Thursday, December 29, 2005

நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?

ஜோதிடத்தில் அணுவளவும் நம்பிக்கையே இல்லாதவன் நான். எனது நண்பர் ஒருவர் இந்தவார குமுதம் ஜோதிடம் இதழில் இருந்து நான் படிக்குமாறு சிபாரிசு செய்தது, "நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா? என்ற தலைப்பில் திரு.ஏ.ம்.ஆர் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை. நீங்களும் படித்துப் பாருங்கள். பொதுவாக நாம் எல்லோருக்கும் நம் வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வியை நமக்குள் நாமே கேட்டுக் கொண்டிருப்போம்,"நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?". இதற்குப் பதிலை அவருடைய கோணத்தில் சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் நல்லவர்களுக்குத் துன்பமும், தீயவர்களுக்கு இன்பமும்?




நான் பலமுறை கூறிவருவது போல் எனக்குத் தினமும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொருவித வேதனை, ஒவ்வொருவித துன்பம் என்று பல தருணங்களில் நெஞ்சைப் பிழியும் அளவிற்கு வேதனையை அளிக்கின்றன.

இவ்விதம் துன்பப்படுவோரில் பலரும் மிகுந்த தெய்வபக்தி மிகுந்தவர்கள். நன்னடத்தை உடையவர்கள். அவர்கள் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி, ‘‘நல்லவர்களாக வாழ்ந்தும் எங்களுக்கேன் இந்த அளவிற்குத் துன்பங்கள்? ஒழுக்கம் கெட்டவர்கள், தெய்வத்தை நிந்திப்பவர்கள், நெஞ்சில் சிறிதளவும் ஈரமில்லாது தங்கள் செல்வாக்கினால் பல நல்ல குடும்பங்களைச் சீரழித்தவர்கள், திருக்கோயில் சொத்துகளை அபகரித்துக்கொண்டவர்கள், பல திருக்கோயில்கள் நாசமடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று செல்வச் செழிப்புடன் மகிழ்வோடு இருக்கிறார்களே? இது எவ்விதத்தில் நியாயமாகும்?’’ என்று கேட்டு எழுதி வருகிறார்கள்.

தொடர்ந்து வரும் துன்பங்களினால் மனம் தளர்ந்த நிலையில் இவர்கள் கேட்டிருப்பது நியாயமே ஆகும்! அதுவும் தற்காலச் சூழ்நிலையில் குடும்பமே தனது கோயில் என்று வாழும் உத்தமிகள், மாற்றுப் புடவைக்குக்கூட வசதியில்லாமல் வறுமையில் வாடும்போது; கற்பை விற்று, செல்வத்தில் திளைக்கும் ஒழுக்கம்கெட்ட பெண்கள், ஆடம்பரக் கார்களில் உல்லாசமாக வலம் வருவதும் அவர்களுக்குச் சமூகம் மதிப்பளிப்பதையும் பார்க்கும்போது நேர்மையாக வாழ்ந்தும் துன்பப்படுபவர்களுக்கு மனஉறுதி தளர்கிறது.

பாடுபட்டுப் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் எத்தகைய திறமையிருந்தாலும் அத்தகைய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று சாதாரண அளவில்கூட திறமையில்லாதவர்களுக்கு அரசியல் செல்வாக்கிருந்தால் அவர்களுக்கு மிகச் சுலபமாக வேலை கிடைப்பது மட்டுமல்ல, வேலை கிடைத்த பிறகு, பதவி உயர்வுகளும் மிக எளிதில் கிடைத்துவிடுவதை இன்று கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.

லஞ்சம் கொடுத்தால்தான் எந்தக் காரியமும் நடக்கும் என்ற நிலையை மக்களும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நமக்குச் சிறிதளவாகினும் நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் அவர்கள் மக்கள் பிரச்சினைகள் பற்றிச் சிறிதளவுகூட கவலைப்படாமல் வேறு ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்பதற்கு லஞ்சம் வாங்கிவிட்டு ‘‘இது லஞ்சம் அல்ல, அன்பளிப்பே அகும்!’’ என்று சிறிதளவும் வெட்கமின்றி மனசாட்சியையும் புறக்கணித்துவிட்டு, சமூகத்தில் கௌரவத்துடன் உலவி வருகிறார்கள்.

ஏதாவது ஒரு விதத்தில் ஒரு கட்சியினிடமோ அல்லது கட்சித் தலைவரிடமோ அல்லது கட்சிப் பிரமுகர்களிடமோ தொடர்பும், செல்வாக்கும் இருந்தாலொழிய, நமது காரியம் எதையும் சாதித்துக்கொள்ள முடியாது என்ற நிலை இன்றிருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

அன்னிய நாடுகள் அனைத்திலும் தேசிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மட்டும்தான் மாநிலக் கட்சிகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு அனுமதித்ததால் இன்று மக்கள் தமிழர்கள் என்றும், கன்னடியர்கள் என்றும், மலையாளிகள் என்றும் மராட்டியர்கள் என்றும் வேறுபட்டு நிற்கின்றனர். நமது நாடு, அனைவரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தியே வருகின்றன.

ஆதலால், சிறிது சிறிதாக மக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிட்டு வருகிறது. இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நாம் ஏன் பாடுபட்டுப் படிக்கவேண்டும். இரவும், பகலும் கண் விழித்துப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் நமக்கெங்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்று மனம் கலங்கி நிற்கிறார்கள். பணக்காரன் மேலும் மேலும் செல்வந்தனாகிறான். ஏழை ஏழையாகவே கண்ணீர் வடித்து நிற்கிறான்.

தெய்வத்திடம் பயம் போய்விட்டது. தர்மத்தில் நம்பிக்கையில்லை. இவ்விதம் இருப்பவர்கள் பல வழிகளிலும் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கும்போது, தொடர்ந்து துன்பப்பட்டுவரும் நல்லவர்களுக்குத் தெய்வ நம்பிக்கை குறைந்துவிடுகின்றது. பாவம் செய்கிறவர்கள் கஷ்டமா படுகிறார்கள் என்ற கேள்வி தலைதூக்குகிறது.

தர்மம் உறங்குவதில்லை!

உண்மை என்னவென்றால் பாவச் செய்கைகளினாலும், அரசியல் செல்வாக்கினாலும், தங்கள் சாமர்த்தியத்தினாலும் செல்வம் சேர்ப்பவர்கள் வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றினாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு விநாடியும், அவர்கள் நிம்மதியின்றித் தூக்கமும் வராமல், சிறிது ஓசை கேட்டால்கூட, ‘‘ஐயோ, யார் வந்துவிட்டார்களோ!’’ என்று பயந்து, நடுங்கியபடி உறுத்தும் மனசாட்சியுடன் இரவைக் கழிப்பது சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை.

பாவத்தைக் கட்டிக்கொண்டு படுப்பவர்களுக்குத் தூக்கம் எப்படி வரும்? பாவம் எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறது. அது எந்தத் தருணத்திலும் பக்கத்தில் படுத்துறங்கும் தவறு செய்பவர்களை விழுங்கிவிடும். அது பசியோடிருக்கும் புலியைப் போன்றது.

தாங்கள் என்றுமே இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப்போவதாகவும், தங்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது என்றும் இறுமாந்திருப்பவர்களைத் தர்மம் என்ற சட்டம் உரிய காலத்தில் கவனித்துக்கொள்ளும். தர்மத்தின்படி வாழ்பவரை அந்த தர்மமே ஒவ்வொரு விநாடியும் காப்பாற்றும். நேர்மையாக வாழ்பவர்களுக்கு துன்பம் நிரந்தரமாக இருக்காது. இது மகரிஷிகளின் வாக்கு. உபநிஷத்துகளும் இதனை உறுதி செய்கின்றன.

