படிச்ச நாயே கிட்ட வராதா.. ? இது சத்தியமா நான் சொன்னது இல்லங்க. புதுப்பேட்டை படத்தில், எங்க ஏரியா உள்ள வராதா என்ற பாடலில் வரும் ஒரு (மகா மட்டமான) வரி. வாழ்வின் அடிநிலையில் இருக்கும் யாரோ ஒருவனின் வலியைக் காட்டுவதாக பாடல் அமைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்வின் அடிநிலையில் இருக்கும் ஒருவனின் மனதைக் காட்டும் பாடல்கள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த பாடல்களில் ஏராளமாக உள்ளன.
உலகத்தின் தூக்கம் கலையாதோ? உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ? என்று ஒரு ஏழை மீனவனின் கதறலைப் படகோடியில் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே, நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம், நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே. முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர், உழைப்பதனாலே, கடமைகளைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே? என்று இதுபோல ஆயிரக்கணக்கான பாடல்கள் நாம் உதாரணமாகக் காட்டலாம். இது எதிலும் இவ்வளவு கீழ்த்தரமாக இப்படிப்பட்ட ஒரு சொல்லாடல் இல்லை. ஆனால் இப்போதய நிலமை "படிச்ச நாயே கிட்ட வராதா.. ?" என்ன ஒரு நாராசமான வரி. இது என்று மாறும் என்று தெரிய வில்லை ?
உலகத்தில் இந்தியா தனது படித்த மக்களின் அறிவுப் புரட்சியைக் கொண்டு பீடு நடை போட்டு வரும் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சாக்கடைச் சிந்தனை நல்லதற்கு உரியதல்ல.
இன்று உலகத்தில் காணப்படும் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரே தீர்வு கல்வி மட்டுமே. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று சொல்லுகிறோம்.
இது அனைத்திற்கும் ஒரே தீர்வாக நான் நினைத்துக் கொண்டிருப்பது கல்வியே. நான் மட்டுமல்ல. ஐயன் வள்ள்ளுவனும் கூட. தனது கல்லாமை என்ற அதிகாரத்தில்,
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும் என்று கூறியுள்ளார்.
சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள், சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள், கீழ்நிலைப்பட்ட பெண்கள் என சமூகத்தில் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி அவர்கள் கல்வி பெற்று முன்னேறுவதே. சரி, இதற்கு உதாரணம் உண்டோ.. இருக்கிறது. நான் சொல்ல வருவது இதுதான்.
திரு. பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற தொடரில் சிலபகுதிகள்,
அறிவுப்புரட்சி
பின்னாளில் தமது சரித்திரமெங்கும் அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள் என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர்.
ஸகாயின் யோசனை என்னவென்றால், ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது.
கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையின் வேதவாக்கியத்திற்கு உதாரணமாய், கடன்வாங்கி, மெழுகாய் உருகி தங்கள் மகன்களின் படிப்பிற்காக வாழும் தகப்பனைப் பற்றி தவமாய் தவமிருந்து படத்தில் காட்டியுள்ளபடி உங்களால் உயர்நோக்கோடு படமெடுக்கவிட்டாலும், நான் படிக்க நினைச்சதெல்லாம், நீ படிக்கோனும் என்று தகப்பனின் கனவைச் சொல்லும் படி உயர்தரமாகப் பாடல் எழுதத் தெரியாவிட்டாலும், படிச்ச நாயே கிட்ட வராதா என்று பாட்டெலுதாமல் இருக்கவும். எனவே பாடலாசிரியர்கள் தயவுசெய்து இனிமேல் இப்படிப்பட்ட விசத்தை, கடினமான வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுகிறேன். படத்திலிருந்து , பாட்டிலிருந்து இந்த வரியை நீக்க வேண்டுகிறேன். வலைப்பதிவர்கள் எல்லோரும் தங்களின் எதிர்ப்பைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிளர்ச்சியை நிறுத்துவோம். அறிவுப்புரட்சியை ஆரம்பிப்போம்.
Tuesday, December 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆரம்பிச்சுட்டாங்கய்யா..ஆரம்பிச்சுட்டாங்க..ஏங்க, பாட்டு, சினிமா எல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டு வழக்கு அது இதுன்னு உணர்ச்சிவசபடுறீங்க..அந்த பாட்டை எழுதினவரு, படம் புடிச்சவரு, இசையமைச்சவரு..அவங்க அவங்களையே திட்டிவாங்களா என்ன? வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் தான் சங்கம் வைத்திருக்கிறார்கள்..வழக்கு போடுகிறார்கள்..படித்தவர்களுக்கு சங்கம் வைத்திருக்கிறார்களா என்ன? இருந்தால் வழக்கு போட முயற்சி செய்யுங்கள்..நீதிபதி தன் விதியை நொந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்வார்..கதையில் வரும் பாத்திரத்தில் இருந்து பாடல்கள், வசனங்களை பாருங்கள்..இந்த மாதிரி வசனத்தை நீங்கள் ஒரு மூன்றாம் தர ஆட்டோ ஒட்டுனரிடமிருந்து எத்தனையோ முறை கேட்டிருக்கலாம்..அதற்கெல்லாம் வலைப்பதிவு போட்டீர்களா என்ன..வாழ்க்கையில் அவர்கள் பேசுவதைத் தான் பாடலாக்கியிருக்கிறார்கள்..இது மாதிரி பலப் பதிவுகளில் பின்னூட்டமிட்டு இட்டு bore அடித்து விட்டது..
Post a Comment