Sunday, July 31, 2005

தினமணி ராமன் ராஜா திறமூலத் தொடர் - பாகம் 2

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்:2 கலாமின் நெத்தியடி!
ராமன் ராஜா

முதல்பாகம்

போனவாரம் முற்றுப்புள்ளி வைத்த மைக்ரோ சாப்டின் "நெட்ஸ்கேப் அடி' என்ற வர்ம அடி ரகசியத்தை சொல்கிறேன். அது என்ன தெரியுமா? உங்கள் மென்பொருள் போலவே தாங்களும் ஒன்றைத் தயாரித்து விண்டோஸýடன் சேர்த்து இலவச சீயக்காய் பாக்கெட் போல விநியோகித்தே போட்டியாளர்களை ஒழித்துக்கட்டிவிடுவது!

ஆனால் ஒன்று: இப்படி அடிப்போரில் நெருப்பு வைக்கும் வேலைகளைச் செய்யாமல் இருந்தால் மைக்ரோசாப்ட் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்க முடியாது. நாயை நாய் தின்னும் அமெரிக்கப் பொருளாதாரம் அப்படி. எல்லா மென்பொருள் கம்பெனிகளுக்கும் தற்போது தலையாய பிரச்சினை, அமெரிக்க மார்க்கெட் விளிம்பு வரை நிறைந்துவிட்டது.

அவர்களுக்குத் தொடர்ந்து வருவாய் வரவேண்டுமென்றால் நம்மை மறுபடி மறுபடி சாப்ட்வேர் வாங்க வைக்கவேண்டும். 95, 98, 2000 என்றெல்லாம் நம்பரை மட்டும் மாற்றி அடிப்படையில் அதே சரக்கையே திரும்ப ரிலீஸ் செய்துகொண்டிருப்பது ஒரு வழி. ஆனால் இப்போது பொதுமக்களும் உஷாராகி லேசில் பர்ûஸத் திறக்க மறுக்கிறார்கள். எனவே அவர்கள் லைசென்ஸ் விதிகளை மாற்றி மென்பொருளுக்கும் கேபிள் டிவி போல மாதா மாதம் சந்தா வசூலிக்கத் திட்டம் தீட்டி வருகிறார்கள். இன்டெல் மற்றும் சில ஆடியோ கம்பெனிகளும் இந்தச் சதியில் கூட்டு. உங்கள் கம்ப்யூட்டருக்குள் பொல்லாத சில்லு ஒன்றைப் பதித்து, ஒண்ணாம் தேதியன்று பணம் கட்டவில்லையென்றால் கம்ப்யூட்டர் நாக்கைத் துருத்திக்கொண்டு மல்லாந்து கிடக்கும்படி செய்யும் தொழில்நுட்பம் வரப்போகிறது.

இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்தான் நம் கதாநாயகர்கள் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அங்கங்கே துண்டு துண்டாக நடந்துகொண்டிருந்த இந்த இயக்கத்திற்கு காந்தி மாதிரி, மண்டேலா மாதிரி ஒரு தலைவர் தேவைப்பட்டார். இந்த நேரத்தில்தான் லைனஸ் தோர்வால்ட் என்ற இளைஞர் இருண்ட மேடையில் ஸ்பாட் லைட் தொடரக் காட்சியில் நுழைகிறார்.

இந்த பின்லாந்து மாணவர் விளையாட்டாக ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை எழுத ஆரம்பித்து, உதவி கேட்டு இன்டர்நெட்டில் ஒரு நோட்டீஸ் ஒட்டினார். அவருடைய ஆர்வத்தைப் பார்த்து சிலர் சேர்ந்துகொண்டார்கள். பத்து நூறானது, நூறு ஆயிரமானது. கடைசியில் உலகம் முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான மென்பொருளாளர்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல் இணையத்தின் வழியாகவே கலந்து பேசி ஒத்துழைத்து ஓர் அபாரமான ஆபரேட்டிங் சிஸ்டத்தை எழுதியே முடித்துவிட்டார்கள். அதுதான் லினக்ஸ்!முதலில் மைக்ரோசாப்ட் போன்ற கம்பெனிகள் இதை எள்ளி நகையாடின. நாங்கள் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கும் என்ஜினியர்களே தப்புத் தப்பாக ப்ரோக்ராம் எழுதித் தத்தளிக்கிறார்கள். இதில் ஊர் பேர் தெரியாதவர்களெல்லாம் தலைக்குத் தலை எழுத ஆரம்பித்தால் என்ன ஆவது என்று சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால் லினக்ஸின் முக்கிய பலம், அதன் மூல ஆணைத் தொடரை எல்லாரும் படிக்கும்படி திறந்து வைத்திருப்பதுதான். ஒருவர் ஒரு தப்பு செய்தால் அது வேறு யார் கண்ணிலாவது நிச்சயம் பட்டுவிடும்.

இருபத்து நாலு மணி நேரமும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பதால் மளமளவென்று வளர்ந்தது லினக்ஸ். கூலிப் பட்டாளங்களுக்கு இல்லாத மன உறுதியும் சாதிக்கும் வெறியும் பொதுநல நோக்கமும் இருப்பதால் ஓப்பன் சோர்ஸில் வேலை செய்யும் பலருக்கு தொழில்நுட்ப வட்டாரங்களில் மிகுந்த மரியாதை இருக்கிறது. முற்றிலும் இலவசமாகக் கிடைப்பதால் பலர் உடனே லினக்ஸýக்கு மாறிவிட்டார்கள்.

ஐ.பி.எம். போன்ற பெரிய கம்பெனிகள் மைக்ரோசாப்டை வஞ்சம் தீர்த்துக்கொள்ள லினக்ûஸ ஆதரிக்கின்றன. சீனாவில் அரசாங்கமே லினக்ûஸ அதிகாரபூர்வமாக்கிவிட்டது. அவர்களுக்கு அமெரிக்கர்கள், குறிப்பாக சி.ஐ.ஏ. மீது எப்போதும் சந்தேகம்; தங்கள் தகவல்களையெல்லாம் ஒட்டுக் கேட்க சாப்ட்வேரில் ஏதேனும் ஜேம்ஸ்பாண்ட் வேலை செய்து அனுப்பியிருந்தால்?... லினக்ஸ் ஒரு திறந்த புத்தகமாகையால் பயமில்லாமல் உபயோகிக்கிறார்கள்.

வெளியிலிருந்து பார்த்தால், சாப்ட்வேர் என்ஜினியர்கள் இப்படி பசி தாகம் மறந்து ஓய்வு நேரத்தைத் துறந்து இலவச சேவை செய்ய முன்வருவது கொஞ்சம் புதிராகத் தோன்றலாம். இதில் முக்கிய விஷயம், மென்பொருள் எழுதுவது தொழில்நுட்பம் மட்டுமில்லாமல் ஒரு கலையும் கூட. கதை, கவிதை எழுதுவது போலவே இதற்கும் ஒரு படைப்புத் திறன் -கிரியேடிவிட்டி தேவைப்படுகிறது. ஒரு புதுக்கவிதை எழுதியவுடன் அதை அச்சில் பார்க்கும் ஆசையில் இலக்கியப் பத்திரிகைக்கு அனுப்புவது போல் தங்கள் மென்பொருளை உலகமே பார்க்கவேண்டும் என்ற விருப்பம் ஒரு காரணம்.