இத்தருணத்தில் சென்ற மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் செழிப்புமிக்க சிற்றூர் நன்னிலம். அதற்கு அருகிலுள்ள மிகப் புராதனமான திருக்கோயில் ஒன்றிற்கு நான் சென்றிருந்தேன். மிகப் பழைமையான அழகான திருக்கோயில் அது. ஆகம, சிற்ப, வேத விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதன் அன்றைய நிலையைக் கண்டவுடன் மனம் துடித்து, கண்கலங்கி நின்றேன். பிரதான மண்டபத்தில் இருந்த மிகப் பெரிய ரிஷப வாகனத்தைப் பார்த்தபோது மனம் கலங்கி, கற்சிலை போல் செயலற்று நின்றேன். என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பீறிட்டு வந்தது. இத்தகைய ரிஷப வாகனம் இருந்ததால் ஒரு காலத்தில் பல பிரம்மோற்சவங்களைக் கண்ட திருக்கோயிலாகத்தான் இது இருந்திருக்கவேண்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது.

அம்பிகையின் எண்ணெய் தோய்ந்த புடவையும், ஓட்டைகள் நிறைந்திருந்த வஸ்திரத்துடன் இருந்த சிவலிங்கத்தையும் கலங்கிய இதயத்துடன் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன். அத்திருக்கோயிலின் காவலாளி _ வயோதிகர் _ வறுமைக்கு உறைவிடம் என்பதை அவர் அணிந்திருந்த வேஷ்டி பறைசாற்றியது. அப்போது மதியம் மணி சுமார் 12 இருக்கும்.

அவரது வீட்டிலிருந்து சாதமும், மோரும், சிறிது ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார் அம்முதியவரின் மனைவி. அதனை வாங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆவலுடன் பசியாற சாப்பிட்டு, தண்ணீரும் அருந்திவிட்டு மகிழ்ச்சியாகப் பேசினார் எங்களுடன்.

அவர் மனைவி கொண்டு வந்திருந்த சாதாரண மோர் சாதத்தை அந்த முதியவர் அனுபவித்துச் சாப்பிட்டதை நான் பார்த்தபோது, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு கோடீஸ்வரரின் நினைவு எனக்கு வந்தது. பல தவறான வழிகளில் அவர் பணம் சேர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சமூகத்தில் அவருக்கு மரியாதை உண்டு. அந்த மரியாதை அவருக்கல்ல, அவரது செல்வத்திற்காகவே! மருத்துவ அறிவுரைப்படி அவர் இனிப்பு சாப்பிடக்கூடாது. உப்பு அதிகம் கூடாது என்று பலவித கட்டுப்பாடுகள். இரவில் தூக்கத்திற்கு ஒரு மாத்திரை. விழித்தபின் அவ்வப்போது ஏராளமான மாத்திரைகளும், மருந்துகளும்!

என் மனம் கேட்டது, யார் உண்மையிலேயே சுகப்படுகிறார் என்று! நன்னிலம் திருக்கோயிலில் நான் பார்த்த ஏழை வயோதிகரா அல்லது தமிழகத்தின் மிகப் பெரிய நகரத்தில் செல்வச் செழிப்பில் புரண்டு நிம்மதியற்று ஒவ்வொரு விநாடியையும் தள்ளும் இந்தச் செல்வந்தரா என்று. ஆதலால், பாவச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக நாம் நினைப்பது கற்பனையே!

ஆதலால்தான் தர்மம் கூறுகிறது, நல்லவர்கள் கெடுவதில்லை என்று. அதேபோன்று தீயவர்களும் வாழ்வதில்லை. இது நான்மறை தீர்ப்பு. ஆதலால் எத்தகைய சோதனையிலும் நாம் நேர்மையிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் தவறக்கூடாது!

No comments: