Saturday, December 31, 2005

புத்தாண்டு வாழ்த்துக்களும், பிராத்தனைகளும்

தமிழ்வலைப்பதிவர்கள் , வாசகர்கள்(?) அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் இதயத்திலும் அமைதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் உண்டாக்க வேண்டுமென்று இறைவனை வேண்டுகிறேன்.இந்தப் புத்தாண்டில் நமது ஒவ்வொருவரின் பிராத்தனை

ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு,
எங்கே வெறுப்பு இருக்கின்றதோ அங்கே நாங்கள் அன்பை விதைக்க அருள் செய்
எங்கே காயம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் மன்னிப்பை வழங்கஅருள் செய்
எங்கே சந்தேகம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் விசுவாசம் போதிக்க அருள் செய்
எங்கே நம்பிக்கையின்மை இருக்கின்றதோ அங்கே நாங்கள் நம்பிக்கையைப் போதிக்க அருள் செய்
எங்கே இருள் இருக்கின்றதோ அங்கே நாங்கள் வெளிச்சம் உண்டாக்க அருள் செய்
எங்கே துன்பம் இருக்கின்றதோ அங்கே நாங்கள் மகிழ்வை உண்டாக்கஅருள் செய்

ஆண்டவரே, எங்களை உமது அமைதிக்கான கருவியாக்கு.

Thursday, December 29, 2005

நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?

ஜோதிடத்தில் அணுவளவும் நம்பிக்கையே இல்லாதவன் நான். எனது நண்பர் ஒருவர் இந்தவார குமுதம் ஜோதிடம் இதழில் இருந்து நான் படிக்குமாறு சிபாரிசு செய்தது, "நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா? என்ற தலைப்பில் திரு.ஏ.ம்.ஆர் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை. நீங்களும் படித்துப் பாருங்கள். பொதுவாக நாம் எல்லோருக்கும் நம் வாழ்வின் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்தக் கேள்வியை நமக்குள் நாமே கேட்டுக் கொண்டிருப்போம்,"நல்லவர் கெடுவதும், தீயவர் வாழ்வதும் உண்மையா?". இதற்குப் பதிலை அவருடைய கோணத்தில் சொல்லியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் நல்லவர்களுக்குத் துன்பமும், தீயவர்களுக்கு இன்பமும்?
நான் பலமுறை கூறிவருவது போல் எனக்குத் தினமும் ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொருவித வேதனை, ஒவ்வொருவித துன்பம் என்று பல தருணங்களில் நெஞ்சைப் பிழியும் அளவிற்கு வேதனையை அளிக்கின்றன.

இவ்விதம் துன்பப்படுவோரில் பலரும் மிகுந்த தெய்வபக்தி மிகுந்தவர்கள். நன்னடத்தை உடையவர்கள். அவர்கள் அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி, ‘‘நல்லவர்களாக வாழ்ந்தும் எங்களுக்கேன் இந்த அளவிற்குத் துன்பங்கள்? ஒழுக்கம் கெட்டவர்கள், தெய்வத்தை நிந்திப்பவர்கள், நெஞ்சில் சிறிதளவும் ஈரமில்லாது தங்கள் செல்வாக்கினால் பல நல்ல குடும்பங்களைச் சீரழித்தவர்கள், திருக்கோயில் சொத்துகளை அபகரித்துக்கொண்டவர்கள், பல திருக்கோயில்கள் நாசமடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று செல்வச் செழிப்புடன் மகிழ்வோடு இருக்கிறார்களே? இது எவ்விதத்தில் நியாயமாகும்?’’ என்று கேட்டு எழுதி வருகிறார்கள்.

தொடர்ந்து வரும் துன்பங்களினால் மனம் தளர்ந்த நிலையில் இவர்கள் கேட்டிருப்பது நியாயமே ஆகும்! அதுவும் தற்காலச் சூழ்நிலையில் குடும்பமே தனது கோயில் என்று வாழும் உத்தமிகள், மாற்றுப் புடவைக்குக்கூட வசதியில்லாமல் வறுமையில் வாடும்போது; கற்பை விற்று, செல்வத்தில் திளைக்கும் ஒழுக்கம்கெட்ட பெண்கள், ஆடம்பரக் கார்களில் உல்லாசமாக வலம் வருவதும் அவர்களுக்குச் சமூகம் மதிப்பளிப்பதையும் பார்க்கும்போது நேர்மையாக வாழ்ந்தும் துன்பப்படுபவர்களுக்கு மனஉறுதி தளர்கிறது.

பாடுபட்டுப் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் வாங்கினாலும் எத்தகைய திறமையிருந்தாலும் அத்தகைய இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று சாதாரண அளவில்கூட திறமையில்லாதவர்களுக்கு அரசியல் செல்வாக்கிருந்தால் அவர்களுக்கு மிகச் சுலபமாக வேலை கிடைப்பது மட்டுமல்ல, வேலை கிடைத்த பிறகு, பதவி உயர்வுகளும் மிக எளிதில் கிடைத்துவிடுவதை இன்று கண்கூடாகப் பார்த்துவருகிறோம்.

லஞ்சம் கொடுத்தால்தான் எந்தக் காரியமும் நடக்கும் என்ற நிலையை மக்களும் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டு விட்டார்கள். நமக்குச் சிறிதளவாகினும் நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினால் அவர்கள் மக்கள் பிரச்சினைகள் பற்றிச் சிறிதளவுகூட கவலைப்படாமல் வேறு ஏதேதோ விஷயங்களைப் பற்றிக் கேள்விகள் கேட்பதற்கு லஞ்சம் வாங்கிவிட்டு ‘‘இது லஞ்சம் அல்ல, அன்பளிப்பே அகும்!’’ என்று சிறிதளவும் வெட்கமின்றி மனசாட்சியையும் புறக்கணித்துவிட்டு, சமூகத்தில் கௌரவத்துடன் உலவி வருகிறார்கள்.

ஏதாவது ஒரு விதத்தில் ஒரு கட்சியினிடமோ அல்லது கட்சித் தலைவரிடமோ அல்லது கட்சிப் பிரமுகர்களிடமோ தொடர்பும், செல்வாக்கும் இருந்தாலொழிய, நமது காரியம் எதையும் சாதித்துக்கொள்ள முடியாது என்ற நிலை இன்றிருப்பதை எவரும் மறுக்கமுடியாது.

அன்னிய நாடுகள் அனைத்திலும் தேசிய கட்சிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மட்டும்தான் மாநிலக் கட்சிகள் உள்ளன. இவற்றை மத்திய அரசு அனுமதித்ததால் இன்று மக்கள் தமிழர்கள் என்றும், கன்னடியர்கள் என்றும், மலையாளிகள் என்றும் மராட்டியர்கள் என்றும் வேறுபட்டு நிற்கின்றனர். நமது நாடு, அனைவரும் இந்நாட்டு மக்கள் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளும் மக்களை பிளவுபடுத்தியே வருகின்றன.

ஆதலால், சிறிது சிறிதாக மக்களுக்குத் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிட்டு வருகிறது. இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் நாம் ஏன் பாடுபட்டுப் படிக்கவேண்டும். இரவும், பகலும் கண் விழித்துப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றாலும் நமக்கெங்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்று மனம் கலங்கி நிற்கிறார்கள். பணக்காரன் மேலும் மேலும் செல்வந்தனாகிறான். ஏழை ஏழையாகவே கண்ணீர் வடித்து நிற்கிறான்.

தெய்வத்திடம் பயம் போய்விட்டது. தர்மத்தில் நம்பிக்கையில்லை. இவ்விதம் இருப்பவர்கள் பல வழிகளிலும் பணத்தைக் குவித்து வைத்துக்கொண்டு செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கும்போது, தொடர்ந்து துன்பப்பட்டுவரும் நல்லவர்களுக்குத் தெய்வ நம்பிக்கை குறைந்துவிடுகின்றது. பாவம் செய்கிறவர்கள் கஷ்டமா படுகிறார்கள் என்ற கேள்வி தலைதூக்குகிறது.

தர்மம் உறங்குவதில்லை!

உண்மை என்னவென்றால் பாவச் செய்கைகளினாலும், அரசியல் செல்வாக்கினாலும், தங்கள் சாமர்த்தியத்தினாலும் செல்வம் சேர்ப்பவர்கள் வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றினாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு விநாடியும், அவர்கள் நிம்மதியின்றித் தூக்கமும் வராமல், சிறிது ஓசை கேட்டால்கூட, ‘‘ஐயோ, யார் வந்துவிட்டார்களோ!’’ என்று பயந்து, நடுங்கியபடி உறுத்தும் மனசாட்சியுடன் இரவைக் கழிப்பது சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை.

பாவத்தைக் கட்டிக்கொண்டு படுப்பவர்களுக்குத் தூக்கம் எப்படி வரும்? பாவம் எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறது. அது எந்தத் தருணத்திலும் பக்கத்தில் படுத்துறங்கும் தவறு செய்பவர்களை விழுங்கிவிடும். அது பசியோடிருக்கும் புலியைப் போன்றது.

தாங்கள் என்றுமே இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப்போவதாகவும், தங்களை எவராலும் எதுவும் செய்யமுடியாது என்றும் இறுமாந்திருப்பவர்களைத் தர்மம் என்ற சட்டம் உரிய காலத்தில் கவனித்துக்கொள்ளும். தர்மத்தின்படி வாழ்பவரை அந்த தர்மமே ஒவ்வொரு விநாடியும் காப்பாற்றும். நேர்மையாக வாழ்பவர்களுக்கு துன்பம் நிரந்தரமாக இருக்காது. இது மகரிஷிகளின் வாக்கு. உபநிஷத்துகளும் இதனை உறுதி செய்கின்றன.

இத்தருணத்தில் சென்ற மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் செழிப்புமிக்க சிற்றூர் நன்னிலம். அதற்கு அருகிலுள்ள மிகப் புராதனமான திருக்கோயில் ஒன்றிற்கு நான் சென்றிருந்தேன். மிகப் பழைமையான அழகான திருக்கோயில் அது. ஆகம, சிற்ப, வேத விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதன் அன்றைய நிலையைக் கண்டவுடன் மனம் துடித்து, கண்கலங்கி நின்றேன். பிரதான மண்டபத்தில் இருந்த மிகப் பெரிய ரிஷப வாகனத்தைப் பார்த்தபோது மனம் கலங்கி, கற்சிலை போல் செயலற்று நின்றேன். என்னையுமறியாமல் என் கண்களில் கண்ணீர் பீறிட்டு வந்தது. இத்தகைய ரிஷப வாகனம் இருந்ததால் ஒரு காலத்தில் பல பிரம்மோற்சவங்களைக் கண்ட திருக்கோயிலாகத்தான் இது இருந்திருக்கவேண்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது.

அம்பிகையின் எண்ணெய் தோய்ந்த புடவையும், ஓட்டைகள் நிறைந்திருந்த வஸ்திரத்துடன் இருந்த சிவலிங்கத்தையும் கலங்கிய இதயத்துடன் தரிசித்துவிட்டு வெளியே வந்தேன். அத்திருக்கோயிலின் காவலாளி _ வயோதிகர் _ வறுமைக்கு உறைவிடம் என்பதை அவர் அணிந்திருந்த வேஷ்டி பறைசாற்றியது. அப்போது மதியம் மணி சுமார் 12 இருக்கும்.

அவரது வீட்டிலிருந்து சாதமும், மோரும், சிறிது ஊறுகாயும் கொண்டு வந்திருந்தார் அம்முதியவரின் மனைவி. அதனை வாங்கி ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு ஆவலுடன் பசியாற சாப்பிட்டு, தண்ணீரும் அருந்திவிட்டு மகிழ்ச்சியாகப் பேசினார் எங்களுடன்.

அவர் மனைவி கொண்டு வந்திருந்த சாதாரண மோர் சாதத்தை அந்த முதியவர் அனுபவித்துச் சாப்பிட்டதை நான் பார்த்தபோது, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் ஒரு கோடீஸ்வரரின் நினைவு எனக்கு வந்தது. பல தவறான வழிகளில் அவர் பணம் சேர்த்திருப்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சமூகத்தில் அவருக்கு மரியாதை உண்டு. அந்த மரியாதை அவருக்கல்ல, அவரது செல்வத்திற்காகவே! மருத்துவ அறிவுரைப்படி அவர் இனிப்பு சாப்பிடக்கூடாது. உப்பு அதிகம் கூடாது என்று பலவித கட்டுப்பாடுகள். இரவில் தூக்கத்திற்கு ஒரு மாத்திரை. விழித்தபின் அவ்வப்போது ஏராளமான மாத்திரைகளும், மருந்துகளும்!

என் மனம் கேட்டது, யார் உண்மையிலேயே சுகப்படுகிறார் என்று! நன்னிலம் திருக்கோயிலில் நான் பார்த்த ஏழை வயோதிகரா அல்லது தமிழகத்தின் மிகப் பெரிய நகரத்தில் செல்வச் செழிப்பில் புரண்டு நிம்மதியற்று ஒவ்வொரு விநாடியையும் தள்ளும் இந்தச் செல்வந்தரா என்று. ஆதலால், பாவச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருப்பதாக நாம் நினைப்பது கற்பனையே!

ஆதலால்தான் தர்மம் கூறுகிறது, நல்லவர்கள் கெடுவதில்லை என்று. அதேபோன்று தீயவர்களும் வாழ்வதில்லை. இது நான்மறை தீர்ப்பு. ஆதலால் எத்தகைய சோதனையிலும் நாம் நேர்மையிலிருந்தும், ஒழுக்கத்திலிருந்தும் தவறக்கூடாது!

Tuesday, December 27, 2005

படிச்ச நாயே கிட்ட வராதா

படிச்ச நாயே கிட்ட வராதா.. ? இது சத்தியமா நான் சொன்னது இல்லங்க. புதுப்பேட்டை படத்தில், எங்க ஏரியா உள்ள வராதா என்ற பாடலில் வரும் ஒரு (மகா மட்டமான) வரி. வாழ்வின் அடிநிலையில் இருக்கும் யாரோ ஒருவனின் வலியைக் காட்டுவதாக பாடல் அமைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்வின் அடிநிலையில் இருக்கும் ஒருவனின் மனதைக் காட்டும் பாடல்கள் தமிழில் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினிகாந்த பாடல்களில் ஏராளமாக உள்ளன.

உலகத்தின் தூக்கம் கலையாதோ? உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ? என்று ஒரு ஏழை மீனவனின் கதறலைப் படகோடியில் எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே, நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம், நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே. முன்னேற்றம் என்பதெல்லாம் உழைப்பவர், உழைப்பதனாலே, கடமைகளைப் புரிவதெல்லாம் விடுதலை வேண்டுவதாலே? என்று இதுபோல ஆயிரக்கணக்கான பாடல்கள் நாம் உதாரணமாகக் காட்டலாம். இது எதிலும் இவ்வளவு கீழ்த்தரமாக இப்படிப்பட்ட ஒரு சொல்லாடல் இல்லை. ஆனால் இப்போதய நிலமை "படிச்ச நாயே கிட்ட வராதா.. ?" என்ன ஒரு நாராசமான வரி. இது என்று மாறும் என்று தெரிய வில்லை ?

உலகத்தில் இந்தியா தனது படித்த மக்களின் அறிவுப் புரட்சியைக் கொண்டு பீடு நடை போட்டு வரும் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சாக்கடைச் சிந்தனை நல்லதற்கு உரியதல்ல.

இன்று உலகத்தில் காணப்படும் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒரே தீர்வு கல்வி மட்டுமே. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று சொல்லுகிறோம்.
இது அனைத்திற்கும் ஒரே தீர்வாக நான் நினைத்துக் கொண்டிருப்பது கல்வியே. நான் மட்டுமல்ல. ஐயன் வள்ள்ளுவனும் கூட. தனது கல்லாமை என்ற அதிகாரத்தில்,

மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும் என்று கூறியுள்ளார்.

சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள், சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள், கீழ்நிலைப்பட்ட பெண்கள் என சமூகத்தில் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி அவர்கள் கல்வி பெற்று முன்னேறுவதே. சரி, இதற்கு உதாரணம் உண்டோ.. இருக்கிறது. நான் சொல்ல வருவது இதுதான்.

திரு. பாரா அவர்களின் நிலமெல்லாம் இரத்தம் என்ற தொடரில் சிலபகுதிகள்,

அறிவுப்புரட்சி

பின்னாளில் தமது சரித்திரமெங்கும் அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள் என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர்.
ஸகாயின் யோசனை என்னவென்றால், ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது.

கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற ஒளவையின் வேதவாக்கியத்திற்கு உதாரணமாய், கடன்வாங்கி, மெழுகாய் உருகி தங்கள் மகன்களின் படிப்பிற்காக வாழும் தகப்பனைப் பற்றி தவமாய் தவமிருந்து படத்தில் காட்டியுள்ளபடி உங்களால் உயர்நோக்கோடு படமெடுக்கவிட்டாலும், நான் படிக்க நினைச்சதெல்லாம், நீ படிக்கோனும் என்று தகப்பனின் கனவைச் சொல்லும் படி உயர்தரமாகப் பாடல் எழுதத் தெரியாவிட்டாலும், படிச்ச நாயே கிட்ட வராதா என்று பாட்டெலுதாமல் இருக்கவும். எனவே பாடலாசிரியர்கள் தயவுசெய்து இனிமேல் இப்படிப்பட்ட விசத்தை, கடினமான வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுகிறேன். படத்திலிருந்து , பாட்டிலிருந்து இந்த வரியை நீக்க வேண்டுகிறேன். வலைப்பதிவர்கள் எல்லோரும் தங்களின் எதிர்ப்பைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிளர்ச்சியை நிறுத்துவோம். அறிவுப்புரட்சியை ஆரம்பிப்போம்.

Thursday, December 22, 2005

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - 3

தொடரின் இரண்டாம் பதிவில் கடவுள் மனித உருவத்தில் மாட்டுத் தொழுவத்தில் அவதரித்ததைப் பற்றி வேதாகமம் சொல்லியதைப் பார்த்தோம். வேதாகமத்தில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களில் இயேசுவின் வரலாறு பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது, நற்செய்தி நூல்களில் இயேசுவின் வாழ்க்கைவரலாறு, அவரது சீடர்கள் பற்றி, அவர் மனுமகனாக பூமிக்கு வந்த நோக்கம், அவரது போதனைகள், அவரின் சிலுவைச்சாவு, இறந்தபின் சாவை வென்று உயிர்த்து எழுந்தது என்பவைகள் மட்டுமே உள்ளது. அவ்வளவு ஏன் கிறிஸ்தவர்கள் என்ற சொல்பிரயோகம் கூட இயேசு வாழ்ந்த காலத்தில் இல்லை.

கிறிஸ்து பிறப்பு, உயிர்த்தெழுதல் பற்றி உள்ளது. ஆனால் அது பண்டிகைகளாகக் கொண்டாடப்படும் முறைகள் இல்லை. கிறிஸ்துமஸ், ஈஸ்டர், புனிதவெள்ளி என்ற சொற்கள் வேதகாமத்தில் இல்லை. கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவரது வாழ்வினைக்கூறும் நற்செய்தி நூல்களும், இயேசு இறப்பிற்குப் பின்னர் அவரது வழி வந்த சீடர்களால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு வேதகாமப் பகுதிகள் இல்லை.கிபி 367ல் புனித அதனசியஸ் என்பவரால் தொகுக்கப்பட்டு கிபி 397ல் அதிகார்வப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கீழ்க்கண்டவைகளைப் பற்றிய மேலும் புரிதலுக்கு அவசியம், என்பதால் நாம் சிறிது நேரம் வரலாற்று வகுப்பிற்குச் செல்வோம்.

கிறிஸ்தவ வரலாற்றில்
1. ஆதம் முதல் இயேசுவுக்குமுன் வரை உள்ள காலம்
2. இயேசுவின் காலம்
3. பீட்டர்(ராயப்பர்/பேதுரு) முதல் கான்ஸ்தாந்தின்முன்வரை உள்ள வேதகலாபனைக்காலம்
4. கான்ஸ்தாந்திற்குப்பின் உள்ள காலம் என்று நாம் நம் வசதிக்காகப் பிரித்துப் பார்ப்போம்.

1. ஆதம் முதல் இயேசுவுக்குமுன் வரை உள்ள காலம்

இதில் ஆதம் முதல் இயேசுவுக்குமுன் உள்ளவரை உள்ள காலத்தில் மோசேவழி கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின்படி மீட்பு யூதர்களுக்கு மட்டுமே உரியது என்ற பழைய உடன்படிக்கைக் காலம். இந்தக் காலத்தில் வாழ்ந்த மேன்மை பொருந்திய நம் மூதாதையர்கள் சிலரின் வரலாறு இதோ. இந்த வரலாறு புதிய ஏற்பாட்டு நூலில் ஸ்தோவான் என்பவரால் கூறப்பட்டுள்ள


இதில் ஆதம் கடவுளால் படைக்கப்பட்டார். ஏனோக்கு ஆண்டவருக்கு உகந்தவரானார்: அவரால் எடுத்துக் கொள்ளப்பட்டார்: எல்லாத் தலைமுறைகளுக்கும் மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.நோவா நிறைவுற்றவராககும் நீதிமானாகவும் திகழ்ந்தார்: சினத்தின் காலத்தில் பரிகாரம் செய்தார்: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோர், அவர் பொருட்டுச் சிலர் உலகில் விடப்பட்டார்கள். எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால் இனி அழியக்கூடாது என்பதற்கு என்றுமுள உடன்படிக்கைகள் அவருடன் செய்யப்பட்டன.


நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சி மிகு கடவுள் அவருக்கு தோன்றி " நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்திடமிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் என்று கூறினார்.அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக் காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார். அவருடைய தந்தை இறந்தபின்பு நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து இங்குக் குடிபெயரச் செய்தார்.இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.மேலும் அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அன்னியராய்க் குடியிருப்பர். நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன். அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள் என்றும் அவர் உரைத்துள்ளார்.பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை ஆபிரகாமுக்கு கொடுத்தார். அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்.

அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும் யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர்." பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர். ஆனால் கடவுள் அவரோடு இருந்தார்.அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும் அவர் அவரை விடுவித்தார் அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில் யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையம் வழங்கினார். அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும் தன் உடைமை அனைத்துக்கும் ஆளநராக நியமித்தார்.பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும் பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன. நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை.அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று.பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன அங்கு ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை விலையாக கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன.

ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான்.அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான்.அக்காலத்தில்தான் மோசே பிறந்தார். கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார்.பின்பு வெளியே எறியப்பட்ட அவரை பார்வோனின் மகள் தத்தெடுத்துத் தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார்.மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையம் பயின்று சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.அவருக்கு நாற்பது வயதானபோது தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச் சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு அவருக்குத் துணை நின்று ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார். ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு " நீங்கள் சகோதரர்கள் அல்லவா? ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? "என்று கூறி அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.ஆனால் தீங்கிழைத்தவன் " எங்களுக்கு உன்னைத் தலைவனாகவம் நடுவனாகவும் நியமித்தவர் யார்?நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்? என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி மிதியான் நாட்டுக்குச் சென்று அன்னியராக வாழ்ந்து வந்தார். அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர்.நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆண்டவரின் தூதர் சீனாய் மலைஅருகே உள்ள பாலைநிலத்தில் ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார்.மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார். அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது "உன்னுடைய மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் கடவுள் நானே " என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது. மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.கடவுள் அவரிடம் " உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு. ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்.எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன். அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன். உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன். இப்போதே வா என்றார்.முன்பு " உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவர் யார்? " என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள். ஆனால் முட்புதரில் தோன்றிய தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார். அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும் அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார்." கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச் சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார் என்று இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான்.பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும் நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே. வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே.ஆனால் நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர் எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர். அவர்கள் ஆரோனை நோக்கி எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. எங்களை வழி நடத்தும் தெய்வங்களை நீர் எங்களுக்க உருவாக்கிக் கொடும் " என்று கேட்டார்கள்.அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து அதற்குப் பலி செலுத்தினார்கள். தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.ஆகவே கடவுள் அவர்களிடமிருந்து விலகி வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார். இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில் " இஸ்ரயேல் வீட்டாரே பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில் பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ? நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும் உங்களை தெய்வமாகிய இரேப்பானுடைய விண்மீனையும் தூக்கிக் கொண்டு சென்றீர்கள். நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள். எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால் குடி பெயரச் செய்வேன் " என்று எழுதப்பட்டுள்ளது.பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது. கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி அதனை அமைக்கப்பணித்திருந்தார்.

பின்பு நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த வேற்றினத்தின் நாடுகளை யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது அவர்கள் தங்கள் தந்தையிடமிருந்து பெற்றிருந்த அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர்.

தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது.தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார். எனவே அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக் கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார்.


ஆனால் கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே. இதற்குப் பிறகு யூதா, இஸ்ரவேல் என்று இரண்டு பிரிவுகளானது.

இதற்குப் பிறகுதான் யூதர்களின் அழிவு தொடங்கியது. அது ?

Wednesday, December 21, 2005

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 2

கிறிஸ்துமஸ் என்பது மகனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்த அந்த நாளே ஆகும் என்று நாம் சென்ற பகுதியில் பார்த்தோம். கிறிஸ்து பிறப்பு பற்றியும், அவரது இளமைக்காலத்தைப் பற்றியும் பற்றி புனிதவேதகாமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பகுதி 1

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நான்குபேர் தம்தம் பெயரில் நற்செய்தி நூல்களாக எழுதியுள்ளனர். ஒரே வரலாற்றை ஏன் நான்கு பேர் எழுதியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் வேறுபட்ட பார்வையாளர்களுக்காகவும், வேறுபட்ட தேவைகளுக்காகவும் எழுதியுள்ளனர். உதாரணமாக மத்தேயு யூதர்களுக்காக இயேசு மெசியா என்று நிறுவுவதை மையமாகவும், மாற்கு உரோமையில் வாழும் பிற இனத்தவர்களுக்காக எளியநடையிலும், லூக்கா இயேசு பாவப்பட்ட மனிதர்கள் அனைவருக்காகவும் வந்தார் என்று நிறுவதற்காகவும், இயேசு கடவுளின் மகன் என்பதை மட்டும் நிறுபிக்கவும் கடைசியாக எழுதப்பட்டது.

இதில் இயேசுவின் பிறப்பு சம்பந்தப்பட்டவைகள் வரிசைக்கிரமமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. எந்த நற்செய்தி நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.

இயேசுவின் பிறப்பு - நற்செய்தி நூல்களின் படி

வாக்கு மனிதராதல் (யோவான் 1:1-15)
1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.
2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.
3 அனைத்தும் அவரால் உண்டாயின உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை.
4 அவிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.
5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை.

முன்னுரை (லூக்கா 1:1-4)
1 மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்.2 தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர்.3 அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு,4 அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

யோவான் பிறப்பைப் பற்றிய முன்னறிவித்தல் (லூக்கா 1:5-25)

5 யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சேர்ந்த செக்கரியா என்னும் பெயர் கொண்ட குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி ஆரோனின் வழி வந்தவர். அவர் பெயர் எலிசபெத்து.6 அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்பக் குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள்.7 அவர்களுக்குப் பிள்ளை இல்லை. ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும் அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.

8 தம்முடைய பிரிவின்முறை வந்தபோது, செக்கரியா கடவுளின் திருமுன் குருத்துவப் பணி ஆற்றி வந்தார்.9 குருத்துவப் பணி மரபுக்கு ஏற்ப, ஆண்டவின் திருக்கோவிலுக்குள் சென்று தூபம் காட்டுவது யாரென்று அறியச் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது அது செக்கரியா பெயருக்கு விழுந்தது.10 அவர் தூபம் காட்டுகிற வேளையில் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் வெளியே இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தனர்.11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் ஒருவர் தூப பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவாறு அவருக்குத் தோன்றினார்.12 அவரைக் கண்டு செக்கரியா அச்சமுற்றுக் கலங்கினார்.13 வானதூதர் அவரை நோக்கி , "செக்கரியா, அஞ்சாதீர், உமது மன்றாட்டு கேட்கப்பட்டது. உம் மனைவி எலிசபெத்து உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார் அவருக்கு யோவான் எனப் பெயரிடுவீர்.14 நீர் மகிழ்ந்து பேருவகை கொள்வீர். அவரது பிறப்பால் பலரும் மகிழ்ச்சியடைவர்.15 அவர் ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார். திராட்சை மதுவோ வேறு எந்த மதுவோ அருந்த மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.16 அவர், இஸரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார்.17 எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார். தந்தையாரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார். நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார். இவ்வாறு ஆண்டவருக்கு ஏற்புடைய ஒரு மக்களினத்தை ஆயத்தம் செய்வார்" என்றார்.

18 செக்கரியா வானதூதரிடம், "இது நடைபெறும் என எனக்கு எப்படித் தெரியும்? நான் வயதானவன். அது போல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே" என்றார்.19 அதற்கு வானதூதர் அவரிடம் , "நான் கபியேல். கடவுளின் திருமுன் நிற்பவன் உம்மோடு பேசவும் இந்த நற்செய்தியை உமக்கு அறிவிக்கவும் அனுப்பப்பட்டேன்.20 இதோ பாரும், உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர். உம்மால் பேசவே இயலாது" என்றார்.21 மக்கள் செக்கரியாவுக்காகக் காத்திருந்தனர். திருக்கோவிலில் அவர் காலந்தாழ்த்துவதைக் குறித்து அவர்கள் வியப்படைந்தார்கள்.22 அவர் வெளியே வந்தபோது அவர்களிடம் பேச முடியாமல் இருந்தார். ஆதலால் அவர் திருக்கோவிலில் ஏதொ காட்சி கண்டிருக்க வேண்டும் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் அவர்களிடம் சைகைகள் வாயிலாக உரையாடி வந்தார் பேச்சற்றே இருந்தார்.23 அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்.24 அதற்குப்பின்பு அவர் மனைவி எலிசபெத்து கருவுற்று ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்தார்.25 "மக்களுக்குள் எனக்கிருந்த இகழ்ச்சியை நீக்க ஆண்டவர் என்மீது அருள்கூர்ந்து இந்நாளில் இவ்வாறு செய்தருளினார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

மரியாளின் மணஒப்பந்தம் (லூக்கா 1:27)
27 அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு (லூக்கா 1:26-38)

26 ஆறாம் மாதத்தில் கபியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.28 வானதூதர் மரியாவுக்குத் தோன்றி , "அருள்மிகப் பெற்றவரே வாழ்க. ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் என்றார்.29 இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30 வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம் கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32 அவர் பெரியவராயிருப்பார். உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.34 அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே." என்றார்.35 வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36 உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37 ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.38 பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை. உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.


மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல் (லூக்கா 1:39-55)
39 அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.40 அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.41 மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.42 அப்போது அவர் உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர். உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே.43 ஆண்டவின் தாய் என்னிடம் வர நான் யார்?44 உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.45 ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்றார்.

மரியாவின் பாடல்
46 அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்
47 "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
48 ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
49 ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர்.
50 அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.51 அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்.52 வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.53 பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார். செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுவார்.
54 மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்.55 தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்".

நாசரேத்துக்குத் திரும்புதல் (லூக்கா 1:56)
56 மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

யோசேப்பின் கனவு (மத்தேயு 1:20-25)

20 அவ் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
22 இதோ. கன்னி கருவுற்று ஓர் ஆண்மகனைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர் என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.23 இம்மானுவேல் என்றால்"கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்பது பொருள்.24 யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.25 மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு உறவு கொள்ளவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

யோவான் ஸ்நானகரின் பிறப்பு (லூக்கா 1:57-80)

57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.58 ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர்.59 எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள். செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள்.60 ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார்.61 அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி,62 "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள்.63 அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர்.64 அப்பொழுதே அவரது வாய் திறந்தது. நா கட்டவிழ்ந்தது. அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.65 சுற்றி வாழ்ந்தோர் அனைவரும் இதைப்பற்றிக் கேள்விப்பட்டு அஞ்சினர். இச்செய்தி யூதேய மலை நாடெங்கும் பரவியது.66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் இச்செய்தியைத் தங்கள் உள்ளங்களில் இருத்தி, "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?" என்று சொல்லிக் கொண்டார்கள். ஏனெனில் அக்குழந்தை ஆண்டவருடைய கைவன்மையைப் பெற்றிருந்தது.

செக்கரியாவின் பாடல்
67 பிள்ளையின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு
68 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
69 தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே,70 அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்
71 நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார்.
72 அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும்,73 நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
74 இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும்,75 வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
76 குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்77 ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்.
78 இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,79 நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது."
80 குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.

இயேசுவின் பிறப்பு (லூக்கா 2:1-7)

1 அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2 அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3 தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4 தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5 கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6 அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7 அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.

இடையர்களும் வானதூதர்களும் (லூக்கா 2:8-20)

8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.10 வானதூதர் அவர்களிடம், "அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.11 இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்.12 குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள் இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

13 உடனே விண்ணகத் தூதர் பேரணி அந்தத் தூதருடன் சேர்ந்து, " உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.14 உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக." என்று கடவுளைப் புகழ்ந்தது.

15 வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்" என்று சொல்லிக்கொண்டு,16 விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.17 பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள்.18 அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தஹர்.19 ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.20 இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது.

விருத்தசேதனம் (லூக்கா 2:21)
21 குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் (லூக்கா 2:22-38)
22 மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
23 ஏனெனில், "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24 அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு ஒருசோடி மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

25 அப்போது எருசலேமில் சிமியோன் என்பவர் இருந்தார். அவர் நேர்மையானவர் இறைப்பற்றுக் கொண்டவர். இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26 ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை" என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27 அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29 "ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30 ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31 நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32 இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி. இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.

33 குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, "இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35 இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்றார்.36 ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர் மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர். 37 அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38 அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

ஞானிகள் வருகை (மத்தேயு 2:1-12)

1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோ ம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம்,"யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்".
6 ஏனெனில், "யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்" என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்" என்றார்கள்.
7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம்." நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்" என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ. முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

எகிப்திற்குச் செல்லுதல் (மத்தேயு 2:13-15)

13 அவர்கள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,"நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும்வரை அங்கேயே இரும். ஏனெனில், குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்.14 யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.15 ஏரோது இறக்கும்வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, "எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்" என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது.

குழந்தைகள் படுகொலை (மத்தேயு 2:16-18)

16 ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றங் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கேற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.17 அப்பொழுது "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது. ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது. இராகேல் தன் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கிறாள்.18 ஆறுதல் பெற அவள் மறுக்கிறாள். ஏனெனில் அவள் குழந்தைகள் அவளோடு இல்லை" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

நாசரேத்துக்குத் திருப்பிச் செல்லுதல் (மத்தேயு 2:19-23)
19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 "நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்" என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார். கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு "நசரேயன் என அழைக்கப்படுவார்" என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது.

இயேசுவின் குழந்தைப்பருவம் (லூக்கா 2:40-45)

40 குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.43 விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.44 பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்45 அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

கோவிலில் சிறுவன் இயேசு (லூக்கா 2:46-50)


46 முன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார்.47 அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். 48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, "மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே" என்றார்.49 அவர் அவர்களிடம்"நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தியாதா?" என்றார்.50 அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இயேசுவின் இளமைப்பருவம் (லூக்கா 2:51-52)

51 பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.52 இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.


இதுவே புனித வேதாகமத்தில் இயேசு பிறப்பினைப்பற்றிய செய்திகள். இதில் கிறிஸ்துமஸ் என்பது எப்படி வந்தது? அதைப்பற்றிய செய்தி வேதாகமத்தில் இல்லாவிடில் யார் இதைக் கொண்டு வந்தது..? விடை அடுத்த பதிவில்..

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பகுதி 1

கிறிஸ்துமஸ் என்றால் என்ன ? அது ஏன், எதற்கு, எப்படிக் கொண்டாடப்படுகிறது ? அதன் பின்னே உள்ள உயர்ந்த தத்துவங்களைப் பற்றியும் அது கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படி ஒரு தவிர்க்க இயலாத கொண்டாட்டமாக மாறிவிட்டது என்பதைப்பற்றியும் எழுத ஆசை. மேலும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய கிறிஸ்துமஸ் தாதா, பரிசுப்பொருள்களின் பரிமாற்றம், கத்தோலிக்கத் திருச்சபைகளில் பின்பற்றப்படும் கிறிஸ்துமஸோடு தொடர்புடைய பாரம்பரியங்கள் , டிசம்பர் 25 என்ற நாள் எப்படி வந்தது? கிறிஸ்துமஸ் பாடல்கள் (கரோல்கள்) என்று அதன் தாக்கங்கள் என்று நிறைய எழுத ஆசை.

எனக்கு பிற மதத்தவர்களின் நம்பிக்கைகள் பற்றியும் அவர்களின் பண்டிகைகள், கொண்டாடங்கள் பற்றியும் அறிய மிகவும் ஆசை. இதைப்போலவே கிறிஸ்தவர்களின் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றி அறிய விரும்புவர்கள் இதைப் படிக்கலாம். எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த வரையில் முழுத்தகவல்களோடு நன்றாக எழுத முயற்சிக்கிறேன். மேலும் ரெம்ப நாளா ஒரு நல்ல தொடர் எழுத வேண்டும் என்ற எனது ஆசையும் இதன் மூலம் நிறைவேறிவிடும்.


கிறிஸ்துமஸ் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் என்பது கிறிஸ்துவுக்கான திருப்பலி (Christmas , originally the Mass of Christ derived from the old English Cristes mæsse) என்று பொருள்படும். இது தமிழில் கிறிஸ்துஜெயந்தி அல்லது கிறிஸ்துமஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் Xmas என்றும் சிலநேரங்களில் சுருக்கி அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகாமத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள், இவைகள் எழுதப்பட்ட காலத்தில் உலகப்பொதுமொழியாக விளங்கிய கிரேக்க மொழியில் X என்பது பொதுவாக கிறிஸ்து என்பதன் சுருக்கமாகப் பார்க்கப்படுகிறது. In Greek, X resembles the Χ (chi) which has often historically been used as an abbreviation for Christ (Χριστός in Greek). கடவுளாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக இந்தப் பூமியில் அவதானித்த திருநாளே கிறிஸ்துமஸ் ஆகும்.

திரித்துவம்

திரித்துவம் என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் கிறிஸ்துமஸ் பற்றிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவி செய்கிறது.
நம்மை எல்லாம் படைத்துக், காக்கும் கடவுள் ஒருவரே. அவரே எல்லாமானவர். ஆனால் கிறிஸ்தவர்கள் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று கடவுளை மூன்று பேர்களாக வணங்குகிறார்கள். இவர்கள் மூவரும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள், ஆனால் ஒருவரே. ஒரே கடவுள் ஆனால் மூன்று பேர். இது புரிந்து கொள்ள சிறிது கடினமானதுதான். நான் எளிதாக விளக்க முற்படுகிறேன்.

நான் தற்போது இருக்கும் மாலத்தீவு, நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்துள்ளது. நான் கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப்பார்க்கிறேன். ஆர்ப்பரிக்கும் அலைகளோடு , அளப்பரிய சக்தியோடும் சில் நேரங்களில் ஆர்ப்பாட்டமாகவும், சில நேரங்களில் ஒரு ஓடையப்போன்று அமைதியாகவும் உள்ளது. அலைகள் கடற்கரையே நோக்கி வரும்பொழுது வேகமெடுக்கின்றது. பின் கரையில் மோதுகிறது, பின்பு மீண்டும் கல்டலுக்குள்ளேயே சென்று விடுகிறது. அலைகள் கடலிலிருந்து தனித்துத் தெரிந்தாலும் அதுவும் கடலே. எப்போதும் காற்றில் ஒருவித கடலில் உப்புவாடையும், கடலலைகளின் சத்தமும் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.

இப்பொது ஒரு கேள்வி, கடல், கடலலைகள், உப்பங்காற்று இந்த மூன்றும் வேறு, வேறா அல்லது ஒன்றா..? மூன்றிற்கும் தனித்தனி அடையாளங்கள் இருந்த போதிலும் மூன்றும் ஒன்றே.

அந்த உதாரணத்தில் காட்டியது போன்றே தந்தையாகிய கடவுள் கடலைப்போன்று உள்ளார். எப்படி அலைகள் கடலின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றதோ அதுபோல அவரது மகனாகிய இயேசுவும் தந்தையின் குணாதிசயத்தைப் பிரதிபலிக்கின்றார். உப்பங்காற்று பரிசுத்த ஆவியாரைக் குறிக்கும்.

இதுபோன்று இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்ல இயலும். இருந்தாலும் இது பிதா/மகன்/பரிசுத்த ஆவி என்ற சொற்களின் சரியான பொருள் மற்றும் பிரயோகத்தை எல்லோரும் உணர்ந்து கொள்ளவே சொல்லப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்கள் (கத்தோலிக்க) எல்லோரும் கீழ்க்கண்ட விசுவாசப்பிராமாணத்தை நம்புகின்றனர்.

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்./
அவருடைய ஏகசுதனாகிய/ இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்த்ழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி/ எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிரார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.
- ஆமென்.

இதில் கிறிஸ்துமஸ் என்பது மகனாகிய கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்த அந்த நாளே ஆகும்.

இவைகளைப் பற்றி புனிதவேதகாமம் என்ன சொல்கிறது என்பதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

முக்கியப் பின்குறிப்பு

இந்த மினி தொடர், கிறிஸ்துமஸ் பற்றிய சில விபரங்களை எல்லோரும் அறிந்து கொள்ளவே எழுதப்படுகிறது. வேறு எந்த வித மதசம்பந்தமான உள்நோக்கம் இதற்கு இல்லை. இது முழுக்க முழுக்க மத சம்பந்தமான நம்பிக்கைகள். எனவே யாரும் இது தவறு, அது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டாம். உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எனது நம்பிக்கை எனக்கு.

Monday, December 19, 2005

தமிழ் பதிப்புலகத்தில் அபுனைவு

தமிழ் பதிப்புலகத்தில் அபுனைவு (Non-Fiction) பற்றிய திரு.பத்ரி அவர்களின் இரண்டு கட்டுரைகளின் சாரம்சம் இதுவே.

தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமை

புனைவில்லாத, மக்களுக்குத் தேவையான பல விஷயங்கள் பற்றியும் எழுதுவதற்கு ஆள்கள் இல்லை; குறைவாக இருக்கிறார்கள்;

ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்.

எழுதுவதில்லை. எழுத விரும்புவதில்லை, அல்லது தனக்கு எழுதத்தெரியாது என்று நினைத்துக்கொண்டு முயற்சி செய்வதும் இல்லை.

இதையெல்லாம் எழுதினால் யார் புத்தகமாகப் போடுவார்கள் என்று சிலர் யோசித்து, முயற்சியில் இறங்குவதில்லை. இன்னும் சிலரோ, எழுதினாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுதுவது என்ற நினைப்பில் இருக்கலாம்.

தமிழ் அபுனைவுகளின் உண்மை நிலமை

வாசகர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. தரமான புதிய முயற்சிகளை வாசகர்கள் வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்

தமிழ் அபுனைவுகளின் மேன்மைக்குப் பத்ரியின் சில வழிமுறைகள்

இந்தப் புத்தகங்களை எழுத எழுத்துத்திறமைமட்டும் போதாது. விஷயஞானமும் தேவை.

எதைப்பற்றி எழுதவேண்டுமோ அதைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் மேற்கொண்டு அந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் வேண்டும்.

அந்தத் துறையிலேயே பழம் தின்று கொட்டை போட்டிருத்தல் நலம்.

இது பற்றிய விரிவான பத்ரியின் கட்டுரைகளின் சுட்டி
சுட்டி1, சுட்டி2

பாரதியார் ஏற்கனவே இது பற்றி சொல்லிவிட்டார். அதைத்தான் இப்போது பத்ரியும் சொல்லியுள்ளார்.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

தமிழ் அபுனைவுகளின் தற்போதய நிலமைக்குக் காரணங்களில் பத்ரி சொல்லிய இந்தக்கருத்து என்னை நிறைய நேரம் சிந்திக்க வைத்தது. "ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவுடைய பலரும் அதை எழுதி வைப்பது என்ற எண்ணம் இல்லாதிருக்கின்றனர்." இது ஏன் என்று "என்னை" மையமாக வைத்துச் சிந்தித்துப் பார்த்ததில் எனக்குப் பட்டது. தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.

1. நிறையபேர் இன்னும் தங்களின் வேலையை தங்களின் சம்பாத்தியத்திற்காகத் தங்களின் மேல் திணிக்கப்பட்டதாகவே எண்ணியுள்ளனர். இதனால் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யவே விரும்புகின்றனர். இஷ்டப்பட்டு வேலை செய்தால் மட்டுமே அவர்களால் சிகரங்களை எட்ட முடியும்.

2. நிறையபேருக்கு டைம் மேனஞ்ச்மெண்ட் என்ற கால நிர்வாகத்திறன் மிகவும் குறைவு. காலம் பொன்போன்றது என்று நினைக்காமல் தொலைக்காட்சி, சினிமா என்று தங்கள் பொன்னான நேரத்தைச் சீரளிப்பவர்கள் அதிகம்.

3. இப்படிப்போன்ற முயற்சிகள் நமது கடும் உழைப்பையும், நேரத்தையும், நமது கவனத்தையும் , நமது தூக்கத்தையும் தானகவே எடுத்துக் கொள்ளும். அதற்கு எத்தனை பேர் தயார்?

4. இவைகளில் ஈடுபடும் நேரம் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை எடுத்து விடும், அலுவலகத்தில் நமது முனைப்பைக் குறைத்து விடும் என்று Quality மற்றும் Quantity Timeக்கு வித்தியாசம் தெரியாதவர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள்.

5. மேலும் இத்துறையில் சாதித்த ஒரு சிலரும் இதை விட்டுச் சினிமா, வசனம் என்று வேறு , வேறு டிராக்கிற்கு மாறியது.

6. வேலையில் காக்கா பிடித்தும், மற்றவரைக் குறை சொல்லியுமே வந்தவர்கள் அது சம்பந்தமான திறமைகளை மட்டுமே வளர்த்து வருகின்றவர்கள்

7. எனக்குத் தெரிந்து இயந்திர மற்றும் கட்டட பொறியியல் படிப்பவர்கள் கூட தொழில்நுட்பம் சம்பந்தமான வேலைவாய்ப்புகளைத் தேடி தங்கள் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத வேலையிலேயே நிலைப்பதும்.. ( பல்தொழில்வித்தகர்களையும், மிகுந்த நெகிழ்வுத்திறன்
மிக்கவர்களை நான் குறை சொல்ல இல்லை.. )

8. படித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் ஏதோ பெரிய ஒன்றை சாதித்தி விட்டது போன்று துறை சார்ந்த மேல் படிப்பினை விட்டு விடுதல் அல்லது மறந்து விடுதல்.

9. தாங்கள் ஏற்கனவே பழகிய / பரிச்சயமானவற்றைத் தவிர மற்றவற்றைப் பற்றி அறிய ஆர்வம் இல்லாமலிருப்பது.

10. முழு நேரம் எழுதுபவர்கள் வறுமையில் வாடுவார்கள் என்ற வாதம் எப்போதுமே உண்டு. எனவே எல்லோரும் தங்களின் ஓய்வு நேரப் பொழுதுபோக்காகவே இதை மேற்கொள்ளுவது.

11. இவைகளை எழுதினால் படிப்பார்களா? வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம்.

12. தமிழில் துறை சார்ந்த சிறந்த , எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகராதிகள் இல்லாமை.

13. மொழிபெயர்ப்பும் ஒருவகையில் அபுனைவுகளை ஊக்குவிக்குமா? சிறந்த மொழிபெயர்ப்பு செய்வது பற்றிய கையேடு / புத்தகங்கள் இல்லாமை.

14. எழுதுவது ஒரு தவம் போன்றது என்று உணராமல் எடுத்தோம்,கவிழ்தோம் என்று செய்துவிட்டு ஒரு சிறுதோல்வியிலும் துவண்டு அடுத்த படிக்குச் செல்லாமை.

15. எல்லாவற்றிற்கும் மேலாக கூரிய ஒருமுகப்பட்ட பார்வை, அயாரா உழைப்பு,விடாமுயற்சி இல்லாமை, காலநிர்வாகத் திறன் பற்றாக்குறை, எழுத்தின் மேல் அர்ப்பணிப்பு இல்லாமை..

ஆனால் இவைகள் எல்லாவற்றைய்யும் தாண்டி, இப்பொழுது அபுனைவுகளுக்குத் தமிழில் ஒரு வளமான ஒரு வருங்காலம் வந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. பாரதியார் கண்ட கனவு நனவாகும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

கணிணி, இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா போன்றவைகளின் நடைமுறை வாழ்வுத் தாக்கத்தாலும், பத்ரி போன்றவர்கள் புதியவர்களுக்கு அளிக்கும் ஊக்கத்தாலும் நிறையபேர் மணல்வீடு கட்டி விளையாடுவது போன்று புதியமுயற்சிகளை செய்துப்பார்க்கின்றனர். வலைப்பூக்களில் எழுதும் போது, தமிழ்மணம் வாயிலாக ஒத்த சிந்தனை உடையவர்களின் நட்பும், அவர்களோடு பரிச்சயமும், அவர்களின் அனுபவங்களை வலைப்பூக்கள் வாயிலாக அறிய முடிகிறது. நிறைய விசயங்களை எழுத முயற்சி செய்யும் போது என்ன நடையில் எழுதுவது, எப்படி கருத்தை விட்டு விலகாமல் சுவரசியமாக எழுதுவது என்று சிந்திக்க முடிகிறது. எழுதுவதை எப்படி பிழைதிருத்தம் செய்வது, கச்சிதமாக , சுவாரசியமான நடையில் எழுதுவது எப்படி என்று யோசிக்க, பரிச்சார்த்தமான முறையில் பரிச்சை செய்யமுடிகிறது. வெகுவிரைவில் நிறையபேர் வருவார்கள்.

Saturday, December 17, 2005

சிவகாசியில் தேசிய புத்தக கண்காட்சி

சிவகாசியில் 21-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம் பற்றிய செய்தி. சிவகாசியில் நேஷனல் புக் டிரஸ்ட் (புது டில்லி) மற்றும் விருதுநகர் தமிழ் வளர்ச்சிதுறை, சிவகாசி பாரதி இலக்கிய சங்கம், நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவை இணைந்து சேனை தலைவர் திருமண மண்டபத்தில் 21-வது தேசிய புத்தக கண்காட்சியை நடத்துகிறது. கண்காட்சி இன்று மாலை (17-ந் தேதி) தொடங்குகிறது.

தொடக்க விழாவில் கவிஞர் திலகபாமா தலைமை தாங்குகிறார். நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை வழங்குகிறார். விருதுநகர் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முத்தையா முன்னிலை வகிக்கிறார். கண்காட்சியை வணிக வரித்துறை உதவி ஆணையர் தேவேந்திர பூபதி திறந்து வைக்கிறார். பேராசிரியர் ஆனந்தகுமார் சிறுகதை எழுத்தாளர் முத்து பாரதி ஓவியர் குற்றாலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

முடிவில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் கிளை மேலாளர் கோட்டைச்சாமி நன்றி கூறுகிறார். கண்காட்சி இன்று(டிசம்பர் 17) தொடங்கி ஜனவரி 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

தகவல் உதவி : மாலைமலர்

ஒவ்வொரு வருடமும் சிறப்பான முறையில் நடந்து வரும் இப்புத்தகக் கண்காட்சியினைக்காண , சிவகாசியைச் சார்ந்தவன் என்ற முறையில்அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்.

பாம்பன்ன பாலம். சிவகாசின்னா ஜாலம்.

Wednesday, December 14, 2005

பில்கேட்ஸ் இந்திய வருகை Vs விஜய் சிவகாசி வருகை

பில்கேட்ஸின் இந்திய வருகைபற்றிய கருத்துக்களை என்னிடம் நேரிலும், (கைத்)தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், மின் அரட்டையிலும், டெலிபதி மூலமாகவும் கேட்ட (!?) கோடானகோடி இரசிகர்களுக்காகவும்,சிவகாசி படத்தில் நடித்ததால் சிவகாசியில் ரசிகர்களுடன் தீபாவளியை கொண்டாட முடிவு செய்து சிவகாசியில் புரட்சிப்பயணத்தை மேற்கொண்ட இளைய தளபதியைப் பற்றியும் கேட்ட கோடாணுகோடி எனது சொந்த ஊர் சிவகாசி மக்களுக்கும், நண்பர்களுக்கும் முதற்கண் எனது நன்றி.

நேரமின்மையாலும் ( ஆமா என்னத்த வெட்டிக் கிழிச்சான்னு ? நீங்க முனங்கிறது கேட்கிறது.. ) , பலப்பல அலுவல்களாலும் , சொந்தக் காரணங்களுக்காகவும், சம்பளம் கொடுக்கும் அலுவலகம் தீடீரென்று வேலை செய்யச் சொல்வதாலும் என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உங்களை காக்க வச்சதுக்கு மன்னியுங்கோ..

இரண்டும் ஒன்னுதான். ரெண்டும் கிணத்துல ஊறின ஒரே மட்டைங்கதான். ஒண்ணு State Permit, இன்னோன்னு International Permit.. அம்புட்டுதான்..

(அய்யா பில்கேட்டு இரண்டு விரலக் காட்டாதீங்க, சொல்லித்தந்த மாதிரி ஐஞ்சு விரலக் காட்டுங்க..)
(இருவர் படத்தில மோகன்லால் பார்க்கிறது மாதிரியே இருக்குதே..)


ரெண்டுபேருக்கும் போட்டிக்காரங்களால ஒரே தொல்லை.
எப்ப எவன் கவிப்பான்னு தெரியாது.
ரெண்டு பேரும் தகுதிக்குமீறி அளவுக்குஅதிகமா புகழ் இருக்கு.
ரெம்பப் பெரிய திட்டம் மனசுக்குள்ள இருக்கு,
அதனால தங்கசரக்க விக்க தெருதெருவா வர்ற காய்கறி தள்ளுவண்டி கடைக்காரன் மாதிரி வியாபாரத்துக்கு வந்திருக்காங்க..
இதப்போயி பெரிச கேட்க வந்துட்டாங்க..

இது பற்றிய மேலும் விபரங்களுக்குப் பார்க்க
http://www.dinamalar.com/2005oct24/imp15.asp
http://www.msnbc.msn.com/id/10333817/

பின்குறிப்பு:
1.
விஜய பில்கேட்ஸ் லெவலுக்கு சொன்னதினால விஜய் ரசிகர்கள் வாழ்த்துங்க
2. பில்கேட்ஸ விஜய்லெவலுக்கு இறக்குனதுக்கு பில்கேட்ஸின் ரசிகர்கள் மன்னியுங்க..