Thursday, June 02, 2005

லீனக்ஸ் : ஒரு அறிமுகம் - பகுதி 1

லீனக்ஸைப் பற்றி இன்று எல்லாரும் பேசுகிறார்கள். லீனக்ஸைப் பயன்படுத்துவது கடினம் என்பது மாறி புரோகிராமர்கள், நெட்வொர்க்கிங் நிபுணர்கள் தவிர மற்றவர்களும் லீனக்ஸைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். லீனக்ஸ் பயனாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. லீனக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள சரியான சமயம் இதுதான். இந்த அறிமுகத்தில் லீனக்ஸைப் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

லீனக்ஸ் என்பது என்ன?

GNU என்ற ஆபரேட்டிங் சிஸ்டமும் linux என்ற கெர்னலும் சேர்ந்த காம்பினேஷன், ஜி.என்.யூ./லீனக்ஸைத்தான் எல்லாரும் லீனக்ஸ் என்கிறார்கள். (ஒரு வசதிக்காக சுருக்கமாக லீனக்ஸ் என்று குறிப்பிடுகிறோம்). ஜி.என்.யூ., யூனிக்ஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இலவச ஆபரேட்டிங் சிஸ்டம் (லைனக்ஸ் என்பது தவறான உச்சரிப்பு) லீனக்ஸின் முக்கிய அம்சங்கள் :

Multi-user: லீனக்ஸ் யூனிக்ஸின் ஜெராக்ஸ் காப்பி என்பதால் ஒரு லீனக்ஸ் கம்ப்யூட்டரை ஒரே சமயத்தில் பலர் பயன்படுத்த முடியும். விண்டோஸ் என்.டி.யை யாரும் வீட்டில் பயன்படுத்த முடியாது.

Multi-tasking : லீனக்ஸ் ஒரு நிஜமான மல்ட்டிடாஸ்க்கிங் ஆபரேட்டிங் சிஸ்டம். அதாவது ஒரே சமயத்தில் பல புரோகிராம்களை இயங்க வைக்க முடியும். வேகம் லீனக்ஸின் பலங்களில் ஒன்று.

இலவசம் : இலவசம் என்றால் காசு கொடுக்காமலே கிடைக்கும் என்பது மட்டும் இல்லை. இதன் நிரல் வரிகளும் (source code) சேர்ந்து கிடைக்கிறது. லீனக்ஸைப் பயன்படுத்துபவர்கள் இந்த நிரல் வரிகளைத் தங்கள் விருப்பப்படி மாற்றி கம்ப்பைல் செய்துகொள்ளலாம். லீனக்ஸ் சி.டி. வாங்கவேண்டும் என்றால் கூட கொஞ்சம்தான் செலவாகும். ரூ. 2,000 முதல் 7,000 வரை ஆகிறது. ஆனால் பெரும்பாலான லீனக்ஸ் புத்தகங்களுடன் தரப்படும் சி.டி.களில் லீனக்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது.

கம்ப்யூட்டர் பத்திரிகைகள் தொடர்ந்து லீனக்ஸை சி.டி.களில் இலவச இணைப்பாகத் தருகின்றன. இப்படி 100 ரூபாயிலும் முடித்துவிடலாம். லீனக்ஸை இன்டர்நெட்டிலிருந்தும் டவுன்லோட் செய்யலாம். அதை விட வசதி, நண்பர்களிடம் இரவல் வாங்கலாம்.

ஒவ்வொரு இந்திய நகரத்திலும் (நீங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை என்றால் உங்கள் நகரத்திலும்) லீனக்ஸ் பயனாளிகள் குழுக்கள் (Linux User Groups) இருக்கின்றன. இதன் உறுப்பினர்களிடம் கேட்டு வாங்கலாம். மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் போலில்லாமல் லீனக்ஸைப் பல காப்பிகள் எடுத்து சகட்டுமேனிக்கு விநியோகிக்கலாம்.

லீனக்ஸுக்கும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களுக்கும் என்ன வித்தியாசம்?

(மற்ற ஆபரேட்டிங்க சிஸ்டங்கள் என்றால் விண்டோஸ் என்று அர்த்தம். சில சமயம் மெக்கின்டாஷ், யூனிக்ஸ் ஆகியவற்றையும் சேர்க்கலாம்)

எம். எஸ். -டாஸ், விண்டோஸ் ஆகியவை இன்டெல் 386,486 ப்ராசசர்களின் திறன் முழுவதையும் பயன்படுத்துவதில்லை. லீனக்ஸ், ப்ராசசரின் எல்லா வசதிகளையும் பயன்படுத்துகிறது.


விண்டோஸ், மெக்கின்டாஷ் ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டங்களில் மல்ட்டி யூசர், மல்ட்டி டாஸ்க்கிங் வசதிகள் இல்லை. லீனக்ஸில் இருக்கிறது. விண்டோஸ் என்.டி. மல்ட்டி யூசர் ஆபரேட்டிங் சிஸ்டம் என்றுதான் பெயர். ஆனால் லீனக்ஸ் போன்ற நெட்வொர்க் ஆபரேட்டிங் சிஸ்டங்களில் பயனாளிகளுக்குக் கிடைக்கும் நிஜமான தனி அடையாளம், பாதுகாப்பு அதில் கிடைக்காது. யூனிக்ஸிலிருந்து வந்ததால் லீனக்ஸ் ஒரு `ஆழமான' மல்ட்டி யூசர் ஆபரேட்டிங் சிஸ்டம். லீனக்ஸில் நம் இஷ்டப்படி மாற்ற முடிகிற வசதி (customisability) இருக்கிறது.


விண்டோஸை விட லீனக்ஸ் வேகமாக செயல்படுகிறது. சரியான ஹார்டுவேர் மட்டும் இருந்துவிட்டால் ஒழுங்காக configure செய்தால் லீனக்ஸ் க்ராஷ் ஆவதில்லை. அப்படி ஆகிவிட்டால் அதை போஸ்ட்மார்ட்டம் செய்ய க்ராஷ் ஆன விபரங்கள் core என்று தனியாக ஒரு ஃபைலில் பதிவாகி இருக்கும். அதைப் படித்து பிரச்னையைக் கண்டுபிடித்து னநரெப செய்து விடலாம்.


ஒரே கம்ப்யூட்டரில் லீனக்ஸ், விண்டோஸ் இரண்டையும் தனித்தனி பார்ட்டிஷன்களில் போட்டு வைப்பது சகஜம். லீனக்ஸ் பார்ட்டிஷனிலிருந்து லீனக்ஸ் ஃபைல் மேனேஜரைப் பயன்படுத்தி விண்டோஸ் பார்ட்டிஷனில் இருக்கும் ஃபைல்களைப் பார்க்க முடியும். விண்டோஸில், லீனக்ஸ் பார்ட்டிஷனில் இருப்பவை மேல் கை வைக்கவேண்டும் என்றால் அதற்கென்று ஒரு தனியாக ஒரு சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவேண்டும்.

ஒரு சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்தால் விண்டோஸில் செய்வது போல் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பவர்கட் போன்ற விபத்துக்களால் கம்ப்யூட்டா சரியாக அணைக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் விண்டோஸ் பாதிக்கப்படும். சில ஃபைல்கள் சேதமாகும். லீனக்ஸ் இரு போன்ற அதிர்ச்சிகளைத் தாங்கும் வல்லமை படைத்தது. விண்டோஸில் ஒரு புரோகிராம் ரிப்பேர் ("Hang" ஆயிடுச்சு) ஆகிவிட்டால் சிஸ்டமே ஸ்தம்பித்துப் போய்விடும். அதை ரீபூட் செய்து தொலைக்க வேண்டும். லீனக்ஸில் ஒரு புரோகிராம் உறைந்து போனாலும் பிரச்சனை இல்லாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஒரு புரோகிராம் முழு ஆபரேட்டிங் சிஸ்டத்தையும் கட்டிப் போட்டுவிடாது.

லீனக்ஸ் மிகப் பழைய இன்டெல் ப்ராசசர்களில் கூட வேகமாக இயங்கும். மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களைப் போலில்லாமல் லீனக்ஸ் 4 எம்.பி. ராமில் சுறுசுறுப்பாக செயல்படும். ஆனால் குறைந்தபட்சம் 16 எம்.பி. ராம் இருந்தால் KDE, Gnome போன்ற விண்டோஸ் பாணி கிராஃபிக்ஸ் இன்டர்ஃபேஸ்களைப் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

புரோகிராமிங் தெரியும் என்றால் லீனக்ஸ் கெர்னலை (Kernel: ஆபரேட்டிங் சிஸ்டத்தின் மூளை போல் செயல்படும் சாஃப்ட்வேர்) உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி re-compile செய்து கொள்ளலாம். இதுவும் மற்ற ஆபரேட்டிங் சிஸ்டங்களில் இல்லாத விஷயம், டிவைஸ் டிரைவர்கள், புரோகிராம்கள் என்று எல்லாவற்றின் Source code-ஐயும் மாற்றி கோடிங் செய்து பயன்படுத்த, விநியோகிக்க முடியும்.


வேறு எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இல்லாத அளவுக்கு லீனக்ஸில் இலவசமாக ஏராளமான புரோகிராமிங் சாஃப்ட்வேர்கள், வெப்சர்வர்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு எந்த சாஃப்ட்வேர் எல்லாம் வேண்டுமோ அவற்றை மட்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

லீனக்ஸுக்கு இருப்பது போல் பயனாளிகள் குழுக்கள் வேறு எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கும் இல்லை. லீனக்ஸ் உள்ள கம்ப்யூட்டரில் ஒரு பிரச்னை வந்தால் லீனக்ஸ் பயனாளிகளுக்கான இன்டர்நெட் விவாத மேடை ஒன்றில் ஒரு ஈ-மெயில் போட்டால் போதும். நீங்கள் பிரச்னையைச் சொன்ன சில நிமிடங்களில் பலரிடமிருந்து பதில் வந்துவிடும். லீனக்ஸ் பயனாளிகள் எப்போதும் சக பயனாளிகளுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். இது லீனக்ஸ் கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு.

லீனக்ஸுக்கு வைரஸ் தொல்லை அதிகம் இல்லை. லீனக்ஸை பாதிக்கக்கூடிய வைரஸ்கள் 27.8.2001 நிலவரப்படி நான்கே நான்குதான். லீனக்ஸை ஒரு வைரஸ் தாக்குவது தெரிந்தால் பொதுவாக சில மணி நேரங்களில் இன்டர்நெட்டில் அதற்கான நிவாரணி கிடைத்துவிடும்.

No comments: