அலைகள் கடலிலிருந்து தனித்துத் தெரிந்தாலும் அதுவும் கடலே. எப்போதும் காற்றில் ஒருவித கடலில் உப்புவாடையும், கடலலைகளின் சத்தமும் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இப்பொது ஒரு கேள்வி, கடல், கடலலைகள், உப்பங்காற்று இந்த மூன்றும் வேறு, வேறா அல்லது ஒன்றா..? மூன்றிற்கும் தனித்தனி அடையாளங்கள் இருந்த போதிலும் மூன்றும் ஒன்றே.

அந்த உதாரணத்தில் காட்டியது போன்றே தந்தையாகிய கடவுள் கடலைப்போன்று உள்ளார். எப்படி அலைகள் கடலின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றதோ அதுபோல அவரது மகனாகிய இயேசுவும் தந்தையின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றார். உப்பங்காற்று பரிசுத்த ஆவியாரைக் குறிக்கும்.

இதுபோன்று இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல இயலும். இருந்தாலும் இது பிதா/மகன்/பரிசுத்த ஆவி என்ற சொற்களின் சரியான பொருள் மற்றும் பிரயோகத்தை எல்லோரும் உணர்ந்து கொள்ளவே சொல்லப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்க) எல்லோரும் கீழ்க்கண்ட விசுவாசப்பிராமாணத்தை நம்புகின்றனர்.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்./
அவருடைய ஏகசுதனாகிய/ இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்த்ழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிரார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.
- ஆமென்.

இதில் கிறிஸ்துமஸ் என்பது மகனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்த அந்த நாளே ஆகும்.

இவைகளைப் பற்றி புனிதவேதகாமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

முக்கியப் பின்குறிப்பு

இந்த மினி தொடர், கிறிஸ்துமஸ் பற்றிய சில விபரங்களை எல்லோரும் அறிந்து கொள்ளவே எழுதப்படுகிறது. வேறு எந்த வித மதசம்பந்தமான உள்நோக்கம் இதற்கு இல்லை. இது முழுக்க முழுக்க மத சம்பந்தமான நம்பிக்கைகள். எனவே யாரும் இது தவறு, அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எனது நம்பிக்கை எனக்கு.

2 comments:

ravi said...

I got a chance to know about the story behind celbrating christmas thanks its very informative

ravi said...

un eluthu thiramaikku valthukkal magana .nalla valiyil un polthu selgirathu. un eluthu payanam thodara valthkkal melum melum nee valarvai magana