Monday, December 19, 2005

தமிழ் பதிப்புலகத்தில் அபுனைவு

தமிழ் பதிப்புலகத்தில் அபுனைவு (Non-Fiction) பற்றிய திரு.பத்ரி அவர்களின் இரண்டு கட்டுரைகளின் சாரம்சம் இதுவே.

தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமை

புனைவில்லாத, மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்;

ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்.

எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை.

இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.

தமிழ் அபுனைவுகளின் உண்மை நிலமை

வாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்

தமிழ் அபுனைவுகளின் மேன்மைக்குப் பத்ரியின் சில வழிமுறைகள்

இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை.

எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும்.

அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம்.

இது பற்றிய விரிவான பத்ரியின் கட்டுரைகளின் சுட்டி
சுட்டி1, சுட்டி2

பாரதியார் ஏற்கனவே இது பற்றி சொல்லிவிட்டார். அதைத்தான் இப்போது பத்ரியும் சொல்லியுள்ளார்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமைக்குக் காரணங்களில் பத்ரி சொல்லிய இந்தக்கருத்து என்னை நிறைய நேரம் சிந்திக்க வைத்தது. "ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்." இது ஏன் என்று "என்னை" மையமாக வைத்துச் சிந்தித்துப் பார்த்ததில் எனக்குப் பட்டது. தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

1. நிறையபேர் இன்னும் தங்களின் வேலையை தங்களின் சம்பாத்தியத்திற்காகத் தங்களின் மேல் திணிக்கப்பட்டதாகவே எண்ணியுள்ளனர். இதனால் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யவே விரும்புகின்றனர். இஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டுமே அவர்களால் சிகரங்களை எட்ட முடியும்.

2. நிறையபேருக்கு டைம் மேனஞ்ச்மெண்ட் என்ற கால நிர்வாகத்திறன் மிகவும் குறைவு. காலம் பொன்போன்றது என்று நினைக்காமல் தொலைக்காட்சி, சினிமா என்று தங்கள் பொன்னான நேரத்தைச் சீரளிப்பவர்கள் அதிகம்.

3. இப்படிப்போன்ற முயற்சிகள் நமது கடும் உழைப்பையும், நேரத்தையும், நமது கவனத்தையும் , நமது தூக்கத்தையும் தானகவே எடுத்துக் கொள்ளும். அதற்கு எத்தனை பேர் தயார்?

4. இவைகளில் ஈடுபடும் நேரம் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை எடுத்து விடும், அலுவலகத்தில் நமது முனைப்பைக் குறைத்து விடும் என்று Quality மற்றும் Quantity Timeக்கு வித்தியாசம் தெரியாதவர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள்.

5. மேலும் இத்துறையில் சாதித்த ஒரு சிலரும் இதை விட்டுச் சினிமா, வசனம் என்று வேறு , வேறு டிராக்கிற்கு மாறியது.

6. வேலையில் காக்கா பிடித்தும், மற்றவரைக் குறை சொல்லியுமே வந்தவர்கள் அது சம்பந்தமான திறமைகளை மட்டுமே வளர்த்து வருகின்றவர்கள்

7. எனக்குத் தெரிந்து இயந்திர மற்றும் கட்டட பொறியியல் படிப்பவர்கள் கூட தொழில்நுட்பம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளைத் தேடி தங்கள் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத வேலையிலேயே நிலைப்பதும்.. ( பல்தொழில்வித்தகர்களையும், மிகுந்த நெகிழ்வுத்திறன்
மிக்கவர்களை நான் குறை சொல்ல இல்லை.. )

8. படித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏதோ பெரிய ஒன்றை சாதித்தி விட்டது போன்று துறை சார்ந்த மேல் படிப்பினை விட்டு விடுதல் அல்லது மறந்து விடுதல்.

9. தாங்கள் ஏற்கனவே பழகிய / பரிச்சயமானவற்றைத் தவிர மற்றவற்றைப் பற்றி அறிய ஆர்வம் இல்லாமலிருப்பது.

10. முழு நேரம் எழுதுபவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற வாதம் எப்போதுமே உண்டு. எனவே எல்லோரும் தங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காகவே இதை மேற்கொள்ளுவது.

11. இவைகளை எழுதினால் படிப்பார்களா? வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம்.

12. தமிழில் துறை சார்ந்த சிறந்த , எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகராதிகள் இல்லாமை.

13. மொழிபெயர்ப்பும் ஒருவகையில் அபுனைவுகளை ஊக்குவிக்குமா? சிறந்த மொழிபெயர்ப்பு செய்வது பற்றிய கையேடு / புத்தகங்கள் இல்லாமை.

14. எழுதுவது ஒரு தவம் போன்றது என்று உணராமல் எடுத்தோம்,கவிழ்தோம் என்று செய்துவிட்டு ஒரு சிறுதோல்வியிலும் துவண்டு அடுத்த படிக்குச் செல்லாமை.

15. எல்லாவற்றிற்கும் மேலாக கூரிய ஒருமுகப்பட்ட பார்வை, அயாரா உழைப்பு,விடாமுயற்சி இல்லாமை, காலநிர்வாகத் திறன் பற்றாக்குறை, எழுத்தின் மேல் அர்ப்பணிப்பு இல்லாமை..

ஆனால் இவைகள் எல்லாவற்றைய்யும் தாண்டி, இப்பொழுது அபுனைவுகளுக்குத் தமிழில் ஒரு வளமான ஒரு வருங்காலம் வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பாரதியார் கண்ட கனவு நனவாகும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

கணிணி, இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா போன்றவைகளின் நடைமுறை வாழ்வுத் தாக்கத்தாலும், பத்ரி போன்றவர்கள் புதியவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தாலும் நிறையபேர் மணல்வீடு கட்டி விளையாடுவது போன்று புதியமுயற்சிகளை செய்துப்பார்க்கின்றனர். வலைப்பூக்களில் எழுதும் போது, தமிழ்மணம் வாயிலாக ஒத்த சிந்தனை உடையவர்களின் நட்பும், அவர்களோடு பரிச்சயமும், அவர்களின் அனுபவங்களை வலைப்பூக்கள் வாயிலாக அறிய முடிகிறது. நிறைய விசயங்களை எழுத முயற்சி செய்யும் போது என்ன நடையில் எழுதுவது, எப்படி கருத்தை விட்டு விலகாமல் சுவரசியமாக எழுதுவது என்று சிந்திக்க முடிகிறது. எழுதுவதை எப்படி பிழைதிருத்தம் செய்வது, கச்சிதமாக , சுவாரசியமான நடையில் எழுதுவது எப்படி என்று யோசிக்க, பரிச்சார்த்தமான முறையில் பரிச்சை செய்யமுடிகிறது. வெகுவிரைவில் நிறையபேர் வருவார்கள்.

2 comments:

Badri said...

உங்கள் கருத்துக்கள் உபயோகமானவை. இவை பற்றி வரும் நாள்களில் எழுதுகிறேன்.

அன்பு said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. சமீபகாலங்களில் இந்த இணையம் மூலம் தமிழில் எழுதுபவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு கூடியிருக்கின்றனர். என்னைப்பொருத்தவரை தனித்தனியாக தனித்தனி புத்தகம் வெளிக்கொணர முடியாவிட்டாலும் வலைப்பதிவுகளில் வரும் பல சிறப்பான பதிவுகளை தொகுத்து ஒரு இடத்திலோ அல்லது புத்தகமாகவோ வெளிக்க்கொணரலாம். இது வருடாந்திர முயற்சியாக முதலில் செய்யலாம்.

தமிழ்மணத்தின் வாக்கு கொடுப்பதன் மூலம் பெரும்பாலானவர்களுக்குப் பிடித்ததை, நல்ல விடயங்களை பிறருக்குப் பரிந்துரைக்கச் செய்யும் ஒரு நல்ல முயற்சி. ஆனால் அதையும் ஒரு சிலர் சின்னத்தனமாக தனது கைவண்ணம் காட்டி - அதன் குறிக்கோளை கீழறுத்து விட்டனர்.

அதனால் ஒருசிலர் சேர்ந்து மற்ற அரசியலைப் புறந்தள்ளி நல்ல பல பதிவுகளை அடையாளம்கண்டு தொகுக்க வழிசெய்யவேண்டும். இதை வெளிப்படையாக ஒரு கூட்டுப்பதிவாக செய்யலாம்... சில பிரிவுகளாக வகைப்படுத்தி தேர்ந்தெடுத்த வலைப்ப்பதிவர்களின் ஒப்புதலோடு ஒன்று சேர்த்தால் வலைப்பதிவு என்ற நுட்பத்தை அர்த்தப்படுத்தலாம்.

இது தொடர்பில் உங்களின் கருத்துகளையும், நண்பர்களின் கருத்துக்களையும் அறிய ஆவல்..