இந்த அவசர யுகத்தில் மற்ற எல்லாவற்றையும் போலவே மென்பொருள் எழுதுவதும் இயந்திரமயமாகிவிட்டது. பத்து வருடம் முன்பெல்லாம், நாள்கணக்கில் சிலை வடிப்பது போல் கையால் செதுக்கி அழகு பார்த்த மென்பொருள்கள், இப்போது ரெடிமேடாக லெகோ பொம்மை மாதிரி பார்ட் பார்ட்டாகக் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிக் கோர்த்துக் கொடுப்பதுதான் சாப்ட்வேர் என்ஜினியர்களின் வேலை என்று இந்தத் தொழிலே முட்டாள்தனப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதனால் கொஞ்சம் அழகுணர்ச்சி மிச்சமிருப்பவர்கள் வெறுத்துப்போய், பகலெல்லாம் அலுவலகத்தில் காசுக்கு மாரடித்தாலும் இரவில் ஓப்பன் சோர்ஸ் எழுதுவதில் இருக்கும் சவாலை விரும்பி வருகிறார்கள். அதிலும் நல்ல ப்ரோக்ராம்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்கும். ஜாவாவை இயற்றிய ஜேம்ஸ் காஸ்லிங் இந்தியா வந்தபோது இளைஞர்கள் ஆட்டோகிராப் கேட்டு மொய்த்தார்கள். மற்றபடி இந்தத் துறையிலும் பாராட்டு -புகழ் மாலை, பொறாமை -புகைச்சல், கோஷ்டிப் பூசல் -கைகலப்பு அத்தனையும் தப்பாமல் உண்டு.

லினக்ஸ் தந்த தெம்பில் அவரவர்கள் களத்தில் இறங்கி ஆபரேடிங் சிஸ்டம் அல்லாத மற்ற மென்பொருள்களையும் திறவூற்றில் கொண்டுவந்துவிட்டார்கள். வெப் சர்வர், அப் சர்வர், அலுவலக மென்பொருள் என்று எதை எடுத்தாலும் அதற்கு ஒரு ஓப்பன் சோர்ஸ் வடிவம் கிடைக்கிறது. விக்கிபீடியா என்று உலகமே சேர்ந்து ஒரு கலைக்களஞ்சியத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. (நான் கூட இட்லி செய்வது பற்றி ஒரு குடும்ப ரகசியத்தை வெளியிட்டிருக்கிறேன்). சோர்ஸ் ஃபோர்ஜ் என்ற இணைய தளத்தில் மட்டுமே ப்ராஜெக்டுகளின் எண்ணிக்கை
ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. லினக்ûஸ உலகின் எல்லா மொழிகளிலும் அவரவர்கள் உற்சாகத்துடன் கொண்டுவந்திருக்கிறார்கள்.

தமிழிலும் ஒன்றுக்கு மேற்பட்ட கோஷ்டிகள், ஒரு கையால் லினக்ஸ எழுதிக்கொண்டே மறு கையால் பரஸ்பரம் இங்க் தெளித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் திறவூற்றை ஆதரிப்பவர்களில் முக்கியமானவர் அப்துல் கலாம் அவர்கள். சமீபத்தில் தன்னைச் சந்திக்க வந்த வி.ஐ.பி. ஒருவரிடம் "இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு மைக்ரோசாப்ட் எல்லாம் சரிப்படாது. ஓப்பன் சோர்ஸ்தான் எங்கள் ஒரே நம்பிக்கை'' என்று அடித்துச் சொன்னார். அந்த வி.ஐ.பி. -பில் கேட்ஸ்!

Saturday, July 30, 2005

பின்லாந்து கலக்குது

லினக்ஸ் பிதாமகன் லினஸ்டார்வல்ட்ஸ் பிறந்த பின்லாந்துக்கு மற்றொரு பெருமை, ஆமாம் பயர்பாக்ஸ் திறமூல உலாவியின் உபபோகத்தில் சுமார் 31.03 சதவீதத்தோடு ஐரோப்பாவிலே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கண்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் நாடுகள் வாரியாக பயர்பாக்ஸ் திறமூல உலாவியின் உபயோகத்தை பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த xiti Monitor என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கண்டங்கள் வாரியான பயர்பாக்ஸ் பயன்பாடு


ஐரோப்பிய நாடுகள் வாரியாக பயர்பாக்ஸ் பயன்பாடு
இதில் தென் அமெரிக்க, ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் தேக்கத்திற்க்கு பயர்பாக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் மிக மெதுவான இணைய இணைப்பு மற்றும் தாரளமான திருட்டு மென்பொருள் நடமாட்டம் முதலியன காரணமாக இருக்கலாம்.

இப்பபடி பயர்பாக்ஸ் உலாவியைச் சுமார் 7615943க்கும் அதிகம் பேர் உபயோகித்து IEயின் ஏகபோக உரிமையைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இடையில் பெரியண்ணன் மைக்ரோசாப்ட் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட IE7 பீட்டா வெளியீட்டிலும் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்க தவறவில்லை.

1. IE7 விண்டோஸ் விஸ்டாவிலும் , XP சர்வீஸ் பேக் 2 உள்ள கணிணியில் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் பழைய விண்டோஸ் 98, ME, விண்டோஸ் 2000 உபயோகித்தால் XPக்கு மாறி மைக்ரோசாப்டிற்கு மேலும் படிஅளியுங்கள். அப்போதுதான் நீங்கள் IE7 உபயோகிக்க முடியும்.

2. IE7ல் புதியதாக டாப் முறையிலான வலைப்பார்வை, செய்தியோடை, ஒரே கட்டளையில் எல்லா வலைவரலாற்றை அளிப்பது என பயர்பாக்ஸ், ஒபராவில் பல வருடங்களாக அளித்துள்ளதை இப்போதுதான் தந்துள்ளனர். அடத் தேவுடா!

மேலும் விபரங்களுக்குப் பார்க்க: http://www.pcmag.com/article2/0,1895,1840714,00.asp


Sunday, July 24, 2005

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!

இந்தப் பதிவில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவில் பிணக்குகள் இருக்கலாம். மேலும் விபரங்களுக்குப் பார்க்க


சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!
என்ற தலைப்பில் ராமன் ராஜா என்பவரால் எழுதப்படும் தொடர் இந்த வாரம் முதல் தினமணிக்கதிரில் வெளிவருகிறது. திறமூலங்களைப்பற்றிய இந்தத் தொடர் (என்னைப் போன்ற) பாமரர்களுக்கும் எளிதில் புரியும்படி நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயனுற வேண்டுகிறேன். இனி அந்தக்கட்டுரை..

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!

என் அக்கா பையன் சுந்தர் ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களிடமெல்லாம் வம்படித்துக் கொண்டிருப்பான். ரவா தோசையை நினைவுபடுத்தும் கிழிசல் பனியன் ஒன்று போட்டிருப்பான். வேஷ்டி ரொம்ப அழுக்காக இருக்கிறதே, திருப்பியாவது கட்டிக்கொள்ளக்கூடாதா என்றால் ""வேட்டிக்கு மூணு பக்கமா இருக்கு?'' என்று சிரிப்பான்.

இப்படிப்பட்டவனுக்கு ஒரு நாள் எங்கோ நேர்ந்த தப்பினால் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை கிடைத்தது. பெட்டி நிறைய பருப்புப் பொடி, ஊறுகாய்கள் நிரப்பிக்கொண்டு தொலைந்த பாப்பா மாதிரி முழித்துக்கொண்டு பிளேன் ஏறிப் போனான். ஐந்து வருடம் கழித்து லீவில் வந்தபோது சுந்தர், சுந்தர் மாதிரியே இல்லை. முக்கால் கால் பாண்ட் அணிந்து வாக்மேன், ரேபான், சிகரெட், சிக்லெட், மினரல் வாட்டர் பாட்டில் என்று வந்து சேர்ந்தான். பிச்சைக்காரிக்கு ஓரி வள்ளல் போலப் பத்து ரூபாயைத் தூக்கிக்கொடுத்தான். என்னடா என்றால் கலிபோர்னியாவில் நூறு கே சம்பளமாம்! அவன் பாஷையில் சொல்வதானால், ஆஸம்

சாப்ட்வேர் என்ஜினியர்களின் திடீர்ச் செல்வச் செழிப்புக்குக் காரணம், அவர்கள் எழுதும் மென்பொருள்கள் பரம அநியாய விலையில் விற்பதுதான்.மைக்ரோசாப்ட் கம்பெனி மட்டுமே ஒரு பிரதிக்கு ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை விதம்விதமான மென்பொருள்கள் விற்கிறார்கள். நாமும் கொஞ்சம் கம்ப்யூட்டரும் கொஞ்சம் சவடாலும் கற்றுக்கொண்டு அமெரிக்கா போனால் ஒரு நிமிடத்திற்கு ஐம்பது ரூபாய் வரை சம்பாதிக்கலாம். (அச்சுப் பிழையில்லை, ஒரு நிமிடத்திற்குத்தான்!)

இப்படி நிஜமாகவே காலம் பொன்னாக வேலை செய்யும் என்ஜினியர்களுக்கு ஒரு மறு பக்கமும் இருப்பது பல பேருக்குத் தெரியாது; அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள், ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளாமல் முற்றிலும் தர்ம சேவையாக மாய்ந்து மாய்ந்து மென்பொருள் எழுதுகிறார்கள். யார் வந்து கேட்டாலும் தண்ணீர்ப் பந்தல் மாதிரி வாரி வழங்குகிறார்கள். இவர்களின் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் "திறந்த மூலம்' இயக்கம் உலகம் பூராவும் பரவி, பலபேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

"திறந்த மூலம்' என்றால் ஏதோ பத்தியம் இல்லாத சித்த வைத்திய சமாச்சாரம் என்று நினைக்கவேண்டாம். கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பதில் இரண்டு கட்டங்கள் உண்டு. கம்ப்யூட்டர் வேலை செய்ய அதற்கு ஆணைத் தொடர்களை எழுதிக் கொடுக்க வேண்டும். முதலில் அவற்றை ஜாவா, ஸி போன்ற மனித மொழிகளில் எழுதுவார்கள். எளிய ஆங்கில வார்த்தைகளில் அச்சிடு, திற, தேடு, தூங்கு என்பது போல சிறு சிறு ஆணைகளாக இருக்கும். இதுதான் சோர்ஸ் கோட் எனப்படும் மூல ஆணைத்தொடர். ஒரு புத்திசாலியான பத்தாம் வகுப்புப் பையனால் ஒரு வாரத்தில் அடிப்படை ஜாவா கற்றுக்கொண்டு எளிய ப்ரோக்ராம்கள் எழுத முடியும்.

ஆனால் கணிப்பொறிக்கு ஜாவா கீவா எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் 10010110... என்று எண்களாகச் சொன்னால்தான் அந்த மெஷினுக்குப் புரியும். நம்முடைய மூல ஆணைத்தொடரை கம்பைலர் எனப்படும் கரும்புச்சாறு மிஷினில் கொடுத்து சக்கையை எடுத்து நடு ரோட்டில் எறிந்தபின் கிடைப்பது கணினி மொழிக்கு மாற்றப்பட்ட ப்ரோக்ராம். கடையில் போய் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்ற மென்பொருள்களை வாங்கும்போது அவர்கள் தருவதெல்லாம் இப்படி கம்ப்யூட்டருக்கு மட்டுமே புரியக்கூடிய கச்சா முச்சா வடிவம்தான். மூல ஆணைத்தொடரை வலுவான இரும்புப்பெட்டியில் பூட்டி அதன்மேல் நல்ல பாம்புகளை நெளியவிட்டுக் காவல் காப்பார்கள். அவர்களுடைய பணியாளர்களே கூட அநாவசியமாக நெருங்கிவிட முடியாது. மூல ஆணைகள் வெளியே தெரிந்து போய்விட்டால் சைபர் திருடர்கள் இன்னும் சுலபமாக பாங்குகளை எத்தித் திருடுவார்கள் என்றெல்லாம் சமாதானம் சொல்லப்பட்டாலும், பச்சையான காரணம் பச்சை நோட்டுதான்!

கடைச்சங்க காலத்தில் யுனிக்ஸ் என்று ஒரு ஆபரேடிங் சிஸ்டம் இருந்து வந்தது. இந்த ஆபரேடிங் சிஸ்டம் என்பது மென்பொருளுக்கெல்லாம் உட்பொருளாக இருக்கும் பரம்பொருள். இது இல்லாத கம்ப்யூட்டர், இஞ்சின் இல்லாத கார்மாதிரி. இவ்வளவு முக்கியமாக இருக்கும் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இலவசமாகக் கிடைத்து வந்தது. மூல ஆணைத்தொடர்களும் இருந்ததால்
காலேஜ் மாணவர்கள் ஆர்வத்துடன் யுனிக்ஸில் புகுந்து விளையாடி நிறையக் கற்றுக்கொண்டார்கள். பலர் தங்கள் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தந்து யுனிக்ஸ் முன்னேற்றினார்கள். விரைவில் யுனிக்ஸ் மிகவும் பிரபலமாகவே, ஏ.டி. அண்ட் டி கம்பெனியின் மூக்கில் டாலர் வாசனை எட்டிவிட்டது. இனிமேல் யாரும் யுனிக்ஸைத் திறந்து பார்க்கக் கூடாது, மூல ஆணைகளை வெளியிடுவது காப்பிரைட் குற்றம், மீறினால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் மிரட்டவே மனமுடைந்து போனார்கள் மாணவர்கள். யுனிக்ஸ் பற்றி புத்தகம் எழுதுவதற்குக் கூடத் தடை!

காப்பிரைட்டால் அடிபட்டுக் கடுப்படைந்த கம்ப்யுட்டர் வல்லுநர்கள் அங்கங்கே பாலத்துக் கைப்பிடிச் சுவர்களில் உட்கார்ந்து பேசி பதில் தாக்குதலை யோசித்தார்கள். அவர்கள் தீர்மானித்தது, சாப்ட்வேர் இயலில் சரித்திரம் படைத்த கொரில்லா போர் முறை: இனி பெரிய கம்பெனிகளை நம்பாமல் நாமே நமக்கு வேண்டிய எல்லா மென்பொருளையும் எழுதிக்கொள்வது. இன்டர்நெட் வழியே ஒத்துழைத்து ஆளுக்குக் கொஞ்சம் உழைப்பை தானம் செய்வது. இப்படித் தயாரிக்கப்படும் மென்பொருள்கள் உலகத்துக்கே பொதுச்சொத்து. யாரும்
தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடுவதோ, காப்பிரைட்டில் பூட்டுவதோ முடியாமல் கவனமாக ஓப்பன் லைசென்ஸ் விதிமுறைகளை அமைத்தார்கள்.

தொண்ணூறுகளில் மைக்ரோசாப்ட் மிகவும் வளர்ந்து தொண்ணூறு சதவிகித மார்க்கெட்டைப் பிடித்தபோது இதே இளைஞர்கள் பில் கேட்ûஸக் குறிவைத்துக் கல்வீச ஆரம்பித்தார்கள்.மைக்ரோசாப்டும் லேசுப்பட்ட பூதம் இல்லை. தன் மார்க்கெட்டைப் பாதுகாப்பதற்காக அது செய்யும் அடாவடிகள் உலகப்புகழ் பெற்றவை. நீங்கள் ஒரு சிறு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, அது கொஞ்சம் வளர்ந்து போட்டிக்குத் தயாராவது போலிருந்தால் பில் கேட்ஸ் வீட்டுக் கூண்டுக் கிளி கத்தும். உங்கள் முக்கியமான என்ஜினியர்களை பிகார் எம்.எல்.ஏ.க்கள் மாதிரி நல்ல விலைக்கு வாங்கிவிடுவார்கள்.

அல்லது உங்கள் கம்பெனியையே மேஜை நாற்காலி உள்பட மொத்தமாக விலைபேசித் தரைமட்டமாக்கி ஆமணக்கு விதைத்து விடுவார்கள். அதைவிட பயங்கரமாக "நெட்ஸ்கேப் அடி' என்று ஒரு வர்ம அடி கற்றுவைத்திருக்கிறார்கள். அது என்ன அடி என்று கேட்கிறீர்களா? அதைச் சொல்லவந்தால் கட்டுரை 2 பக்கத்தைத் தாண்டிவிடும். உங்கள் எடிட்டர் லபலபவென்று அடித்துக் கொள்வார்.
அதனால் மர்ம அடி ரகசியம் அடுத்தவாரம்

கட்டுரைக்கான சுட்டி: http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20050721061836&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0


Saturday, July 23, 2005

வரப்போது வரப்போது மைக்ரோசாப்ட் விஸ்டா

2001ல் மைக்ரோசாப்டால் லாங்க்கார்ன் என்ற நிரல்பெயரிட்டு (Codename) 2004ல் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட விண்டோஸின் அடுத்த இயக்குதளம் மைக்ரோசாப்ட் விஸ்டா என்ற பெயரில் 2006 ஆண்டு வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லாங்க்கார்ன் என்ற அதன்பெயரை லாங்க்க்க்க்க்க்க்க்வெய்ட் என்று எல்லோரும் போட்டு நக்கலடித்ததால் நொந்து வெந்து போயிருக்கும் மைக்ரோசாப்ட் அபிமாணிகள் இனி சந்தோசப்பட்டுக்கொள்ளலாம்.


துல்லியம், நம்பிக்கை, இணைப்பு: உங்கள் உலகத்திற்கு துல்லியத்தைக் கொண்டுவரப்போகிறது என்ற அறிவிப்போடு மைக்ரோசாப்ட் விஸ்டா என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை வெளியீடு வரும் ஆகஸ்டு மூன்றாம் தேதி வெளிவருகிறது.

WinFS என்ற புதிய கோப்புமுறை, Avalon என்ற புதிய படசம்பந்தமான இயந்திரம், Indigo என்ற புதிய வலைச்சேவை முறை தருவோம் என்று மைக்ரோசாப்ட் சல்லியடித்தாலும் எனக்கென்னவோ, விண்டோஸ் எக்ஸ்பியின் அடுத்த சர்வீஸ்பேக் ஒரு புதிய பெயரில் வெளியிட்டு மைக்ரோசாப்ட ஒரு சாதனை படைக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. மணிசித்திரதாலு சந்திரமுகியாகி கேரளாவிலேயே 100 நாட்களுக்கு மேல் ஒடிக்கொண்டு இருப்பது இதை உறுதிசெய்கிறது. :)

Saturday, July 16, 2005

க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலான கணிணி அகராதி

  1. கணிணி பற்றிய சொற்கள், கணிணி மொழிகள், கணிணி பொருட்கள்,கட்டமைப்பு, இயக்குதளம், வலையமைப்பு, கணக்கியல், தொலைத்தொடர்பு, கணிணி நிறுவனங்கள்,கணிணி வரலாறு என கணிணி பற்றிய ஒரு முழுமையான கணிணி அகராதித் தொகுப்பு உங்களுக்கு வேண்டுமா ?
  2. இவைகள் தேடுதல் முறையில் அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
  3. ஒவ்வொரு சொல்லும் தொடர்புடைய எல்லாச் சொல்லோடும் இணைக்கப்ப்ட்டிருக்க வேண்டுமா?
  4. அந்தச் சொல்லோடு தொடர்புடைய வலைச்சுட்டிகளும் வேண்டுமா?
  5. புத்தகக் கணிணி அகராதிகளை விட கொஞ்சம் குறைந்த சொற்களும் என்சைக்ளோபீடியாவைப்போன்று விரிவான தகவல்களோடு ஒரு கணிணி அகராதி வேண்டுமா?
  6. விக்கிபோன்ற இலவச திறந்தகோப்பின் அடிப்படையில் அமைந்த என்சைக்ளோபீடியாவில் அதிகளவு எடுத்துப் பயன்படுத்தப்பட்ட கணிணி அகராதி வேண்டுமா?
  7. அதை உங்கள் கணிணியில் வலையிறக்கம் செய்து வேண்டும்பொழுது பயன்படுத்தவிரும்புகிறீர்களா?
  8. உங்கள் நண்பர்களுக்கு,குடும்பத்தினருக்கு சுதந்திரமாக பதிவுசெய்து தரவிரும்புகிறீர்களா?
  9. புதிய புதிய கணிணிச் சொற்களை நீங்களும் தரக்கட்டுப்பாட்டிற்குப்பின் இணைத்து, நீங்களும் பங்கு கொள்ள விரும்புகிறீர்களா?

இவை அனைத்திற்கும் ஒரேபதில் க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலான FOLDOC இலவசக் கணிணி அகராதி.

டெனிஸ் ஹோவ் என்பவரால் 1985 முதல் தொகுக்கப்பட்டு 12,000 சொற்களுடன் சுமார் 1200 பேர்களின் பங்களிப்பிடனுடன் க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலானது FOLDOC இலவசக் கணிணி அகராதி.இது லண்டன் இம்பீரியல் கல்லூரியின் கணிணித்துறை லினக்ஸ் வழங்கியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலான அகராதி என்பதால் கணக்கற்ற மற்றக் கணிணியிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகராதி தொடர்புடைய சுட்டிகள்:
http://foldoc.doc.ic.ac.uk/foldoc/index.html
http://www.foldoc.org/

அகராதியைப் பதிவிறக்கம் செய்ய சுட்டி:
http://foldoc.doc.ic.ac.uk/foldoc/source.html

க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமை அடிப்படையில் வெளியிடப்படும் புத்தகங்கள்,செய்முறை விளக்கக்கையேடுகள் சுதந்திரமாக ஒவ்வொருவராலும் நகலெடுக்கப்பட்டு எல்லோருக்கும் அப்படியோ அல்லது மாற்றங்களுடனோ வியாபாரநோக்கிலோ, வியாபாரநோக்கமின்றியோ கொடுக்கலாம் என்பது எல்லாரும் அறிந்ததே. க்னூ சுதந்திரக்கோப்பு காப்புரிமையிலானவைகளும் தற்போது திறமூல மென்பொருள்களுடன் சேர்ந்து ஒரு சுதந்திரமான சமுதாயத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. விக்கி போன்றவைகளின் வெற்றி இதை உறுதி செய்கின்றது.


தமிழிலும் தமிழில் எழுதுபவர்களை ஊக்குவிக்க இதுபோன்றதொரு தமிழ்க்கணிணி அகராதியினை உருவாக்கும் முயற்சியினை யாரவது செய்வார்களா? எளியேன் செய்வதைவிட சான்றோர்கள் யாரேனும் ஒருவர் ஏன் இதற்கு அடிக்கல் நாட்டக்கூடாது?

கும்பகோணம் தீவிபத்து - முதலாம் ஆண்டு அஞ்சலி

கும்பகோணத்தில் சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளியில் எரிந்து கருகிய 90 இளம் மொட்டுகளுக்கு தமிழ்வலைப்பதிவர்களின் சார்பாகவும், தமிழ்மணத்தின் சார்பாகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீரோடும் எங்கள் இதயம் நெகிழ்வுடனும் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறோம்.


Wednesday, July 13, 2005

ஆட்டோகிராப் படத்துக்கு 3 தேசிய விருதுகள்

2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது.இதில் ஆட்டோகிராப், படத்துக்கு 3 விருதுகள் கிடைத்து உள்ளது.

விருது பெற்றவர்களின் விபரங்கள்

சிறந்த நடிகராக சாயிப் அலிகான் தேர்வு செய்யப்பட்டார் (படம்: ஹம்தும்)
சிறந்த நடிகையாக கன்னட நடிகை தாரா (படம்:ஹசீனா)
சிறந்த படமாக இந்தி படம் பேஜ்3
சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் மற்றும் இந்தி படம் வீர் சாரா தேர்வு பெற்றது
சிறந்த பின்னணி பாடகர் உதித் நாராயணன்(படம்:யாக் தாரா ஓக் தாரா)
சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்)
சிறந்த இயக்குனராக புத்தாவ் தேவ் தாஸ் குப்தா (பெங்காலி படம் ஸ்வப்னர் தின்)
சிறந்த குழந்த நட்சத்திரம் சோட்டா சிபய்
சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்)
நர்கிஸ் தத் விருது பெற்ற படம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இதில்,

சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் மற்றும் இந்தி படம் வீர் சாரா தேர்வு பெற்றது
சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்)
சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்)

வழக்கம்போல தமிழகம் 3 விருதினைப் பெற்று சாதித்துள்ளது.ஒவ்பொருவருடமும் தேசியதிரைப்பட விருதுகளின் கதவுகள் தமிழகத்துக்காகத் தமிழுக்காகத் திறக்கப்படுவது என்னை மிகவும் சந்தோசத்தில் ஆழ்த்துகிறது.

எல்லோரும் எதிர்பார்த்ததுபோல பா.விஜயின் ஒவ்வொரு பூக்களுமே.. பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்,
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

உள்ளம் என்பது எப்போதும்
உடைந்து போகக்கூடாது,
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக்கூடாது!
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயமில்லை சொல்லுங்கள்!
காலப் போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்!

உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும்,
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்!
யாருக்கில்லைப் போராட்டம்!
கண்ணில் என்ன நீரோட்டம்!
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ! அது பனியோ! நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

மனிதா! உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் அடைந்தால் நீ
எல்லாமே உரமாகும்!
தோல்வியின்றி வரலாறா!
துக்கம் என்ன என் தோழா!
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்!

மனமே! ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ நீ மோதிவிடு!

ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே!
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
இலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்!

மனமே ஓ! மனமே! நீ மாறிவிடு!
மலையோ அது பனியோ? நீ மோதிவிடு!

பாடல் உதவி : ( சந்திரவதனா அக்கா அவர்கள் )

இந்தப் பாடல் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக உள்ளதாக கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தன்னுடைய பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் முதல் தாள் பாடத் திட்டத்தில் செய்யுள் திரட்டு என்ற தலைப்பிலான பிரிவில் இடம்பெற்றுள்ள 50 கவிதைகளில் ஒவ்வொரு பூக்களும் பாட்டும் இடம் பெற்றுள்ளது.மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 84 கல்லூரிகளில் தமிழ் முதல் தாளில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப் பாடலை பாடத் திட்டத்தில் சேர்க்க பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட்டும் அனுமதி அளித்துவிட்டது.அதே போல தமிழகத்தின் பல பள்ளிகளில் காலை நேரத்தில் நடக்கும் பிரேயர் செஷனில் இந்தப் பாடலையே மாணவ, மாணவிகளை பாட வைத்து வருகின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

மேலும் விபரங்களிக்குப் பார்க்க
http://www.hinduonnet.com/thehindu/holnus/009200507131713.htm

பாடல்கள் கேட்க
http://www.raaga.com/channels/tamil/movie/T0000555.html

Monday, July 11, 2005

காசிக்கு சில கேள்விகள் - மாலனின் கேள்விகள் பற்றி

திரு. மாலன் அவர்களின் "காசிக்கு சில கேள்விகள்" என்ற பதிவினைப் படித்தபின் எனக்கு தோன்றியவைகளை எழுதியுள்ளேன். தவறிருந்தால்,கண்ணியத்துடன் சுட்டிக்காட்டினால் தவறாமல் ஏற்றுக்கொள்வேன்.

முதலில் மாலன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். தமிழ் மற்றும் தமிழ்வலைப்பூக்களின் மீதான அவர்களின் பற்றும், வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக எப்பொழுதும் இன்று போல தொடருங்கள், எந்தத் தடைவந்தாலும். தங்களைப்போன்ற திறமைமிக்க,அனுபவசாலிகளின் அனுபவவழிகாட்டல்கள் புதியவர்களான எங்களுக்கு மிகவும் அவசியம்.

இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வது

கண்டிப்பாக இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் இருவேறுபட்ட கருத்துக்கள் உள்ளது. அதில் கண்டிப்பாக நிறைய நடைமுறைச்சிக்கல்கள் எழலாம். எல்லாத்தரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்டுப் பின் வள்ளுவனின் இந்த வாக்கின்படி முடிவெடுக்கலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

தாங்கள் கேள்விகள் கேட்டுள்ளது தமிழ்மண நிறுவனர் மற்றும் நிர்வாகிக்காக, அதில் நான் எனது கருத்தினை மட்டுமே ( என் மனதில் தோன்றியவைகளைச்) சொல்லியுள்ளேன்.

//////////////////////
1. தமிழ்மணத்தில் தொகுக்கப்படும் பதிவுகளில் ஆபாசப் பின்னூட்டங்கள் இடம் பெறுவது குறித்து அவர்களது கருத்து/ நிலை என்ன?
2.ஒருவருடைய பெயரைத் திருடி இன்னொருவர் பின்னூட்டம் இடுவதைப் பற்றி அவர்களது நிலை என்ன?
///////////////////
முழுக்க முழுக்க தனிமனித ஒழுக்கம் சார்ந்தவைகள் இவைகள். பொதுக்கழிப்பறைச் சுவற்றிலும், பேருந்து மற்றும் திரையரங்க இருக்கைகளிலும் கீழ்த்தரமாக கிறுக்கும் முறை சார்ந்ததே இவைகள். இதற்குத் தொழில்நுட்பரீதியாக தமிழ்மணம் ஒன்றும் செய்ய இயலாது என நினைக்கிறேன்.

ஆனால் திரு.மாலன் அவர்கள் தமிழ்மணநிலை என்ன என்பதைக் கேட்டுள்ளார். இதில் தமிழ்மணம் மட்டுமல்ல எல்லோரின் நிலையும் ஒன்றுதான்.
இது முற்றிலும் அறவே ஒழிக்கப்பட வேண்டியது & வேரோடு களையப்பட வேண்டியது.

தமிழில் அனைவரும் தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை எந்தத் தடையுமில்லாமல் , எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சுதந்திரமாக பதிய ஒரு நல்ல வாய்பு இந்த வலைப்பூக்கள். அதைத் தரமான வாசகர்களுக்கு கொண்டுசென்றிட தமிழ்மண சேவை. இது ஒரு சிலரின் பொறுப்பற்ற செயல்களால் கேள்விக்குள்ளாக்கும் போது மனது வருத்தமடைகிறது.

பாரதியின் இந்தப்பாடலைக் கேட்டு (தற்காலிகமாக) மனஆறுதல் அடைகின்றேன்.

சுதந்திரப் பயிர்

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கி·து மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?

எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?

வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

//////////////
3.இது போன்று இனி நடக்காது தடுப்பதற்கு அவர்கள் என்ன உத்திகளை வைத்திருக்கிறார்கள்?
//////////

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்றால் கள்ளந்தான் பெரிது என்பேன்.

இதைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்த முடியாது, ஏதாவது இன்னொரு வடிவத்தில் வந்துகொண்டே இருக்கும். ஒரே மருந்து சுயஒழுக்கம்.
இது இப்போது எய்ட்ஸ்போல மருந்தில்லாமல் உள்ளது (என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய வரையில்), ஆனால் கூடியவிரைவில் கண்டிப்பாக நல்ல மருந்து / மாற்று கண்டுபிடிக்கப்படும்.

விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக யாரும் சாலையில் போகாமலில்லை. கண்டிப்பாக எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளுவோம்.

///////////////
4.சென்னை சந்திப்பில் பின்னூட்டங்களின் என்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் இடுவதை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அது நடைமுறைப்படுத்தப்படுமா? ஆம் என்றால் எப்போதிலிருந்து?
///////////////////
எனக்குத் தெரிந்த வகையில் பின்னூட்டங்களின் என்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் இடப்படுவதில்லை. அந்தப்பட்டியல் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் மட்டுமே இடப்படுகிறது என நினைக்கிறேன். மேலும் நட்சத்திரங்களின் அடிப்படையில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 வாசகர் பரிந்துரை மட்டுமே இடப்படுகிறது.

////
5.பின்னூட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்யும் மாற்றுப் பதிவுகளை (யாகூ 360, லைவ் ஜர்னல்) தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமா? சாத்தியம் என்றால் அவை இணைத்துக் கொள்ளப்படுமா? அல்லது தமிழ்மணம் பிளாக்கர் பதிவுகளுக்கு மட்டும்தானா?
////
தமிழ்மணம் கண்டிப்பாக பிளாக்கர்களுக்கு மட்டுமல்ல. பிளாக்கர், வெப்பிளாக், நியுக்ளியஸ் போன்ற திறமூலம் சார்ந்தவை மற்றும் யாழ் என செய்தியோடைகளை வழங்கும் அனைத்திற்கும் தொடர்பினை வழங்குகிறது. யாகூ 360ல் பதியப்பட்ட பதிவுகளுக்கும் தொடர்பு தருகிறது. யாகூ 360ல் பதியப்பட்ட திலகபாமாவின் (http://blog.360.yahoo.com/mathibama) பதிவுகள் நம் தமிழ்மணத்திலிருந்து தொடுப்பு வழங்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்கின்றது. காசி ஏற்கனவே தங்களின் சென்னைச் சந்திப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்.
-----
யாகூ முதன்முறையாக இந்த் 360ல்தான் யூனிகோடுக்கு இடமளித்துள்ளது என்பதை பத்ரி சுட்டிக்காட்டினார்.
யாகூ 360ல் ஆர்.எஸ்.எஸ். வசதி இல்லை என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதில் அந்த வசதி இருக்கிறது, அதையும் தமிழ்மணத்தில் சேர்ப்பது பிரசினை இருக்காது என்று நினைக்கிறேன். அதில் உள்ள அக்ரிகேட்டர் யூனிகோடை புரிந்து கொள்கிறது. ஆனால் UTF-8 எனக் குறிப்பிடாததால் அது தலைப்பில் உள்ள சில வார்த்தைகளையோ, எழுத்துக்களையோ மட்டும் எடுத்துக் கொள்கிறது என்றும் காசி தெரிவித்தார்.
-----------

Sunday, July 10, 2005

எல்லாத்தரப்பினரையும் சென்றடைந்துள்ளதா?


http://www.hindu.com/lf/2005/06/30/stories/2005063012420200.htm

வெளிப்பக்கத்தில் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மாட்டுவண்டியில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்

உள்ளே இன்றைய இந்தியாவின் கணிணி எழுச்சி

இந்தியாவின் இந்த எழுச்சி எல்லாத்தரப்பினரையும் சென்றடைந்துள்ளதா?

இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது என்மனதில் தோன்றிய பாட்டு:

அன்னாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினிலே ஒர் குடிசையிட்டு
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..


மைக்ரோசாப்டின் WinCE போட்டியில் டெல்லி மாணவர்கள் 2ம் இடம்

மைக்ரோசாப்ட், மிண்ணணு மற்றும் மின்பொறியாளர் கழகத்துடன் சேர்ந்து WINCE (Windows Embedded ChallengE) என்ற உலகலாவிய அளவிலான போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததே. போட்டி விண்டோஸ் CE இயக்குதளம் சார்ந்த கையடக்க கருவிகளுக்காக நடத்தப்பட்டது. உலகெங்கும் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் இறுதிச்சுற்றுக்கு சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த 30பேரில் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்டின் தலைமையகத்தில் போட்டி நடந்தது.

இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம், 10 போட்டியாளர்கள் சீனாவிலுமிருந்தும், ஆறு பேர் அமெரிக்காவிடமிருந்தும், ரொமேனியாவிலிருந்து ஐந்தும், இந்தியாவிடமிருந்து மூன்றும் , ஆஸ்திரேலியாவிலிருந்து இரண்டும் , மெக்சிகோ, ஸ்லோவேனியா, துருக்கி மற்றும் பிரேசிலிருந்து தலா ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சீனா இந்தியாவின் மென்பொருள் சந்தைக்கு ஒரு பெரிய போட்டியாளராக மாறிக்கொண்டிருக்கிறது.

இவர்களில் டெல்லி நேதாஜி சுபாஸ் தொழில்நுட்பக் கல்லூரியைச்சார்ந்த மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றனர். அவர்களின் "விபரநிலையம் (Info Station)" என்ற தொழில்நுட்பத்திற்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. அவர்களுக்கு சுமார் 6000$ பரிசும் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சுடன் பேசும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 8000$ மதிப்புள்ள முதல் பரிசு ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மெல்போர்ன் தொழில்நுட்பக் கழகத்திற்குக் கிடைத்துள்ளது.

இதைப்பற்றிய இந்துநாளிதழ்ச் செய்திக்கு : http://www.hindu.com/2005/07/10/stories/2005071001591100.htm

இறுதிப் போட்டியாளர்கள் சமர்ப்பித்த கட்டுரைகளின் PDF வடிவங்களுக்கு: http://www.windowsfordevices.com/news/NS9173943327.html

Thursday, July 07, 2005

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
காவடிப் பாரம், சுமக்கிறவனுக்குத் தெரியும்..

அப்படின்னு சொல்லுவாங்க. சமீபகாலமாக தமிழ்மணத்தில் நடைபெற்ற ஆரோக்கியமற்ற சிலரின் ஆரோக்கியமற்ற செயல்களால் மனம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐயன் வள்ளுவன் சொன்ன உற்சாக வார்த்தைகள்.

16. பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

நிறையுடைமைநீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

63. இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்.
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்.
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்.
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

Friday, July 01, 2005

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு

சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு

ரஜினிப்பாட்டு எழுதி படங்காட்டலங்க, ஜல்லியும் அடிக்கலங்க.

இன்னைலைருந்து (ஜுலை 1 முதல் ஜூலை 10 , 2005) முதல் நெய்வேலியில் எட்டாவது புத்தகக் கண்காட்சி நடைபெறப்போகிறது. அதை முன்னிட்டு இன்றைய இந்துநாளிதளில் வெளியான செய்தகள் பற்றிய சுட்டிகள். http://www.hindu.com/2005/07/01/stories/2005070102530500.htm மற்றும் http://www.hindu.com/2005/07/01/stories/2005070102540500.htm

இவைகளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகின்றேன். எவ்வளவு சத்தியமான உண்மை? என்னைப்பொறுத்த வரையில் நூற்ற்றுக்கு இருநூறு சதவீதம் உண்மை.

நான் புனைவல்லாத (Non-Fiction Documentry Types ) விசயங்களை (மட்டுமே) விரும்பிப் படிப்பவன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்).

1. தொலைக்காட்சி ( நான் சொல்வது நேசனல் ஜீயோகிராபிக், அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரி ) முதலிய ஊடகங்கள் கண்டிப்பாக எனக்கு புதிய தகவல்களையும் புதிய பாதைகளையும் திறக்கின்றன.

2. இண்டர்நெட் முதலியன மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள உதவுகின்றன.

3. ஆனால் கடைசியாக சரணாகதி அடைய விரும்புவது புத்தகங்களிடமே..

எடுத்துக்காட்டாக,

(நான் இயற்கை சம்பந்தப்பட விசயங்களில் அதீத ஆர்வம் உடையவன். பார்க்க பிளாக்கரில் என்னைப்பற்றி)

1. அன்னியனில் கூறப்பட்ட அட்டைகளைப் பற்றிய தகவல்கள் . படம் பார்க்கும் போது அதைப்பற்றி மேலும் அறிய ஆவலூட்டின.

2. இரண்டாவதாக இணையத்தில் தேடியாச்சு, படிச்சாச்சு.. ( விக்கியம்மனும், கூகுலாண்டவருமே எப்போதும் துணை).

3. ஆனால் இவைகளைப்பற்றி இன்னும் அறிய புத்தகங்கள் இருந்தால் ரெம்ப நல்லது.

இணையத்திலே எல்லாம் இருக்கிறது.. பின்பு புத்தகங்கள் எதற்காக என்பதற்கு ,

1. இன்னும் இணையம் , கணிப்பொறி இல்லாதவர்களுக்கு புத்தகங்கள், நூலகங்கள் மட்டுமே துணை.
2. புத்தகங்கள் ரெம்ப அன்யோன்யம்.. அது தரும் நெருக்கத்திற்கு வேறு ஈடு இணை இல்லை.

சிங்கநடை போட்டு சிகரத்தை அடைய, தூண்ட தொலைக்காட்சி மற்றும் சினிமா( நல்ல.. ), இணையம் பயன்படலாம், ஆனால் அதில் வானம் அடைய புத்தகங்களே சரி.. ( அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு.. )

கடைசியாக,
இந்த எட்டாவது நெய்வேலி புத்தகக்கண்காட்சியில் சிறந்த பதிப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நம் பத்ரியின் கிழக்குபதிப்பகத்திற்கும், நம் பத்ரிக்கும் தமிழ் மணம் மற்றும் தமிழ்மாலை சார்பாகப் பாரட்டுகள்.


மேலும் சிகரங்கள், வானங்கள் ஏற வாழ்த்துக்கள்.

என் திறமூல ஆதரவுக் காரணம்

நான் ஏன் திறமூலம், தளையறு மென்பொருள்களுக்கு ஆதரவு தர்ரேன்னு தெரியுமா? இதில நான் சொல்றதுக்குப் புதுசா ஒண்ணும் இல்ல? வெங்கட் ஏற்கனவே 4 1/2 வருசத்துக்குமுன்னாடி இருந்துட்டே சொல்லீடு வர்றாரு. என்னோட நிலைப்பாடும் அதேதான்..(நன்றி திண்ணை மற்றும் வெங்கட்)

இன்றைக்குப் பிழைப்பிற்காக பல ஆயிரக்கணக்கான் மைல்கள், கடல் கடந்து வாழும் நம் எல்லோரையும் ஒன்றிணைக்க சில வழிகள்தான் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று நம் தாய்மொழியில் கணினி (மற்றும் அறிவியல்) முன்னேற்றத்திற்குப் பங்களிப்பது

1. நான் தமிழகத்தில் தொடக்கக் கல்வி கற்றேன். என்னுடைய படிப்புக்கு அரசாங்கம் (அதாவது நம் சமூகம்) எவ்வளவு உதவியது என்பதை நான் இப்பொழுது உணர்கின்றேன். என்னாலான வகையில் மறுநன்றியாக என் சமூகத்திற்குச் சிறிய உதவி இது.

2. நான் தமிழை நேசிக்கிறேன், அது ஒரு நல்லமொழி என்று எண்ணுகின்றேன். உலகின் பழம்பெரும் மொழியான அதனால் இன்றைய தகவல் புரட்சியையும் எதிர்கொள்ள முடியும் என நம்புகின்றேன். அந்த வகையில் இது.

3. உலகின் மற்ற நாடுகளையும் சமூகங்களையும்விட எந்த வகையிலும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை நாம்; எனினும் நம் சமூகம் பாழ்பட்டுக்கிடக்கிறது. இது மாறவேண்டுமென நான் விரும்புகின்றேன். வெறும் சொற்களால் புலம்புவதைவிட யாருடைய தடைகளும் இன்றி என்னாலான சிறிய பங்களிப்பு இது.

4. லினக்ஸ் ஒரு சக்திவாய்ந்த இயக்குதளம் இதற்குப் பங்களிப்பதாகத் தொடங்கினால் விரைவில் இதன்மூலம் கணினி நுட்பத்தின் பலகூறுகளை நான் கற்க முடியும். ஆணைமூலங்கள் திறந்தனவாகக் கிடைப்பதால் என்னால் ஒவ்வொரு கேள்விக்கும் விடைகாண முடியும். என்னுடைய அறிவு வளர்ச்சிக்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இதனால் என்னுடைய வேலைவாய்ப்புச் சாத்தியங்களும் அதிகரிக்கின்றன.

5. இவ்வாறு தொடங்கிய நான் இதிலுள்ள பல குறைகளைக் கண்டிருக்கின்றேன்; இதற்கு யார்வேண்டுமானாலும் நல்ல தீர்வை முன்வைக்க முடியும் என்பதால் என்னுடைய தீர்வைக் கூறினேன். பலராலும் விவாதிக்கப்பட்டு, சில மாற்றங்களுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றைக்கு என் சிந்தனையில் உருவான ஒரு சிறிய கருத்து உலகெங்கிலும் உள்ள லினக்ஸ் பயனர்களின் வேலையை எளிதாக்குவதை அறிகின்றேன். இது எனக்கு அளவிட முடியாத மனநிறைவைத் தருகின்றது.

6. எனக்கு கணினிகள் பற்றி அவ்வளவாகத் தெரியாது, எனினும் நான் விபரம் தெரிந்தவர்கள் வேறு மொழியில் எழுதிய உதவிக் கட்டுரைகளை என்னுடைய மொழியில் மாற்றினேன். இப்பொழுது இது என்னைப்போன்ற பலருக்கும் உதவியாக இருக்கின்றது.

7. சிந்தனைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சிந்தனையில் உதித்த எண்ணங்களுக்கு ஏன் விலை. அடிப்படை கணக்கு/அறிவியல் விதிகளைக் கண்டுபிடித்தவர்கள் அதைப் பிறர் பயன்படுத்த விலை விதித்திருந்தால் இன்றைக்கு நம் அறிவு இந்த அளவிற்கு மேம்பட்டிருக்குமா? நான் எனக்கு முந்தைய பல அறிஞர்களின் தோள்களில் நின்றுகொண்டிருக்கின்றேன் - என்னுடைய தோளையும் பிறர் ஏறிநிற்க வழங்குவதில் பெருமிதம் அடைகின்றேன்.இப்படி பலப்பல.

மேலும் மேலாதிக்க விபரங்களுக்கு பார்க, மறுபடியும் நன்றி திண்ணை மற்றும் வெங்கட்) முதலில் இதைப் படியுங்கள்.
எங்க நாட்டிற்கு அதன் எதிர்கால வளத்திற்குப் பாடுபட எதோ என்க்கு தெரிந்த வழி இந்த திறமூலம்தான்.

நான் எப்பவும் Classக்காக சிந்திக்க மாட்டேன். Massக்காகவே சிந்திப்பேன்.

நான் எப்பவும் வாஜ்பாயி மற்றும் சந்திரபாபு செய்த தப்பைக் கண்டிப்பாகச் செய்ய மாட்டேன். இந்தியா கணிணித் துறையில் வளருகிறது, ஆனால் அந்த வளர்ச்சியின் பயனை எல்லாருக்கும் கொண்டு சேர்க்கிறோமா? உலகம் கணிணி மயமாகிறது. கணிணி ஆடம்பரப் பொருளல்ல அது ஒரு அத்யாவசியமான சாதனமாக மாறி விட்டது. சாதரண மாநில அரசுப் பாடத்திட்டத்தில் படிப்பவரே அதிகளவு உள்ளனர். அவர்களுக்கு கணிணியின் பயனை எப்படிக் கொண்டு சேர்ப்பது? யார் கொண்டு சேர்ப்பது? நாம் போதாது என்று கழித்துப் போடும் 386,486 கணிணியில் திறமூல லினக்ஸ் போன்றவைகள்தான் சிறந்த தீர்வு. திறமூலம்தான் Horses for the Courses.

திருட்டு மென்பொருள் பயனர்களுக்கு மாற்று திறமூல மென்பொருட்கள்

இந்தியாவில் 70%, முன்னேறிய அமெரிக்காவில் கூட 25% இது திருட்டு மென்பொருட்கள் இந்தியாவில் பயன்படுத்துபவர்களின் சதவீதம். ஆக காசு கொடுத்து மென்பொருள்கள் வாங்குபவர்கள் இந்தியாவில் மொத்தம் 30%ம்தான்.நீங்கள் இந்த 70%ல் இருந்தால் முதலில் அதை திருத்திக்கொண்டு வாருங்கள். பிறகு பேசுங்கள். உங்கள் வீட்டுக்கணிணி,மடிக்கணிணியில் பயன்படுத்தும் விண்டோஸ், ஆபிஸ், நார்ட்டன் முதலியன எல்லாவற்றீர்க்கும் நீங்கள் கொடுத்த விலையைச் சொல்லுங்கள். பிறகு எங்களைக் குற்றம் சொல்லுங்கள். நாங்கள் 70% திருட்டுத்தனமாக திருட்டு மென்பொருள் பயன்படுத்துபவர்களிடம் மானத்தோடு விடுதலை உணர்வோடு திறமூல மென்பொருள் பயன்படுத்தச் சொல்வதா அரைவேக்காட்டுத்தனம்..?

முடிவாக,

நான் எனது 1 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு ஒரே ஒரு தனிநிறுவனத்துக்கு அடிமையாகமல் தன்னிரைவு அடையப் பாடுபடுவர்களுக்காக அணிலாகப் பாடுபடவேன். அதற்கு நான் இப்பொழுது ஏற்றதாகக் கருதுவது திற்மூலம். அதைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு மாற்று உங்களால் கூற முடியுமா? இருந்தால் அதை ஏற்றுக்கொள்வதில் முதல் ஆளாக நான் இருப்பேன்.

கேரளா - திறமூலத்திற்கு வழிகாட்டுகிறது

நமது அண்டைமாநிலமான கேரளா எல்லா மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக ஒரு திட்டத்தை(IT@school) ஏற்படுத்தி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.கேரளாவில் 8,9 மற்றும் 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணிணி அறிவியலும் ஒரு கட்டாயப்பாடமாக இடம் பெறுகிறது.அதில் விண்டோஸ் மற்றும் திறமூல லினக்ஸ், ஆபிஸ் மற்றும் திறமூல ஒபன்ஆபிஸ் பற்றிய பாடத்திட்டங்கள் தற்போது உள்ளன.

கேரளா முழுவதும் சுமார் 2600 மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவைகள் அனைத்திற்கும் மைக்ரோஸாப்ட் விண்டோஸ் , ஆபிஸ் போன்ற மூடப்பட்ட வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் செலவு சுமார் 100 கோடிகள். மென்பொருள் உரிமம் மட்டுமே. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இந்த ஆண்டு 8ம் வகுப்பு கணிணி அறிவியல் முழுவதும் திறமுல செயலிகளுக்கு மாறுகிறது, அடுத்த ஆண்டு 9 ம்வகுப்பு அதற்கு அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு. அதனால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 8,9,10ம் வகுப்புகள் முழுவதும் திறமூலம் சார்ந்த படிப்பே.

எனவே வணிக மென்பொருள் வாங்கினால் ஆகும் அந்த 100 கோடியை திறமூல முறையினில் மிச்சம் செய்து, அதை கணிணி ஆசிரியர்களுக்குத் திறமூலப் பயிற்சி மற்றும் பொதுக்கட்டமைப்பு முன்னேற்றம் என பயனுள்ள வழியில் செலவிடுகின்றனர்.Model Engineering College, எர்ணாகுளத்தில் மே 16 முதல் ஜூன் 4 வரை 200 பேருக்குத் திறமூலமென்பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு விட்டது. இவர்கள் ஒவ்பொரு மாவட்டத்திலும் உள்ள 4,000 பேர்களுக்குப் பயிற்சி அளிப்பர்.

ஏற்கனவே கோவாமாநில அரசு உபயோகமற்ற பழைய கணிணிகளில் எப்படித் திறமூலமென்பொருள்களால் அதை உபயோகிக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.கேரளா அரசின் கல்வித்துறை மே 28 முதல் 30 வரை கொச்சி டெக்னோபார்க்கில் பிரேசில், வெனிசுலா, இத்தாலி நாட்டினரோடு ஒரு கலந்தாய்வுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மற்றவர்கள் ஏற்கனவே பள்ளிகளில் திறம்மூல மென்பொருளை பயன்படுத்துவதில் அனுபவம் உள்ளவர்கள்.

கேரளாவில் 10ம்வகுப்பு மாணவன் திறமூல மென்பொருள்களை பயன்படுத்துவதில் முண்ணணியில் உள்ளனர். ஆனால் நாம் இன்னும் யோசித்துக்கொண்டே (தூங்கிக்கொண்டு) இருக்கிறோம்........

அவர்கள் ஏற்படுத்தியுள்ள பாடநூலைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.

இந்தத் தளத்தில் மலையாள, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடத்திட்ட 10ம் வகுப்பு நூல்கள் உள்ளன.தமிழ்வழிப்பாடத்திட்டத்தில் கணிணி மொழிபெயர்ப்பைக் கவனியுங்கள். மிகவும் அருமை.

லினக்ஸ், ஒபன் ஆபிஸ் மற்றும் உலாவிகள் தமிழிலேயே நம்மிடம் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் இதைப் படிப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இருக்கப் போவது இல்லை. தமிழ்நாட்டில் எப்போது இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை அமல் செய்யப் போகிறார்கள்?

இவைகள் அமல்செய்யப்பட வேண்டும். அதுதான் திறமூலங்களுக்காக சுயநலமில்லாமல் பாடுபடுபவர்களுக்கு நாம் செய்யும் நன்றி.

இலவசமாக மீன்கள்(புத்தகங்கள்) கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது எவ்வளவோ மேல்..

மேலும் விபரங்களுக்குப் பாருங்கள்
http://www.hindu.com/2005/05/24/stories/2005052410940400.htm