Tuesday, January 10, 2006

பில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே?



உலக கோடீஸ்வரரான, மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்படியே தமிழகமும் வந்தார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞரை சந்தித்தவர், தமிழக முதல்வரையும் சந்தித்தார். தமிழகப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கணிப்பொறி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்போவதாக, அறிக்கையும் வெளிவந்தது. கூடவே பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவில் கொட்டப்போகிறார். அதனால் ஆயிரக்கணக்கில் இங்கே வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற பேச்சு ஒருபுறம். பில்கேட்ஸின் அறக்கட்டளை மூலம் இங்கே மருத்துவ உதவிகளை மேம்படுத்த நிதியுதவி என்றும் சொல்லப்பட்டது.

‘‘என்னடா... இவ்வளவு அக்கறை என்று, திகைக்க வேண்டாம். தமிழக ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி என்பது, ஒருவித மோசடி. அதற்கு வியாபாரப் பின்னணிதான் உள்ளது’’ என்கிறார் தமிழில் கணிப்பொறி மென்பொருள்களை உருவாக்கியிருக்கும் இரா.துரைப்பாண்டியன்.

‘பனெஷியா’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் துரைப்பாண்டி, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை மனுவொன்றையும் அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.

‘‘சமீபத்தில் பில்கேட்ஸ் வந்தபோது, தமிழக ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டரில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி என்றார். நமது அரசு அதற்கு சம்மதிக்கக்கூடாது. பில்கேட்ஸின் நோக்கம் வியாபாரத்தன்மை கொண்டது. எப்படி கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்திற்காக உள்ளே நுழைந்து அப்போதைய மன்னர்களுக்குச் சலுகைகளை வாரிக்கொடுத்து பின்னாளில் இந்தியாவையே அடிமைப்படுத்திக் கொண்டார்களோ அதே வழிமுறைதான் இதுவும்.

தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதற்கும் சேர்த்தே கூறலாம். அடுத்த தலைமுறையினர் எப்படியும் கம்ப்யூட்டருக்குள்தான் வந்தாக வேண்டும். ஏதாவது ஓர் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இப்போதே தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவச பயிற்சி என்று கொடுத்தால், அவர்கள் பில்கேட்ஸின் ‘மைக்ரோ சாஃப்ட்டின்’ மென்பொருளைத்தான் பழகமுடியும். அதைத்தான் எதிர்கால மாணவர்களுக்குச் சொல்லித் தரமுடியும். மற்றது எதையும் படிக்காததால் அதைப்பற்றி சொல்லித் தரமுடியாது. கடிவாளம் போட்ட குதிரை மாதிரி மைக்ரோ சாஃப்ட்டின் மென்பொருள் பற்றியே பாடம் நடத்துவார்கள்.

இந்தத் தலைமுறையின் பல்லாயிரம் ஆசிரியர்கள் அப்படி பயிற்சி எடுத்தால், அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் வேறுவழியின்றி அந்த சாஃப்ட்வேருக்கே பழக்கப்பட்டுப் போவார்கள்.

இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆதிவாசி மக்களிடம் சென்று, இலவச மருத்துவ முகாம், உதவி என்று ஓராண்டுக்கு நடத்துவார்கள். அலோபதி மருந்து மாத்திரைகளுக்குப் பழக்கப்படுத்துவார்கள். அந்த மக்களின் சொந்த வைத்தியம் அடிபட்டு மறைந்து போகும். ஒரு காலகட்டத்தில் இலவச சேவையை நிறுத்திக்கொள்வார்கள். பிறகு...? டாக்டர், மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று எல்லாவற்றையும் அவர்கள் பணம் கொடுத்தே வாங்கவேண்டும். அதுபோலத்தான் இது.

தமிழக ஆசிரியர்களுக்கு, பில்கேட்ஸ் கொடுக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி என்பதும் இந்த நோக்கம்தான். எதிர்காலத்தில் நாம் அனைவரும் அவரது சாஃப்ட்வேர் கம்பெனிக்குக் கட்டுப்பட்டுதான் கிடக்கவேண்டும். அதுவும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அடிமையாக. அதை இப்போதே தவிர்க்கவேண்டும். நாமே சொந்தக் காலில் நிற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் நாங்கள் கூறுகின்றோம். வியாபார நோக்கிலான சுயநலத்திற்கு நாட்டை அடகு வைக்கக்கூடாது’’ என்கிறோம்.

இதிலென்ன அடகு வைக்கும் தன்மை?

‘‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது. எந்த அமைச்சர் இருந்தாலும் அதுதான் நடக்கும். அந்த வளர்ச்சிக்கேற்ற மாறுதலும் இருக்கிறது. அடுத்த தலைமுறை டி.வி.யில் படம் பார்க்காது. கம்ப்யூட்டரிலேயே பார்க்கும்.

அந்த நிலையை பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ‘இணையத் தொலைக்காட்சி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உலகெங்கும் புகுத்த இருக்கிறது. இது செயல்படவேண்டும் என்றால், அகன்ற அலைவரிசை இணையத் தொடர்பு வேண்டும். அதையும் மத்தியஅமைச்சர் தொடங்கி வைத்துவிட்டார். எதிர்கால டி.வி. சந்தை முழுவதும் கம்ப்யூட்டருக்கு மாறும். பெரிய... வியாபாரம்.

இங்கே உள்ள பல தொலைக்காட்சிகளும் ‘இணையத் தொலைக்காட்சிக்கு மாறியாகவேண்டும். அதற்காக இந்திய மன்னர்களுக்கு சலுகையைக் கொடுத்துவிட்டு, கிழக்கிந்திய கம்பெனி கால்பதித்ததைப்போல், பதித்துக் கொள்ளலாம்.

அதை மூடி மறைத்து, ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி, இலவச மருத்துவ உதவி என்று வேடம் போடுகிறார்கள். சோமாலியா, எத்தியோப்பியா, ஆப்ரிக்க நாடுகளில் எல்லாம் மனித சமுதாயம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அங்கே போய் உதவிசெய்ய வேண்டியதுதானே... செய்யமாட்டார்கள். காரணம், அங்கே இவர்களுக்கு வியாபாரம் ஆகாது. இதுமட்டுமல்ல... நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.’

நீங்களும் உங்கள் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மென்பொருள்களை வடிவமைத்து உள்ளீர்கள்... அவை எப்படி வேறுபடுகின்றன?

‘‘நாங்கள் தயாரித்த சுமார் பதினான்கு சாஃப்ட்வேர்களை தமிழக அரசுக்கு இலவசமாகவே கொடுக்க இருக்கிறோம். தமிழக முதல்வருக்கும் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஜெயக்குமாருக்கும் கோரிக்கையை அனுப்பி இருக்கின்றோம். பரிசீலனையில் உள்ளது.

ஏற்கெனவே தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சித் துறையில் நாங்கள் அளித்த சாஃப்ட்வேர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். முழுக்க முழுக்க தேச நலன் கருதி இலவசமாக வழங்கியதுதான். அதற்கு முன்பு வேறு தனியார் நிறுவன சாஃப்ட்வேர்களை தமிழ் வளர்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அந்த நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் பணத்தைக் கட்டி புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற கண்டிஷனுடன்!

இப்போது நாங்கள் கொடுத்த சாப்ட்வேர் அப்படி அல்ல. சோர்ஸ் கோடு உள்ளிட்ட எல்லாம் முழுக்க இலவசம்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் என்பவை சாப்பிடும் ‘கேக்’ மாதிரி. சுட்டுத் தருகிறார்கள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள (பயன்படுத்திக்கொள்ள) வேண்டும். முடிந்தபிறகு சாப்பிடவேண்டுமானால் மீண்டும் ஒரு கேக்கை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால் எங்களின் சாஃப்ட்வேரில். அந்த ‘கேக்’கை தயாரிக்க என்னென்ன தேவை. எப்படிக் கலக்கலாம், எந்த விதத்தில் எப்படிப்பட்ட பக்குவத்தில் ‘கேக்’கை சுட்டெடுக்கலாம் என்ற வழிமுறைகளும் உண்டு.

தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்கெனவே அவர்கள் பணம் கொடுத்து வாங்கியதை நிறுத்தியதில் பல லட்ச ரூபாய் அரசுக்கு லாபம் ஒருபுறம் என்பதோடு, நமது சாஃப்ட்வேர் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். அப்படியே மற்ற எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களுக்கு இந்த சாஃப்ட்வேரில் பயிற்சி தரவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ ஆயிரக்கணக்கான ஊழியர்களால் தயாரிக்கப்படுவது. நாங்கள் வழங்க உள்ள சாஃப்ட்வேர் அப்படி அல்ல. அதனால் ஒரு சில சிறிய குறைபாடு, வித்தியாசம் இருக்கலாம்.

மத்தியஅரசுக்குச் சொந்தமான ‘சீ_டாக்’ நிறுவனம் எதற்கு உள்ளது? மதிநுட்பமான, வியக்கும்படியான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் எல்லோரும் அதில் உள்ளார்களே... முன்பு ‘சூப்பர் கம்ப்யூட்டர்_2000’த்தை இந்தியாவிற்குத் தர தடை விதித்திருந்தது அமெரிக்கா. அப்போது ‘சீ_டாக்’ விஞ்ஞானிகளே முயற்சித்து அமெரிக்கா தரமறுத்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட, பல மடங்கு சிறப்பு வாய்ந்த ‘பரம் _ 2000’ என்ற கம்ப்யூட்டரை கண்டுபிடித்தார்கள்.

அந்தத் திறமையெல்லாம் எங்கே போனது. முடக்கி வைத்தது யார்? அவர்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ கம்பெனிக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஏன்? நிறையக் கேள்வி உள்ளது. நாங்கள் வழங்கிய சாஃப்ட்வேர்களில் சில சிறிய குறைபாடுகள் இருந்தால் அதை மத்தியஅரசின் ‘சீ_டாக்’ விஞ்ஞானிகள் மெருகேற்றி நாட்டிற்கு பயன்படுத்தலாமே.

அதன் முதல் முயற்சிதான் தமிழக முதல்வரையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜெயக்குமாரையும் அணுகியுள்ளோம். இது ‘வியாபார’ ரீதியில் செய்யப்படும் விஷயமல்ல. பதினான்கு சாஃப்ட்வேர்களை கொடுப்பதோடு நாங்கள் விலகிக்கொள்வோம்!’’ என்றார் துரைப்பாண்டி.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

2 comments:

Santhosh said...

நீங்க சொல்வது சரியான கருத்து தான். ஆனா நம்ம மக்கள் தான் அல்வா குடுப்பதில் வல்லவர்கள். அவனுங்க கிட்ட கத்துட்டு அவனுங்களுக்கு அல்வா குடுபோம்.நம்ம என்ன தான் கத்துனாலும் ஒண்ணும் நடக்க போவதில்லை. இருங்க என்ன தான் நடக்குதுன்னு பாக்கலாம்.

rv said...

அதீதமாய் கவலைப்படுகிறார் கட்டுரை ஆசிரியர். மேலும் கார்னெஜி, ஹேர்ஸ்ட், ராகஃபெல்லர் தொடங்கி எல்லா பெரும்பணக்காரர்களும் அளிக்கும் சாரிட்டியில் கொஞ்சம் சுயநலமும் கலந்திருக்கும். எத்தியோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியெல்லாம் கேட்கமுடியாது. அது அவருடைய பணம். அவர் விரும்பும் இடத்தில் முதலீடு/தர்மம் செய்யலாம். இந்தியரான லஷ்மி மிட்டல் இந்தியாவில் எத்தனை சாரிட்டி வைத்துள்ளார் என்ற கேள்வியும் கேட்கலாமே?

எனக்கென்னவோ, பலருக்கு கணினி திறமை வளர்வது நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விட முக்கியமானது. OpenSource காரர்கள் MS மீது வெறுப்பை உமிழ்வது வழக்கமான ஒன்றுதானே.