Monday, July 11, 2005

காசிக்கு சில கேள்விகள் - மாலனின் கேள்விகள் பற்றி

திரு. மாலன் அவர்களின் "காசிக்கு சில கேள்விகள்" என்ற பதிவினைப் படித்தபின் எனக்கு தோன்றியவைகளை எழுதியுள்ளேன். தவறிருந்தால்,கண்ணியத்துடன் சுட்டிக்காட்டினால் தவறாமல் ஏற்றுக்கொள்வேன்.

முதலில் மாலன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். தமிழ் மற்றும் தமிழ்வலைப்பூக்களின் மீதான அவர்களின் பற்றும், வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக எப்பொழுதும் இன்று போல தொடருங்கள், எந்தத் தடைவந்தாலும். தங்களைப்போன்ற திறமைமிக்க,அனுபவசாலிகளின் அனுபவவழிகாட்டல்கள் புதியவர்களான எங்களுக்கு மிகவும் அவசியம்.

இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வது

கண்டிப்பாக இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் இருவேறுபட்ட கருத்துக்கள் உள்ளது. அதில் கண்டிப்பாக நிறைய நடைமுறைச்சிக்கல்கள் எழலாம். எல்லாத்தரப்பு வாதங்களையும் கவனமாகக் கேட்டுப் பின் வள்ளுவனின் இந்த வாக்கின்படி முடிவெடுக்கலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

தாங்கள் கேள்விகள் கேட்டுள்ளது தமிழ்மண நிறுவனர் மற்றும் நிர்வாகிக்காக, அதில் நான் எனது கருத்தினை மட்டுமே ( என் மனதில் தோன்றியவைகளைச்) சொல்லியுள்ளேன்.

//////////////////////
1. தமிழ்மணத்தில் தொகுக்கப்படும் பதிவுகளில் ஆபாசப் பின்னூட்டங்கள் இடம் பெறுவது குறித்து அவர்களது கருத்து/ நிலை என்ன?
2.ஒருவருடைய பெயரைத் திருடி இன்னொருவர் பின்னூட்டம் இடுவதைப் பற்றி அவர்களது நிலை என்ன?
///////////////////
முழுக்க முழுக்க தனிமனித ஒழுக்கம் சார்ந்தவைகள் இவைகள். பொதுக்கழிப்பறைச் சுவற்றிலும், பேருந்து மற்றும் திரையரங்க இருக்கைகளிலும் கீழ்த்தரமாக கிறுக்கும் முறை சார்ந்ததே இவைகள். இதற்குத் தொழில்நுட்பரீதியாக தமிழ்மணம் ஒன்றும் செய்ய இயலாது என நினைக்கிறேன்.

ஆனால் திரு.மாலன் அவர்கள் தமிழ்மணநிலை என்ன என்பதைக் கேட்டுள்ளார். இதில் தமிழ்மணம் மட்டுமல்ல எல்லோரின் நிலையும் ஒன்றுதான்.
இது முற்றிலும் அறவே ஒழிக்கப்பட வேண்டியது & வேரோடு களையப்பட வேண்டியது.

தமிழில் அனைவரும் தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை எந்தத் தடையுமில்லாமல் , எந்த நிபந்தனைகளும் இல்லாமல் சுதந்திரமாக பதிய ஒரு நல்ல வாய்பு இந்த வலைப்பூக்கள். அதைத் தரமான வாசகர்களுக்கு கொண்டுசென்றிட தமிழ்மண சேவை. இது ஒரு சிலரின் பொறுப்பற்ற செயல்களால் கேள்விக்குள்ளாக்கும் போது மனது வருத்தமடைகிறது.

பாரதியின் இந்தப்பாடலைக் கேட்டு (தற்காலிகமாக) மனஆறுதல் அடைகின்றேன்.

சுதந்திரப் பயிர்

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கி·து மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?

எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?

எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?

இன்பச் சுதந்திரம்நின் இன்னருளாற் பெற்றதன்றோ?
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?

வான்மழை யில்லையென்றால் வாழ்வுண்டோ?எந்தை சுயா
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமையாம் கேட்டால்,
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோ மோ? முன்னோர்
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலத்திருத்தல் மெய்யானால்
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம் நீ நல்குதியே.

//////////////
3.இது போன்று இனி நடக்காது தடுப்பதற்கு அவர்கள் என்ன உத்திகளை வைத்திருக்கிறார்கள்?
//////////

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்றால் கள்ளந்தான் பெரிது என்பேன்.

இதைக் கண்டிப்பாக தடுத்து நிறுத்த முடியாது, ஏதாவது இன்னொரு வடிவத்தில் வந்துகொண்டே இருக்கும். ஒரே மருந்து சுயஒழுக்கம்.
இது இப்போது எய்ட்ஸ்போல மருந்தில்லாமல் உள்ளது (என்னுடைய சிற்றறிவிற்கு எட்டிய வரையில்), ஆனால் கூடியவிரைவில் கண்டிப்பாக நல்ல மருந்து / மாற்று கண்டுபிடிக்கப்படும்.

விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக யாரும் சாலையில் போகாமலில்லை. கண்டிப்பாக எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ளுவோம்.

///////////////
4.சென்னை சந்திப்பில் பின்னூட்டங்களின் என்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் இடுவதை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அது நடைமுறைப்படுத்தப்படுமா? ஆம் என்றால் எப்போதிலிருந்து?
///////////////////
எனக்குத் தெரிந்த வகையில் பின்னூட்டங்களின் என்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் இடப்படுவதில்லை. அந்தப்பட்டியல் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள் மட்டுமே இடப்படுகிறது என நினைக்கிறேன். மேலும் நட்சத்திரங்களின் அடிப்படையில் கடந்த 7 நாட்களில் எழுதப்பட்டவற்றில் சிறந்த 25 வாசகர் பரிந்துரை மட்டுமே இடப்படுகிறது.

////
5.பின்னூட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்யும் மாற்றுப் பதிவுகளை (யாகூ 360, லைவ் ஜர்னல்) தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமா? சாத்தியம் என்றால் அவை இணைத்துக் கொள்ளப்படுமா? அல்லது தமிழ்மணம் பிளாக்கர் பதிவுகளுக்கு மட்டும்தானா?
////
தமிழ்மணம் கண்டிப்பாக பிளாக்கர்களுக்கு மட்டுமல்ல. பிளாக்கர், வெப்பிளாக், நியுக்ளியஸ் போன்ற திறமூலம் சார்ந்தவை மற்றும் யாழ் என செய்தியோடைகளை வழங்கும் அனைத்திற்கும் தொடர்பினை வழங்குகிறது. யாகூ 360ல் பதியப்பட்ட பதிவுகளுக்கும் தொடர்பு தருகிறது. யாகூ 360ல் பதியப்பட்ட திலகபாமாவின் (http://blog.360.yahoo.com/mathibama) பதிவுகள் நம் தமிழ்மணத்திலிருந்து தொடுப்பு வழங்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்கின்றது. காசி ஏற்கனவே தங்களின் சென்னைச் சந்திப்பில் கீழ்க்கண்டவாறு சொல்லியுள்ளார்.
-----
யாகூ முதன்முறையாக இந்த் 360ல்தான் யூனிகோடுக்கு இடமளித்துள்ளது என்பதை பத்ரி சுட்டிக்காட்டினார்.
யாகூ 360ல் ஆர்.எஸ்.எஸ். வசதி இல்லை என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதில் அந்த வசதி இருக்கிறது, அதையும் தமிழ்மணத்தில் சேர்ப்பது பிரசினை இருக்காது என்று நினைக்கிறேன். அதில் உள்ள அக்ரிகேட்டர் யூனிகோடை புரிந்து கொள்கிறது. ஆனால் UTF-8 எனக் குறிப்பிடாததால் அது தலைப்பில் உள்ள சில வார்த்தைகளையோ, எழுத்துக்களையோ மட்டும் எடுத்துக் கொள்கிறது என்றும் காசி தெரிவித்தார்.
-----------

No comments: