Friday, July 01, 2005

என் திறமூல ஆதரவுக் காரணம்

நான் ஏன் திறமூலம், தளையறு மென்பொருள்களுக்கு ஆதரவு தர்ரேன்னு தெரியுமா? இதில நான் சொல்றதுக்குப் புதுசா ஒண்ணும் இல்ல? வெங்கட் ஏற்கனவே 4 1/2 வருசத்துக்குமுன்னாடி இருந்துட்டே சொல்லீடு வர்றாரு. என்னோட நிலைப்பாடும் அதேதான்..(நன்றி திண்ணை மற்றும் வெங்கட்)

இன்றைக்குப் பிழைப்பிற்காக பல ஆயிரக்கணக்கான் மைல்கள், கடல் கடந்து வாழும் நம் எல்லோரையும் ஒன்றிணைக்க சில வழிகள்தான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று நம் தாய்மொழியில் கணினி (மற்றும் அறிவியல்) முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது

1. நான் தமிழகத்தில் தொடக்கக் கல்வி கற்றேன். என்னுடைய படிப்புக்கு அரசாங்கம் (அதாவது நம் சமூகம்) எவ்வளவு உதவியது என்பதை நான் இப்பொழுது உணர்கின்றேன். என்னாலான வகையில் மறுநன்றியாக என் சமூகத்திற்குச் சிறிய உதவி இது.

2. நான் தமிழை நேசிக்கிறேன், அது ஒரு நல்லமொழி என்று எண்ணுகின்றேன். உலகின் பழம்பெரும் மொழியான அதனால் இன்றைய தகவல் புரட்சியையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்த வகையில் இது.

3. உலகின் மற்ற நாடுகளையும் சமூகங்களையும்விட எந்த வகையிலும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை நாம்; எனினும் நம் சமூகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. இது மாறவேண்டுமென நான் விரும்புகின்றேன். வெறும் சொற்களால் புலம்புவதைவிட யாருடைய தடைகளும் இன்றி என்னாலான சிறிய பங்களிப்பு இது.

4. லினக்ஸ் ஒரு சக்திவாய்ந்த இயக்குதளம் இதற்குப் பங்களிப்பதாகத் தொடங்கினால் விரைவில் இதன்மூலம் கணினி நுட்பத்தின் பலகூறுகளை நான் கற்க முடியும். ஆணைமூலங்கள் திறந்தனவாகக் கிடைப்பதால் என்னால் ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண முடியும். என்னுடைய அறிவு வளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இதனால் என்னுடைய வேலைவாய்ப்புச் சாத்தியங்களும் அதிகரிக்கின்றன.

5. இவ்வாறு தொடங்கிய நான் இதிலுள்ள பல குறைகளைக் கண்டிருக்கின்றேன்; இதற்கு யார்வேண்டுமானாலும் நல்ல தீர்வை முன்வைக்க முடியும் என்பதால் என்னுடைய தீர்வைக் கூறினேன். பலராலும் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைக்கு என் சிந்தனையில் உருவான ஒரு சிறிய கருத்து உலகெங்கிலும் உள்ள லினக்ஸ் பயனர்களின் வேலையை எளிதாக்குவதை அறிகின்றேன். இது எனக்கு அளவிட முடியாத மனநிறைவைத் தருகின்றது.

6. எனக்கு கணினிகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது, எனினும் நான் விபரம் தெரிந்தவர்கள் வேறு மொழியில் எழுதிய உதவிக் கட்டுரைகளை என்னுடைய மொழியில் மாற்றினேன். இப்பொழுது இது என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கின்றது.

7. சிந்தனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிந்தனையில் உதித்த எண்ணங்களுக்கு ஏன் விலை. அடிப்படை கணக்கு/அறிவியல் விதிகளைக் கண்டுபிடித்தவர்கள் அதைப் பிறர் பயன்படுத்த விலை விதித்திருந்தால் இன்றைக்கு நம் அறிவு இந்த அளவிற்கு மேம்பட்டிருக்குமா? நான் எனக்கு முந்தைய பல அறிஞர்களின் தோள்களில் நின்றுகொண்டிருக்கின்றேன் - என்னுடைய தோளையும் பிறர் ஏறிநிற்க வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.இப்படி பலப்பல.

மேலும் மேலாதிக்க விபரங்களுக்கு பார்க, மறுபடியும் நன்றி திண்ணை மற்றும் வெங்கட்) முதலில் இதைப் படியுங்கள்.
எங்க நாட்டிற்கு அதன் எதிர்கால வளத்திற்குப் பாடுபட எதோ என்க்கு தெரிந்த வழி இந்த திறமூலம்தான்.

நான் எப்பவும் Classக்காக சிந்திக்க மாட்டேன். Massக்காகவே சிந்திப்பேன்.

நான் எப்பவும் வாஜ்பாயி மற்றும் சந்திரபாபு செய்த தப்பைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். இந்தியா கணிணித் துறையில் வளருகிறது, ஆனால் அந்த வளர்ச்சியின் பயனை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கிறோமா? உலகம் கணிணி மயமாகிறது. கணிணி ஆடம்பரப் பொருளல்ல அது ஒரு அத்யாவசியமான சாதனமாக மாறி விட்டது. சாதரண மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிப்பவரே அதிகளவு உள்ளனர். அவர்களுக்கு கணிணியின் பயனை எப்படிக் கொண்டு சேர்ப்பது? யார் கொண்டு சேர்ப்பது? நாம் போதாது என்று கழித்துப் போடும் 386,486 கணிணியில் திறமூல லினக்ஸ் போன்றவைகள்தான் சிறந்த தீர்வு. திறமூலம்தான் Horses for the Courses.

திருட்டு மென்பொருள் பயனர்களுக்கு மாற்று திறமூல மென்பொருட்கள்

இந்தியாவில் 70%, முன்னேறிய அமெரிக்காவில் கூட 25% இது திருட்டு மென்பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்துபவர்களின் சதவீதம். ஆக காசு கொடுத்து மென்பொருள்கள் வாங்குபவர்கள் இந்தியாவில் மொத்தம் 30%ம்தான்.நீங்கள் இந்த 70%ல் இருந்தால் முதலில் அதை திருத்திக்கொண்டு வாருங்கள். பிறகு பேசுங்கள். உங்கள் வீட்டுக்கணிணி,மடிக்கணிணியில் பயன்படுத்தும் விண்டோஸ், ஆபிஸ், நார்ட்டன் முதலியன எல்லாவற்றீர்க்கும் நீங்கள் கொடுத்த விலையைச் சொல்லுங்கள். பிறகு எங்களைக் குற்றம் சொல்லுங்கள். நாங்கள் 70% திருட்டுத்தனமாக திருட்டு மென்பொருள் பயன்படுத்துபவர்களிடம் மானத்தோடு விடுதலை உணர்வோடு திறமூல மென்பொருள் பயன்படுத்தச் சொல்வதா அரைவேக்காட்டுத்தனம்..?

முடிவாக,

நான் எனது 1 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு ஒரே ஒரு தனிநிறுவனத்துக்கு அடிமையாகமல் தன்னிரைவு அடையப் பாடுபடுவர்களுக்காக அணிலாகப் பாடுபடவேன். அதற்கு நான் இப்பொழுது ஏற்றதாகக் கருதுவது திற்மூலம். அதைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு மாற்று உங்களால் கூற முடியுமா? இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

No comments: