பகுதி 1
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்குபேர் தம்தம் பெயரில் நற்செய்தி நூல்களாக எழுதியுள்ளனர். ஒரே வரலாற்றை ஏன் நான்கு பேர் எழுதியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவும், வேறுபட்ட தேவைகளுக்காகவும் எழுதியுள்ளனர். உதாரணமாக மத்தேயு யூதர்களுக்காக இயேசு மெசியா என்று நிறுவுவதை மையமாகவும், மாற்கு உரோமையில் வாழும் பிற இனத்தவர்களுக்காக எளியநடையிலும், லூக்கா இயேசு பாவப்பட்ட மனிதர்கள் அனைவருக்காகவும் வந்தார் என்று நிறுவதற்காகவும், இயேசு கடவுளின் மகன் என்பதை மட்டும் நிறுபிக்கவும் கடைசியாக எழுதப்பட்டது.
இதில் இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்டவைகள் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த நற்செய்தி நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசுவின் பிறப்பு - நற்செய்தி நூல்களின் படி
வாக்கு மனிதராதல் (யோவான் 1:1-15)
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.
2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
3 அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
4 அவிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.
முன்னுரை (லூக்கா 1:1-4)
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்.2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
யோவான் பிறப்பைப் பற்றிய முன்னறிவித்தல் (லூக்கா 1:5-25)
5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர். அவர் பெயர் எலிசபெத்து.6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.
8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.13 வானதூதர் அவரை நோக்கி , "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.16 அவர், இஸரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார். தந்தையாரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார். நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார். இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.
18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அது போல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.19 அதற்கு வானதூதர் அவரிடம் , "நான் கபியேல். கடவுளின் திருமுன் நிற்பவன் உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது" என்றார்.21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதொ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார் பேச்சற்றே இருந்தார்.23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.
மரியாளின் மணஒப்பந்தம் (லூக்கா 1:27)
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (லூக்கா 1:26-38)
26 ஆறாம் மாதத்தில் கபியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி , "அருள்மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார்.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே." என்றார்.35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் (லூக்கா 1:39-55)
39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.43 ஆண்டவின் தாய் என்னிடம் வர நான் யார்?44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.
மரியாவின் பாடல்
46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்
47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுவார்.
54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".
நாசரேத்துக்குத் திரும்புதல் (லூக்கா 1:56)
56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.
யோசேப்பின் கனவு (மத்தேயு 1:20-25)
20 அவ் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
22 இதோ. கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.23 இம்மானுவேல் என்றால்"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.
யோவான் ஸ்நானகரின் பிறப்பு (லூக்கா 1:57-80)
57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.
செக்கரியாவின் பாடல்
67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு
68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
69 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே,70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்
71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும்,73 நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்,75 வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்77 ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.
78 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,79 நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."
80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.
இயேசுவின் பிறப்பு (லூக்கா 2:1-7)
1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
இடையர்களும் வானதூதர்களும் (லூக்கா 2:8-20)
8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.10 வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.
13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக." என்று கடவுளைப் புகழ்ந்தது.
15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தஹர்.19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.
விருத்தசேதனம் (லூக்கா 2:21)
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (லூக்கா 2:22-38)
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர் இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.
33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர். 37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஞானிகள் வருகை (மத்தேயு 2:1-12)
1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோ ம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம்,"யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்".
6 ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.
7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம்." நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ. முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
எகிப்திற்குச் செல்லுதல் (மத்தேயு 2:13-15)
13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.
குழந்தைகள் படுகொலை (மத்தேயு 2:16-18)
16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள். ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.
நாசரேத்துக்குத் திருப்பிச் செல்லுதல் (மத்தேயு 2:19-23)
19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு "நசரேயன் என அழைக்கப்படுவார்" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.
இயேசுவின் குழந்தைப்பருவம் (லூக்கா 2:40-45)
40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
கோவிலில் சிறுவன் இயேசு (லூக்கா 2:46-50)
இயேசுவின் இளமைப்பருவம் (லூக்கா 2:51-52)
51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.
இதுவே புனித வேதாகமத்தில் இயேசு பிறப்பினைப்பற்றிய செய்திகள். இதில் கிறிஸ்துமஸ் என்பது எப்படி வந்தது? அதைப்பற்றிய செய்தி வேதாகமத்தில் இல்லாவிடில் யார் இதைக் கொண்டு வந்தது..? விடை அடுத்த பதிவில்..
1 comment:
நன்றி.
Post a Comment