Sunday, July 24, 2005

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!

இந்தப் பதிவில் கூறப்பட்ட கருத்துக்களின் தெளிவில் பிணக்குகள் இருக்கலாம். மேலும் விபரங்களுக்குப் பார்க்க


சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!
என்ற தலைப்பில் ராமன் ராஜா என்பவரால் எழுதப்படும் தொடர் இந்த வாரம் முதல் தினமணிக்கதிரில் வெளிவருகிறது. திறமூலங்களைப்பற்றிய இந்தத் தொடர் (என்னைப் போன்ற) பாமரர்களுக்கும் எளிதில் புரியும்படி நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டுள்ளது. அனைவரும் படித்துப் பயனுற வேண்டுகிறேன். இனி அந்தக்கட்டுரை..

சரித்திரம் படைக்கும் சாஃப்ட்வேர் கொரில்லாக்கள்!

என் அக்கா பையன் சுந்தர் ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் வாசல் திண்ணையில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களிடமெல்லாம் வம்படித்துக் கொண்டிருப்பான். ரவா தோசையை நினைவுபடுத்தும் கிழிசல் பனியன் ஒன்று போட்டிருப்பான். வேஷ்டி ரொம்ப அழுக்காக இருக்கிறதே, திருப்பியாவது கட்டிக்கொள்ளக்கூடாதா என்றால் ""வேட்டிக்கு மூணு பக்கமா இருக்கு?'' என்று சிரிப்பான்.

இப்படிப்பட்டவனுக்கு ஒரு நாள் எங்கோ நேர்ந்த தப்பினால் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியர் வேலை கிடைத்தது. பெட்டி நிறைய பருப்புப் பொடி, ஊறுகாய்கள் நிரப்பிக்கொண்டு தொலைந்த பாப்பா மாதிரி முழித்துக்கொண்டு பிளேன் ஏறிப் போனான். ஐந்து வருடம் கழித்து லீவில் வந்தபோது சுந்தர், சுந்தர் மாதிரியே இல்லை. முக்கால் கால் பாண்ட் அணிந்து வாக்மேன், ரேபான், சிகரெட், சிக்லெட், மினரல் வாட்டர் பாட்டில் என்று வந்து சேர்ந்தான். பிச்சைக்காரிக்கு ஓரி வள்ளல் போலப் பத்து ரூபாயைத் தூக்கிக்கொடுத்தான். என்னடா என்றால் கலிபோர்னியாவில் நூறு கே சம்பளமாம்! அவன் பாஷையில் சொல்வதானால், ஆஸம்

சாப்ட்வேர் என்ஜினியர்களின் திடீர்ச் செல்வச் செழிப்புக்குக் காரணம், அவர்கள் எழுதும் மென்பொருள்கள் பரம அநியாய விலையில் விற்பதுதான்.மைக்ரோசாப்ட் கம்பெனி மட்டுமே ஒரு பிரதிக்கு ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை விதம்விதமான மென்பொருள்கள் விற்கிறார்கள். நாமும் கொஞ்சம் கம்ப்யூட்டரும் கொஞ்சம் சவடாலும் கற்றுக்கொண்டு அமெரிக்கா போனால் ஒரு நிமிடத்திற்கு ஐம்பது ரூபாய் வரை சம்பாதிக்கலாம். (அச்சுப் பிழையில்லை, ஒரு நிமிடத்திற்குத்தான்!)

இப்படி நிஜமாகவே காலம் பொன்னாக வேலை செய்யும் என்ஜினியர்களுக்கு ஒரு மறு பக்கமும் இருப்பது பல பேருக்குத் தெரியாது; அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள், ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளாமல் முற்றிலும் தர்ம சேவையாக மாய்ந்து மாய்ந்து மென்பொருள் எழுதுகிறார்கள். யார் வந்து கேட்டாலும் தண்ணீர்ப் பந்தல் மாதிரி வாரி வழங்குகிறார்கள். இவர்களின் ஓப்பன் சோர்ஸ் எனப்படும் "திறந்த மூலம்' இயக்கம் உலகம் பூராவும் பரவி, பலபேரை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

"திறந்த மூலம்' என்றால் ஏதோ பத்தியம் இல்லாத சித்த வைத்திய சமாச்சாரம் என்று நினைக்கவேண்டாம். கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பதில் இரண்டு கட்டங்கள் உண்டு. கம்ப்யூட்டர் வேலை செய்ய அதற்கு ஆணைத் தொடர்களை எழுதிக் கொடுக்க வேண்டும். முதலில் அவற்றை ஜாவா, ஸி போன்ற மனித மொழிகளில் எழுதுவார்கள். எளிய ஆங்கில வார்த்தைகளில் அச்சிடு, திற, தேடு, தூங்கு என்பது போல சிறு சிறு ஆணைகளாக இருக்கும். இதுதான் சோர்ஸ் கோட் எனப்படும் மூல ஆணைத்தொடர். ஒரு புத்திசாலியான பத்தாம் வகுப்புப் பையனால் ஒரு வாரத்தில் அடிப்படை ஜாவா கற்றுக்கொண்டு எளிய ப்ரோக்ராம்கள் எழுத முடியும்.

ஆனால் கணிப்பொறிக்கு ஜாவா கீவா எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் 10010110... என்று எண்களாகச் சொன்னால்தான் அந்த மெஷினுக்குப் புரியும். நம்முடைய மூல ஆணைத்தொடரை கம்பைலர் எனப்படும் கரும்புச்சாறு மிஷினில் கொடுத்து சக்கையை எடுத்து நடு ரோட்டில் எறிந்தபின் கிடைப்பது கணினி மொழிக்கு மாற்றப்பட்ட ப்ரோக்ராம். கடையில் போய் மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்ற மென்பொருள்களை வாங்கும்போது அவர்கள் தருவதெல்லாம் இப்படி கம்ப்யூட்டருக்கு மட்டுமே புரியக்கூடிய கச்சா முச்சா வடிவம்தான். மூல ஆணைத்தொடரை வலுவான இரும்புப்பெட்டியில் பூட்டி அதன்மேல் நல்ல பாம்புகளை நெளியவிட்டுக் காவல் காப்பார்கள். அவர்களுடைய பணியாளர்களே கூட அநாவசியமாக நெருங்கிவிட முடியாது. மூல ஆணைகள் வெளியே தெரிந்து போய்விட்டால் சைபர் திருடர்கள் இன்னும் சுலபமாக பாங்குகளை எத்தித் திருடுவார்கள் என்றெல்லாம் சமாதானம் சொல்லப்பட்டாலும், பச்சையான காரணம் பச்சை நோட்டுதான்!

கடைச்சங்க காலத்தில் யுனிக்ஸ் என்று ஒரு ஆபரேடிங் சிஸ்டம் இருந்து வந்தது. இந்த ஆபரேடிங் சிஸ்டம் என்பது மென்பொருளுக்கெல்லாம் உட்பொருளாக இருக்கும் பரம்பொருள். இது இல்லாத கம்ப்யூட்டர், இஞ்சின் இல்லாத கார்மாதிரி. இவ்வளவு முக்கியமாக இருக்கும் இந்த மென்பொருள் ஆரம்பத்தில் இலவசமாகக் கிடைத்து வந்தது. மூல ஆணைத்தொடர்களும் இருந்ததால்
காலேஜ் மாணவர்கள் ஆர்வத்துடன் யுனிக்ஸில் புகுந்து விளையாடி நிறையக் கற்றுக்கொண்டார்கள். பலர் தங்கள் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும் தந்து யுனிக்ஸ் முன்னேற்றினார்கள். விரைவில் யுனிக்ஸ் மிகவும் பிரபலமாகவே, ஏ.டி. அண்ட் டி கம்பெனியின் மூக்கில் டாலர் வாசனை எட்டிவிட்டது. இனிமேல் யாரும் யுனிக்ஸைத் திறந்து பார்க்கக் கூடாது, மூல ஆணைகளை வெளியிடுவது காப்பிரைட் குற்றம், மீறினால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவிடுவோம் என்றெல்லாம் மிரட்டவே மனமுடைந்து போனார்கள் மாணவர்கள். யுனிக்ஸ் பற்றி புத்தகம் எழுதுவதற்குக் கூடத் தடை!

காப்பிரைட்டால் அடிபட்டுக் கடுப்படைந்த கம்ப்யுட்டர் வல்லுநர்கள் அங்கங்கே பாலத்துக் கைப்பிடிச் சுவர்களில் உட்கார்ந்து பேசி பதில் தாக்குதலை யோசித்தார்கள். அவர்கள் தீர்மானித்தது, சாப்ட்வேர் இயலில் சரித்திரம் படைத்த கொரில்லா போர் முறை: இனி பெரிய கம்பெனிகளை நம்பாமல் நாமே நமக்கு வேண்டிய எல்லா மென்பொருளையும் எழுதிக்கொள்வது. இன்டர்நெட் வழியே ஒத்துழைத்து ஆளுக்குக் கொஞ்சம் உழைப்பை தானம் செய்வது. இப்படித் தயாரிக்கப்படும் மென்பொருள்கள் உலகத்துக்கே பொதுச்சொத்து. யாரும்
தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாடுவதோ, காப்பிரைட்டில் பூட்டுவதோ முடியாமல் கவனமாக ஓப்பன் லைசென்ஸ் விதிமுறைகளை அமைத்தார்கள்.

தொண்ணூறுகளில் மைக்ரோசாப்ட் மிகவும் வளர்ந்து தொண்ணூறு சதவிகித மார்க்கெட்டைப் பிடித்தபோது இதே இளைஞர்கள் பில் கேட்ûஸக் குறிவைத்துக் கல்வீச ஆரம்பித்தார்கள்.மைக்ரோசாப்டும் லேசுப்பட்ட பூதம் இல்லை. தன் மார்க்கெட்டைப் பாதுகாப்பதற்காக அது செய்யும் அடாவடிகள் உலகப்புகழ் பெற்றவை. நீங்கள் ஒரு சிறு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, அது கொஞ்சம் வளர்ந்து போட்டிக்குத் தயாராவது போலிருந்தால் பில் கேட்ஸ் வீட்டுக் கூண்டுக் கிளி கத்தும். உங்கள் முக்கியமான என்ஜினியர்களை பிகார் எம்.எல்.ஏ.க்கள் மாதிரி நல்ல விலைக்கு வாங்கிவிடுவார்கள்.

அல்லது உங்கள் கம்பெனியையே மேஜை நாற்காலி உள்பட மொத்தமாக விலைபேசித் தரைமட்டமாக்கி ஆமணக்கு விதைத்து விடுவார்கள். அதைவிட பயங்கரமாக "நெட்ஸ்கேப் அடி' என்று ஒரு வர்ம அடி கற்றுவைத்திருக்கிறார்கள். அது என்ன அடி என்று கேட்கிறீர்களா? அதைச் சொல்லவந்தால் கட்டுரை 2 பக்கத்தைத் தாண்டிவிடும். உங்கள் எடிட்டர் லபலபவென்று அடித்துக் கொள்வார்.
அதனால் மர்ம அடி ரகசியம் அடுத்தவாரம்

கட்டுரைக்கான சுட்டி: http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNK20050721061836&Title=Kadhir&lTitle=%A7%5DU%A6+L%A7o&Topic=0


1 comment:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

i wont call this bullshit because bullshit is better than this. the author does not understand the basics nor knows the history of open source.it is shameful that such articles are published in tamil.