Thursday, January 26, 2006

குடியரசு தின அப்துல் கலாம் உரை

இந்திய குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் 57-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள். நமது நிலப்பகுதி, கடல் பகுதி, வான்பகுதிகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், மத்திய மாநிலங்களின் காவல் துறையினருக்கும், உள்நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது ராணுவத்தின் இளநிலை அதிகாரிகளுக்கு எனது அரசு, ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

நாட்டின் அத்தியாவசிய தேவைகள் :

இன்றைய குடியரசு தின உரையில் நமது நாட்டின் மிக முக்கியமான இரண்டு தேவைகள் குறித்து உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது, தேசிய இயக்கம் மற்றும் அதன் வளர்ச்சி. இரண்டாவது, நமது வளர்ச்சியை பாதுகாப்பது, தனிப்பட்டவர்கள் மற்றும் மக்களின் வருவாய் ஈட்டும் திறனை தொடர்ந்து நிலைநிறுத்துவது ஆகியவையாகும். இதற்காக நமது நீண்டகால பாரம்பரியத்தலிருந்து வரும் நமது வாழ்வின் எல்லைகளை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். நமது வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் நீண்டகால வாழ்வியல் முறையை துவக்கி மேலும் வலுப்படுத்துவதற்கு சரியான நேரம் இதுவாகும்.

2020-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு நம்முடைய தொலைநோக்கை ஆதார வளமான சக்திவாய்ந்த 54 கோடி இளைஞர்கள் தலைமை ஏற்று நடத்துவதற்கு ஏற்ப பண்பை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தேசிய இயக்கத்தை நோக்கிய வளர்ச்சி இயக்கம் :

நண்பர்களே, நான் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் சென்றிருக்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயும், பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்களிடையேயும் உரையாற்றியிருக்கிறேன். 10 லட்சம் இளைஞர்களை சந்தித்து நேரடியாக உரையாடியிருக்கிறேன். ஆன்மீகத் தலைவர்கள் பலரையும் நேரடியாக சந்தித்திருக்கிறேன். மேலும் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அறிவியல் நிலையங்கள், தொழிற்சாலைகள், சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனங்கள், நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் முகமைகள், ராணுவப் படைப் பிரிவுகள், ஊடகங்கள், அரசு சாரா நிறுவங்கள், கலைஞர்கள், கற்பனைத்திறன் படைத்தவர்கள், கிராமப்புற மக்கள், இன்னபிற மக்களிடையேயும் நான் உரையாற்றியிருக்கிறேன். மாற்றுத் திறன் படைத்தவர்களிடையேயும் நான் நேரடியாக உரையாடியிருக்கிறேன். சமுதாயத்தில் முக்கியமானவர்களிடையேயும், அனைத்து நிலையிலுள்ள மக்களுடனான எனது நேர்முக உரையாடல்களில் தேசிய வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்படவேண்டியதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளேன்.

இதன் மூலம் நிறுவனங்களிலும், தனிப்பட்டவர்களிடையேயும் 2020 தொலைநோக்கை இலக்காக கொண்ட இயக்கம் உருவானது. மீண்டும் பல்வேறு பிரிவு மக்களிடையே சென்று நேரடியாக பேசியபோது இந்த தொலைநோக்குக்கான திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதை கண்டேன்.

உதாரணத்திற்கு, ஆந்திரப்பிரதேசம், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நதிகளை இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பாலாறு, காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளை இணைக்கும் திட்டம் பரிசீýக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் (புறா) திட்டம், தமிழ்நாட்டில் உள்ள வல்லத்தில் பெரியார் புறா என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் லோனி புறா என்றும், மத்திய பிரதேசத்தில் சித்திரகூட் புறா என்றும், ஆந்திரப் பிரதேசத்தில் பிமாவரம் பகுதியில் பிராஜ÷ புறா என்றும் பல்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருவதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன்.

பாரதீய வேளாண் தொழில்கள் நிறுவனம் கிராம மக்கள், பழங்குடியினர் மேம்பாட்டில் புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்பம் மற்றும் இணையங்களில் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வது, தண்ணீர் சேமிப்பு, பால்வள மேம்பாடு, பழங்களை பாதுகாத்து பதப்படுத்துவது, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் கிராமப்புற மக்கள் அதிகாரம் பெற இந்த நிறுவனம் வழி வகுத்துள்ளது.

தற்போது கேரளா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் புறா இயக்கத்தை தங்களது மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற 93-வது இந்திய அறிவியல் மாநாட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள 20 முதல் 30 கிராமங்களைக் கொண்ட தொகுப்புகளில் 100 புறா திட்டங்களை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தேன். இதற்கான செயல் திட்டம் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்தந்த கிராமப் பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டு புறா திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், மிசோரம், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காட்டாமணக்கு செடி பெரிய அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. உயிரி டீசல் எண்ணெய் உற்பத்திக்காக அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் இவ்வகை செடி பயிரிடப்படுகின்றன.

மேற்கு வங்காளத்தில் சாகர் தீவில் காயல்பாரா கிராமத்தில் 120 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 20 முதல் 30 கி.வாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் பிற ஆலைகளுடன் இணைந்து சாகர் தீவில் உள்ள 33 கிராமங்களுக்கு 6 மணி நேரம் மின்சாரத்தை வழங்கி வருகிறது. இது வெகுவிரைவில் மேலும் 150 கிராமங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

பெங்களூர் நகராட்சி, நகர்ப்பகுதிகளில் உள்ள திடக்கழிவைக் கொண்டு 8 மெகா வாட் மின்சார உற்பத்தி செய்யும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் உருவாக்கி, இயக்கி, பராமரித்து மாற்றும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது. ஹைதராபாத், விஜயவாடா நகரங்களில் உள்ளதைப் போன்றே இந்த மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும்.

150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மும்பை, சென்னை, கல்கத்தா பல்கலைக்கழகங்களில் இந்தியாவின் முதல் செயல்திறன் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்விக்கான செயற்கைகோளை பயன்படுத்தி தொலைவழி கல்வி முறை மூலம் நாடு முழுவதும் உள்ள 15 ஆயிரம் மாணவர்களிடம் இப்பல்கலைக்கழகத்தில் துவக்க விழாவில் உரையாற்றியுள்ளேன். செயல்திறன் பல்கலைக்கழகம் என்பது நாட்டின் எல்லைகள் மற்றும் நிர்வாக எல்லைகளைக் கடந்து சிறந்த கல்வியை அளிப்பதேயாகும். புதிய சூழ்நிலையில் இது நடைபெறும்படி செய்வது நமது பொறுப்பாகும்.

கர்நாடக அரசு, அஸிம் பிரேம்ஜி நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளில் கணிணி பயன்படுத்தி கல்வி கற்பிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது இதன் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள மல்லாபுரம் மாவட்டத்தில் அக்ஷயா கணிணி கல்வி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு கணிணி கல்வியை அரசு செயல்படுத்தியுள்ளது. பீகார் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள போர் கிராமத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் தனது சொந்த கிராமத்தில் கல்வி அறியாமையை முற்றிலுமாக நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜம்சட்ஜி டாடா கல்வி நிறுவனம் எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கிராம அறிவுசார் மையங்களை உருவாக்கி வருகிறது. கோயம்புத்துசிர், ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு அறிவுசார் மையங்களுடன் கல்வி செயற்கைக்கோள் மூலமாக கிராம அறிவுசார் மையத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், கைவினைக் கலைஞர்கள் ஆகியவர்களுடன் அவர்களுடைய பிரச்சனைகள் குறித்து நான் உரையாடியுள்ளேன்.

பீமாவரம் அருகே உள்ள பேடா அமீராம் பகுதியில் உள்ள சர்வதேச புற்றுநோய் மருத்துவமனையை நான் பார்வையிட்டேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. கேரளாவில் உள்ள பருமலாவில் சர்வதேச இதய நோய் மருத்துவ மையம், கிராமப் பகுதிகளில் உள்ள இதய நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையை அளித்து வருகிறது. மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் நல்கொண்டா நகரில் மாற்றுத்திறன் படைத்த ஆயிரம் குழந்தைகளை நான் சந்தித்தேன். இவர்கள் பாதுகாப்புத் துறை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடப்பதற்கு உதவும் செயற்கை சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்தும் கிராமப் பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதை காட்டுகின்றன. இந்த வளர்ச்சி எதைக் குறிக்கிறது? ஐந்தாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நமது நாகரீகம் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை நோக்கி செல்வதையே காட்டுகிறது. என்னால், வளர்ச்சியடைந்த இந்தியா உருவாகி வருவதைக் காணமுடிகிறது.

இந்த செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுகாதார பாதுகாப்புத் துறையை சார்ந்த வல்லுநர்கள் சிறப்பான பங்காற்ற வேண்டும்.

அறிவியல் - தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான இயக்கம்:

நமது தேசத்தின் அறிவியலாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உடனடியாக செயல்படுத்தக் கூடிய ஐந்து உடனடி திட்டங்கள் வைத்துள்ளேன்.

அ) அதிநுண் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சக்தி திறனை 14 சதவீதத்திýருந்து 45 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்,

ஆ) நோய்களை உண்டாக்கும் முறை மற்றும் சிகிச்சைக்கான புதிய முறைகளை மேம்படுத்துவது ஆகியவற்றை கண்டறிவதற்கு புரோட்டியோமிக்ஸில் ஆராய்ச்சி மேற்கொள்வது,

இ) பூகம்பத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை முன்பே கண்டறிந்து தெரிவிப்பதற்கான முன்னெச்சரிக்கை கருவிகளை கண்டுபிடிப்பது,

ஈ) மேகத்தின் அளவை கொண்டு எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என்பதை கணிப்பதற்கான புதிய ராடார் கருவிகளை அமைப்பது,

உ) அதிநுண் உயிரி மற்றம் தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுகாதார பாதுகாப்பு மின்னணு சாதனங்கள் மற்றும் நாட்டின் தேவைக்கேற்ப கருவிகளை உருவாக்குவது ஆகியவையாகும்.

சுகாதாரப் பாதுகாப்பு:

எச்ஐவி எய்ட்ஸ் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்திற்கு உயர் முன்னுரிமை வழங்க வேண்டும். 2007-ம் ஆண்டுக்கு முன்பாக எச்ஐவி நோய்க்கான சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். இத்துறையில் உள்ள தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும். மலேரியா, டைபாய்டு, டயோரியா போன்ற நோய்களை தடுப்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளவேண்டும். 2007-ம் ஆண்டுக்குள் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவேண்டும். சுகாதார பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருந்து தயாரிப்பவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சுற்றுச்சூழலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். இதன் மூலம் இந்தியாவில் அனைத்து குடிமக்களும் சுகாதாரத்துடன் வாழ வகை செய்யவேண்டும்.

பாரத் நிர்மாண் திட்டம்:

அடுத்த நான்காண்டுகளில் கிராமப்பகுதிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு பாரத் நிர்மாண் திட்டத்தை துவக்கியுள்ளது, இதற்கு அரசு ரூ.1,74,000 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளது. புறா திட்டத்தைப் போன்று கிராமப் பகுதிகளின் ஒருங்கிணைந்த வேகமான வளர்ச்சிக்கு இது வழி வகுக்கும்.

விழிப்புணர்வும் மாற்றமும் :

2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கேற்ற பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் பலவகைப்பட்ட முகமைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் இதனை உறுதி செய்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் எழுச்சியும் குறிப்பிட்ட பொறுப்புகளையும் ஒழுங்குமுறையையும் தருகின்றன. எனவே, வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளிலும் நல்லெண்ணங்களையும் நன்மதிப்பையும் முன்நிறுத்திய மேம்பாடு நமக்குத் தேவை. நாடு முழுவதிலும் வாழும் கோடிக்கணக்கான முகங்களில் புன்னகை தவழ வேண்டும் என்ற நமது கனவை எதிர்நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். நமது எண்ணங்களில் இதற்கான மாறுதல்கள் தேவை என்பது குறித்து நான் உங்களுடன் பேச விரும்புகிறேன்.

இல்லத்தில் துவங்கும் வெளிப்படையான பழக்கங்கள்:

சென்ற ஆண்டு நவம்பர் 21-ம் தேதியன்று ஆதிசூச்னாகிரி மடத்திற்கு ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் சென்றிருந்தேன். கர்நாடக மாநிலத்தில் அனைத்து மதங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் ஏறத்தாழ 54 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பள்ளி, கல்லூரிகளிýருந்து கலந்து கொண்டனர். ஷிமோகாவிலுள்ள ஆதிசூச்னாகிரி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் பவானி என்ற மாணவி என்னிடம் கேட்ட கேள்வி இன்னும் நினைவில் இருக்கிறது. அன்பு ஐயா, இன்று நமது நாட்டில் புற்றுநோயைப் போன்று பரவிவரும் ஊழலை தடுப்பதற்கு மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்.

நம் நாட்டில் வாழும் இளைய தலைமுறையின் வேதனை இந்த கேள்வியில் தெளிவாக தெரிகிறது. எனக்கு இது மிக முக்கிய கேள்வியாகும். ஏனென்றால் ஒரு சிறுமி இக்கேள்வியை கேட்டிருக்கிறாள். இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தேன். எனது சிந்தனைக்கு வந்த கருத்துக்கள் சிலவற்றைக் கூற விழைகிறேன்.

இந்த நாட்டில் 100 கோடி மக்கள் வாழ்கின்றனர். சுமார் 20 கோடி குடும்பங்கள் உள்ளன. பொதுவாக அனைவருமே நல்லவர்கள்தான். எனினும் சில லட்சம் பேர் வெளிப்படையான வகையில் வாழாமல், சட்ட திட்டங்களை மதிக்காதிருந்தால் நாம் என்ன செய்யமுடியும்? இந்த குடும்பங்களில் பெற்றோர் தவிர ஒரு மகனோ அல்லது மகளோ அல்லது இருவருமோ உண்டு. பெற்றோர் வெளிப்படையான சரியான பாதையினின்று விலகுவதை பிள்ளைகள் பார்த்தால் அவர்களை அன்பு, பாசம் மூலம் குழந்தைகள் சரியான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அந்த விழாவில் குழுமியிருந்த குழந்தைகளைப் பார்த்து உங்களுடைய பெற்றோர் அனைவரும் சரியான பாதையில்தான் நடக்கிறார்களா என்று கேட்டேன். அப்படியே சரியான பாதையில் செல்லாத பெற்றோர்கள் இருந்தால் அவர்களைப் பார்த்து நீங்கள் செல்லும் பாதை சரியில்லை என்று கூறும் தைரியம் உங்களுக்கு உண்டா? இதைத்தான் பள்ளிகளில் கற்றுக் கொடுக்கிறார்கள். இதற்கு அநேகம் குழந்தைகள் நாங்கள் இதைச் செய்வோம் கூறினார்கள். தாங்கள் அன்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பிறரை நல்வழிப்படுத்தும் நம்பிக்கை பிள்ளைகளுக்கு உள்ளது. இதைப் போல பெற்றோர்களிடையே நடந்த ஒரு கூட்டத்தில் நான் இதே கேள்வியைக் கேட்டேன். முதýல் ஒரு நிசப்தம் நிலவியது. பின்னர் பலர் தாமதமாக தாங்கள் பிள்ளைகளுடைய அன்பான கண்டிப்புக்கு உட்படுவதாக தெரிவித்தனர். பள்ளிக் குழந்தைகள் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். யுநான் உண்மையான தூய்மையான வாழ்க்கையை வாழ்வேன். ஊழலற்ற வெளிப்படையான எனது வாழ்க்கையின் மூலம் பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவேன்ரு என்பதே அந்த உறுதிமொழி. இறுதியாக பள்ளி மாணவர்களிடம் இதனை தங்களது குடும்பத்தில் இருந்து ஒரு இயக்கமாக துவக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

மனித வாழ்வின் கண்ணியத்தை கெடுக்கும் வெகுமதிகள்:

1940-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் மும்முரமாகியது. அந்த நேரத்தில் ராமேஸ்வரத்தில் பஞ்சாயத்து வாரிய தேர்தல்கள் நடைபெற்றன. எனது தந்தை பஞ்சாயத்து வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து வாரியத்தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். நான் வாழ்ந்த ராமேஸ்வரம் ஓர் அழகிய தீவு. இங்கு சுமார் 20 ஆயிரம் மக்கள் அப்போது வசித்து வந்தனர். எனது தந்தையை அவர்கள் பஞ்சாயத்து வாரிய தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு, அவர் சார்ந்த மதம், சாதி, மொழி அல்லது பொருளாதார நிலை போன்றவை காரணங்கள் அல்ல. அவர் அடிப்படையாக ஒரு நல்ல மனிதர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பஞ்சாயத்து வாரியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை நான் கூற விரும்புகின்றேன்.

ராமேஸ்வரம் பஞ்சாயத்துப் பள்ளியில் அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில் மின் விளக்கு வசதி கிடையாது என்பதால் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சத்தமாக எனது பாடங்களை நான் படித்துக் கொண்டிருந்த நேரம் எனது அறைக் கதவு தட்டப்பட்டது. அப்போதெல்லாம் ராமேஸ்வரத்தில் யாரும் வீட்டுக் கதவை உள் தாழ்ப்பாள் இட மாட்டார்கள். உள்ளே வந்த நபர் எனது தந்தை எங்கே என்று என்னைக் கேட்டார். அவரிடம் எனது தந்தை மாலை தொழுகைக்காக மசூதி சென்றுள்ளதாக கூறினேன். அப்போது அவர் நான் உங்கள் தந்தைக்காக வெகுமதி ஒன்றை கொண்டுவந்துள்ளேன். இதனை நான் இங்கு வைத்துச் செல்லலாமா என்று கேட்டார். எனது தந்தை இல்லாததால் உடனே எனது தாயைக் கூப்பிட்டு அந்த வெகுமதிகளை இங்கு வைத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். அவரும் வீட்டில் தொழுகையில் இருந்ததால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வந்திருந்த நபரை கொண்டுவந்திருந்த பொருட்களை கட்டிýன் மீது வைத்துச் செல்லுமாறு நான் கூறினேன். மீண்டும் எனது படிப்பைத் தொடர்ந்தேன்.

எனது இளைய பருவத்தில் சத்தம் போட்டுப் படிப்பது எனது வழக்கம். நான் சத்தமாக படிப்பதால் படிப்பில் முழு கவனம் செலுத்த முடியும். இந்த நேரத்தில் எனது தந்தை வீட்டிற்கு வந்தார். அப்போது கட்டிýல் தாம்பூலத் தட்டு இருந்ததைப் பார்த்து இது என்ன? யார் இதைக் கொண்டு வந்தார்? என்று கேட்டார். யாரோ இதை உங்களுக்காக கொண்டு வந்தார் என்றேன். மூடியிருந்த தாம்பூலத் தட்டை திறந்து பார்த்தபோது அதில் விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள், இனிப்பு வகைகள் ஆகியவற்றுடன் ஒரு துண்டுக் காகிதமும் இருந்தது. எனது வீட்டில் நான் கடைசி மகன். எனது தந்தை என்மீது அதிக அன்பு கொண்டிருந்தார். நானும் அவரை மிகவும் நேசித்தேன். ஆனால் முதல்முறையாக அவர் மிகவும் கோபமடைந்ததை நான் பார்த்தேன். மேலும் எனக்கு ஒரு அடியும் விழுந்தது. நான் பயந்துபோய் அழத் துவங்கினேன். அவர் எனது அருகில் வந்து அன்போடு என் தோளில் கை வைத்து தன்னுடைய அனுமதி இல்லாமல் இதுபோன்ற வெகுமதிகளை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். இது ஒரு நல்ல பழக்கம் அல்ல. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவதுதான் வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய ஆபத்தான தவறு. புனித நூலான ஹாதித்திýருந்து ஒரு முக்கியமான வாக்கியத்தை எனக்கு நினைவுபடுத்தினார். வெகுமதிகள் உள்நோக்கத்துடன் நமக்குக் கொடுக்கப்படுகின்றன என்பதே அந்த வாக்கியத்தின் பொருள். இப்பாடம் இன்னும் எனது மனதில் நீங்காமல் உள்ளது. எனது வாழ்க்கையில் நல்ல அனுபவத்தைப் பெற இந்த வாக்கியம் உதவியது.

மனுசாஸ்திரத்திலும் இத்தகைய வெகுமதிகள் பெறுவது தவறு என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது. வெகுமதியை வாங்கிக் கொள்பவர்கள் கொடுத்தவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உடன்பட வேண்டும் என்பதே உள்நோக்கமாகும். சட்டம் அனுமதிக்காத சிலவற்றை நாம் செய்வதற்கு இதுவொரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. வெகுமதியை கொடுத்தவருக்கு நாம் எதையாகிலும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த தவறுகள் நிகழுகின்றன. வெகுமதிகளால் நாம் ஈர்க்கப்படக்கூடாது. தனிப்பட்ட நபர்கள் இதனை ஒரு வழக்கமாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதனால் வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் எண்ணத்திýருந்து நாம் முழுமையாக விடுபடலாம். வெகுமதிகளை ஏற்றுக் கொள்வதால் ஒரு மனிதனுக்குள் இருக்கும் ஆன்மீக ஒளி அணைந்து விடுகிறது. இதனை நான் பகிர்ந்து கொள்வதற்கு முக்கிய காரணம் உண்டு. குறிப்பாக இளைஞர்களின் மனதில் இந்த பழக்கத்தை குறித்த எண்ணங்கள் மாற வேண்டும். இதனை நான் வýயுறுத்த விரும்புகிறேன். தனி மனிதருடைய நன்மதிப்பை பாதிக்கும் இச்செயலை முற்றிலும் கைவிட நாம் முயலுவோம். இப்பழக்கத்தைக் கைவிட ஒவ்வொருவரும் உண்மையாக முயன்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

தாயார் தந்த உண்மை தத்துவம்:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறந்த துறவியான ஷேக் அப்துல் காதர் அல்-ஜிலானி வாழ்க்கையில் நிகழ்ந்த கதையை, தற்போது நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். ஒரு நாள் சிறுவன் அப்துல் காதர் மேய்ச்சல் நிலத்தில் நீங்கள் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? இந்த நிலம் அதற்கானது அல்ல என்று ஒரு பசு கதறி அழுதுக்கொண்டிருப்பதை கேட்டான். பயந்துபோன சிறுவன் தனது வீட்டுக்குள் ஓடோடினான். வீட்டுக் கூரையின் மேல் ஏறிக்கொண்டான். அங்கிருந்து பார்க்கையில் ஏராளமான மக்கள் அரபி மலைக் குன்றுகளில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் அந்த இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் அப்பால் இருக்கும் மெக்காவுக்கு ஹஜ் பயணமாக சென்று, திரும்பி வருகிறார்கள். குழப்பமடைந்த அப்துல் காதர் தனது அன்னையிடம் சென்று, அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக பாக்தாத் செல்ல அனுமதி கேட்டான். புனித அழைப்பை அந்தத் தாய் புரிந்துகொண்டார். காதர் உடனே பாக்தாத் செல்ல அனுமதித்தார். தனது தந்தையிடமிருந்து அவன் பங்காக பெறப்போகும் நாற்பது தங்க நாணயங்களையும் தாய் அச்சிறுவனிடம் அளித்தார். அவனை வழியனுப்புவதற்காக கதவு அருகே வந்த அந்த தாய், என்னருமை மகனே! நீ போகிறாய்! இறுதித் தீர்ப்பு வரும் நாள் வரை நான் உன்னை பார்க்க போவதில்லை என்றாலும் அல்லாவுக்காக உன்னிடமிருந்து இருந்து என்னை பிரித்துக் கொண்டேன். ஆனால் என்னிடமிருந்து ஒரு அறிவுரையை நீ எடுத்துச் செல்ல வேண்டும். என் மகனே, நீ எப்பொழுதும் உண்மையை உணர வேண்டும், உண்மையே பேச வேண்டும் உனது வாழ்க்கையைப் பணயம் வைக்க நேரிடினும் உண்மையையே பரப்ப வேண்டும் என்று கூறினார்.

அப்துல் காதரும் மற்றவர்களும் சிறிய வண்டிகளில் குழுவாக பாக்தாத்தை நோக்கி பயணித்தானர். வண்டிகள் கடினமான நிலபரப்பை கடந்து செல்லும் போது, குதிரைகளில் திடீரென வந்த கொள்ளையர் கூட்டம் அவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்தது. யாரும் அச்சிறுவனை பொருட்படுத்தவில்லை. கொள்ளையர்களில் ஒருவன் அப்துல் காதரை கவனித்து ஏய் சிறுவனே, பாவம் நீ ! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான். அப்துல் காதர், ஆமாம். என் தாயார் 40 பொற்காசுகளை என் சட்டையின் உள்பகுதியில் தைத்து வைத்துள்ளார் என்று பதில் அளித்தான். அதை கேட்ட கொள்ளையன், நகைச்சுவைக்காக காதர் அவ்வாறு சொல்வதாக எண்ணி புன்னகைத்தான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றான். கொள்ளையர் தலைவன் அங்கு வந்தபோது, இந்த பையனை அவனிடம் கொண்டு சென்றனர். இந்த பையன் சொல்கிறான் இவனிடம் 40 பொற்காசுகள் உள்ளனவாம். பயணிகள் அனைவரையும் கொள்ளையடித்து விட்டோம். ஆனால் இவனைத் தொடக்கூட இல்லை. இவனிடம் பொற்காசுகள் உள்ளதை யாராவது நம்புவார்களா? என்று ஒரு கொள்ளையன் சொன்னான். கொள்ளையர் தலைவன் மீண்டும் அப்துல்காதரை கேட்க, அவன் அதே பதிலை சொன்னான். தலைவன் அவனை அருகில் அழைத்து சட்டையை ஆராய, சிறுவன் சொன்னவாறு பொற்காசுகள் சட்டையின் உள்பகுதியில் தைக்கப்பட்டு இருந்தன.

அதிர்ச்சியுற்ற கொள்ளையர் தலைவன், எதனால் இந்த உண்மையை சொன்னாய்? என்று அப்துல் காதரை வினவ, வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை வந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று என் தாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். 40 பொற்காசுகள்தானே, போகட்டும். என் தாயாருக்கு கொடுத்த வாக்கை மீறமாட்டேன். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன். அதனால்தான் உண்மையை கூறினேன், என்று பதில் அளித்தான். இதைக் கேட்ட கொள்ளையர்கள் விம்மி விம்மி அழுதனர். உனது தாயாரின் அறிவுரைக்கு இவ்வளவு மதிப்பளிக்கிறாயே ! ஆனால் நாங்களோ, பல ஆண்டுகளாக எமது பெற்றோருக்கும், எம்மை படைத்தவனுக்கும் துரோகம் இழைத்துவிட்டோம். இன்று முதல் நீர்தான் எமது தலைவர் என்று கொள்ளையர்கள் கூறினர். கொள்ளையடிப்பதை அன்று முதல் விட்டொழித்து திருந்தி வாழ்ந்தனர். ஷேக் அப்துல் காதர் அல்- ஜிலானி என்ற ஒப்பற்ற துறவி பிறந்ததையும் உலகம் கண்டது. ஒரு தாய் தனது குழந்தைக்கு உண்மையைப் பற்றி சொன்ன செய்தியில் துறவி உருவானார். இத்தருணத்தில் திருவள்ளுவரின் வாக்கை நினைவுகூற விரும்புகிறேன்.

மனத்தோடு வாய்மை மொழியின் தவத்தோடு
தனஞ்செய் வாரின் தலை.

அருந்தவத்தையும், வாரி வழங்கும் கொடையையும்விட சிந்தனையிலும், செயலிலும் உண்மையோடு இருப்பது அதிக சக்தி வாய்ந்தது என்பதே இக்குறளின் பொருளாகும்.

ஆசிரியரின் தாக்கம்: எனது வாழ்வின் குறிக்கோள்:

எனது ஆரம்ப பள்ளி ஆசிரியர் திரு. சுப்பிரமணிய ஐயரைப் பற்றி பல முறை உங்களிடம் கூறியிருக்கிறேன். அவர் சிறந்த ஆசிரியர் மட்டுமல்ல, தனது மாணவர்களிடம் அவர்களின் எதிர்காலம் பற்றிய தொலைதூர பார்வையையும் உருவாக்கியவர். உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். ஒரு முறை பறவைகள் பறக்கும் விதம் பற்றி ஆசிரியர் எங்களுக்கு விளக்கினார். எங்களுக்கு புரிந்ததா என்று வினவினார். நாங்கள் விழிப்பதைப் பார்த்து, எங்களையெல்லாம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பறவைகள் பறப்பதை காண்பித்து, பறக்கும் நுட்பத்தை விளக்கினார். எல்லாவற்றையும்விட அவர் விளக்கிச் சொன்ன விதம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. என் வாழ்க்கையின் குறிக்கோள் உருவாகியது. அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர் ஓர் உன்னதமான மாதிரியாக உள்ளார்.

இதுவரை வெளிப்படைத் தன்மையின் அவசியம், உத்வேகம் அளித்த பரிசுடன் தொடர்புடைய பிரச்சனைகள், தாய் அளித்த உண்மைத் தத்துவம், மாணவர்களுக்கு ஆசிரியர் தந்த தொலைநோக்கு பார்வை போன்ற பல விசயங்களை விவாதித்தேன். இனி வளர்ச்சி அரசியýன் முக்கியத்துவம் குறித்து பேசப் போகிறேன்.

அரசியல் = அரசியலான அரசியல் + வளர்ச்சி அரசியல்:

உலகிலேயே பெரிய நாடாளுமன்ற ஜனநாயகம் இந்தியாவுடையது என்பதில் நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். இது பலமதங்கள், பல மொழிகள் மற்றும் பல கலாச்சாரங்கள் இணைந்தது. இது நமது நாட்டுக்கு மட்டுமல்லாமல், நம் ஒவ்வொருவருக்கும் தன்மதிப்பு அளிக்கக்கூடியது. 56 ஆண்டுகளாக ஜனநாயக முறையில் பூத்துக்குலுங்கும் நமது குடியரசைப் பார்த்து மற்ற நாடுகளும் பொறாமைப் படுகின்றன. இந்திய வாக்காளர்களின் மதிநுட்பத்தையும், பக்குவத்தையும் உலகமே வியப்புடன் பார்க்கிறது. மக்கள் இறையான்மை மிக்கவர்கள், அதிகாரம் அவர்களிடமிருந்துதான் வருகிறது என்று நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்திய வாக்காளர்கள் தமது மனசாட்சிகேற்ப உற்சாகமாக வாக்களித்து தம்மை நிரூபித்து வருகிறார்கள். வளர்ந்த இந்தியாவில் வாழ்வதற்கு மக்களுக்கு உரிமையும், உத்வேகமும் இருக்கிறது. எனவே வளர்ச்சி அரசியலை நோக்கி நம்மை சீரமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரசியýல் இரண்டு பரிமாணங்கள் உள்ளன. முதலாவது அரசியலான அரசியல். மற்றது வளர்ச்சி அரசியல். தேர்தல் தருணங்களில் முதலாவது தேவைப்படுகிறது. தேர்தல் முடிந்த உடனேயே, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுக்குறிக்கோளுடன் வளர்ச்சி அரசியலை நோக்கி நடைபோட வேண்டும். இதை செயலாக மொழிபெயர்க்கும் போது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 26 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும், கல்லாமை மற்றும் வேலைவாய்ப்பில்லாத நிலையை ஒழித்துக் கட்டும் உயர்ந்த நோக்கங்களுடன் அனைத்து கட்சிகளும் பாடுபட வேண்டும். நமது நாட்டில் வளர்ச்சி அரசியல் நிலவும் சூழýல் ஒவ்வொரு கட்சியும் தனது வளர்ச்சிக் குறிக்கோளில் கவனம் செலுத்தி ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் நிலை உருவாக வேண்டுமென்று விரும்புகிறேன்.

நமது நாட்டில் 25 வயதுக்கு கீழ் உள்ள 54 கோடி இளைஞர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியை பின்பற்றி சிறந்த தலைவர்களாக உருவாகும் நிலை வரவேண்டும். அரசியýலும், வளர்ச்சி இலக்குகளிலும் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். சுவாமி விவேகாநந்தரின் பிரபலமான கூற்றை நினைவுகூற விரும்புகிறேன் - சமூகமோ அரசியலோ அனைத்து முறைகளுக்கும் அடிப்படை மனிதனின் நல்ல தன்மையே. ஒரு நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றி விடுவதாலேயே எந்த நாடும் சிறந்ததாக உயர முடியாது. அந்த நாட்டில் உள்ள மனிதர்கள் சிறந்தவர்களாகவும், நல்லவர்களாகவும் இருப்பது முக்கியம்.

தொலைந்த ஆட்டின் கதை:

அருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயýலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள்.

ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள். ஒரு வகுப்பறையில் எராளமான சிறந்த மாணவர்கள் இருக்கலாம். ஆனால் சிலருக்கு அன்புடன் கல்வியை ஆசிரியர்கள் சொல்ýத்தர வேண்டியிருந்தது. இத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். எனது நாட்டில் உள்ள தலைவர்களே, நீங்கள் ஏராளமான மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் உடனடியாக உதவி தேவைப்படுவர்களை கண்டறிந்து அவர்களை முக்கிய நீரோட்டத்திற்கு நீங்கள் அழைத்து வர வேண்டும். பொது நிர்வாகத்தில் இருப்பவர்கள், கடைசி மனிதனின் தேவையறிந்து, அவனுக்கு அல்லது அவளுக்கு பிரியமுடன் பணி செய்ய வேண்டும். அதை போலவே நீதி மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும், பல்வேறு தடைகளைத் தாண்டிவந்து, உங்களை காண இயலாத கடைக்கோடி மக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும். மீன்வளத்துறையாகட்டும், வேளாண்மையாகட்டும், நுண்கலையாகட்டும் அல்லது கிராமப்புற மக்களின் சிறு சாதனையாகட்டும், தேசிய வளர்ச்சியில் கூட்டாளியாக இருக்கும் ஊடகத்துறை மக்களின் வெற்றியை கொண்டாட வேண்டும். உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பரந்துபட்ட எதார்த்தத்தில் கிராமிய நிஜங்களின் சிறு உலகம் வசித்துக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் இதை உணர வேண்டும்.

இதைப் போல பல எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். அருமை குடிமக்களே நாம் எல்லோரும் இவ்வாறு செய்தால் இறைவன் நம்போடு இருப்பார் என்பது நிச்சயம். நாடும் வளம் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கும், மகாத்மா காந்திக்கு அவருடைய அன்னையார் அளித்த அறிவுரை இதற்கு சான்று பகர்கிறது. காந்தியடிகள் கூறுகிறார், மகனே உன்னுடைய வாழ்நாளில் யாராவது ஒருவருடைய உயிரை காப்பாற்ற அல்லது அவரது வாழ்வு மேம்பட உதவ முடியுமானால் உன்னுடைய வாழ்க்கையும், நீ ஒரு மனிதனாக பிறந்த நோக்கமும் வெற்றி பெறும். இறைவனுடைய அருள் உங்களுக்கு கிட்டும்.

முடிவுரை:

தவறே இல்லாமை தெய்வீகமாகும். நாம் தெய்வீகமானவர்கள் அல்ல. தவறு செய்ய கூடியவர்கள். பிழை செய்வது மனித இயல்பு. இந்த உண்மையை உணர்ந்து தவறு நேரும் போது நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தெய்வீகத்தின் விருப்பமாகும். உள்நோக்க ஏதுமின்றி இழைக்கப்பட்ட தவறுகள் பற்றியே வருந்திக்கொண்டிராமல், நடுநிலை பிறழாத வெற்றிக்கான நமது வேட்கையே, நமது பாதையில் நேரும் பிழைகளை சரி செய்ய நம்மைத் தூண்ட வேண்டும். அனைத்து மக்களின் ஒழுங்கு நிறைந்த செயல்களே தற்போதைய அதி முக்கியத் தேவையாகும். இதனால் விழிப்புணர்வு பெற்ற குடிமக்கள் உருவாவார்கள். எந்த நாடும் அதன் மக்களை போன்றே நல்லதாகும். அவர்களுடைய குண நலன்களை நாடு பிரதிபýக்கும். இவை நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறதா அல்லது பின் தங்கியுள்ளதா என்பதை தீர்மானிப்பதற்கான முக்கிய காரணிகளாகும். எனவே என்றும் நிலைத்திருக்கும் சில மதிப்பு முறைகளை நாம் குடிமக்களிடையே உருவாக்க வேண்டும். சில ஒழுங்குமுறைகளை அவர்களுக்கு ஊட்ட வேண்டும். துவக்க நிலை முதற்கொண்டு கல்வித் திட்டத்தில் இதற்கு முழு கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒழுக்கத்தின் சிறப்பை வýயுறுத்த, அரசு மற்றும் தனியார்துறை கல்வி நிறுவனங்களிலும், மேல்நிலைப்பள்ளி அல்லது பட்டபடிப்பு நிலையில் அனைத்து இளைஞர்களுக்கும் 18 மாதம் கட்டாயமாக தேசிய மாணவர்படையில் பயிற்சி அளிப்பது அவசியம். இதனால் ஒழுக்கம் நிறைந்த அரசியல், வியாபாரம், நிதித்துறை, விளையாட்டுக்கள், ஆட்சிமுறை மற்றும் அறிவியல் தேடல்களுக்கு வழியுண்டாகும். நாம் எல்லோரும் வாய்மை, நேர்மை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை நமது அன்றாட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும். இது நமது அரசியலை மேன்மைநிலைக்கு உயர்த்தும். நாம் அனைவரும் பயன் பெறும் வகையில் மொத்தமாக நாமே நாட்டுக்காற்ற வேண்டிய பணி குறித்த ஒரு நேர்முக உணர்வை ஏற்படுத்த வேண்டும். நமது முன்னோர் மேற்கொண்ட சேவை மூலமாகவும், விட்டுச் சென்ற பணிகள் மூலமும், நாம் பெரிதும் பயனடைந்திருக்கிறோம், நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு இத்தகைய ஒரு கடப்பாடுக்கு நமக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு. இந்நாட்டின் நிலமும், நீரும், ஆகாயமும் இதற்கு சாட்சிகளாகும்.

நேர்மையான உழைப்பே நம்மை வழிநடத்திச் செல்லும் ஒளியாகும், கடினமாக உழைத்தால் நாம் எல்லோரும் வளமடையலாம். சிறந்த எண்ணங்களைத் தாங்கி செயல்பாடுகளில் உயர்வோம். நேர்மையான வழிமுறைகள் நமக்கு துணையாகலாம். இறையருளால் நாடு மென்மேலும் வளம் பெறும்.

எனதருமை குடிமக்களே, மகிழ்ச்சியான குடியரசு நாளை உங்களுக்கு மீண்டும் வாழ்த்துகிறேன். இறைவன் உங்களுக்கு அருள்வாராக.

ஜெய்ஹிந்த் !

நன்றி: சிபி

Saturday, January 21, 2006

திறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டு

சுமார் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மேசைக் கணிணிகள் விண்டோஸ் இயக்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. அவர்களுக்கு விண்டோஸ் இயக்குதளத்தைவிட பலவழிகளிலும் மேம்பட்ட லினக்ஸிற்கு மாறுவது கீழ்க்கண்ட வழிகளின் மூலம் சாத்தியப்படுகிறது.

விண்டோஸ் பயனர் லினக்ஸிற்கு மாறும் படிப்படியான வழிமுறைகள்

 1. விண்டோஸ் பயனர்களுக்கு லினக்ஸ் பற்றிய தேவையில்லாத பயத்தினைப் போக்குவது.

 2. விண்டோஸ் பயனர்கள் லினக்ஸிலும், விண்டோஸ் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களப் பயன்படுத்தும் படி மாற்று மென்பொருள்களை அறிமுகம் செய்வது.

 3. லினக்ஸ் இயக்குதளத்தை கணிணியில் நிறுவாமல் குறுந்தட்டு மூலமே இயக்கும் க்னாப்பிக்ஸ் போன்ற லினக்ஸ் பரவல்களைச் சோதனை முறையில் செயல்படுத்தும் படி செய்வது.

 4. ஏற்கனவே உள்ள விண்டோஸ் இயக்குதளத்துடன் கடினவட்டில் லினக்ஸும் இரட்டை பூட் முறையில் நிறுவி இயக்கச் செய்தல்

 5. பிறகு முழுவதுமாக லினக்ஸிற்கு மாறுவது.

இதில் இரண்டாவது நிலையான, "விண்டோஸ் பயனர்கள் லினக்ஸிலும், விண்டோஸ் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களப் பயன்படுத்தும் படி மாற்று மென்பொருள்களை அறிமுகம் செய்வது" என்பதற்கு உதவக்கூடிய வகையில் அமைந்ததே இந்த திறந்த மூல மென்பொருள்கள் குறுவட்டுகள்.

திறந்தமூல மென்பொருள்கள் குறுவட்டு என்பது விண்டோஸ் கணிணிகளில் பயன்படுத்தப்படக் கூடிய வகையில் தரமான திறந்தமூல பயன்பாட்டு மென்பொருள்களின் தொகுப்பு ஆகும். பொதுவாக மென்பொருள் தயாரிப்பு, விளையாட்டு, இணையம் சம்பந்தமானவைகள், இசை, பல்லூடகம், பாதுகாப்பு, மற்றும் அறிவியல், வரைகலை, வணிகம் சம்பந்தமான இலவச மென்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. இதை நமது மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட இலவச குறுந்தகட்டோடு இணைசெய்தல் வேண்டாம். அவைகள் திறந்தமூல மென்பொருட்கள் தவிர இலவச மென்பொருட்களையும் ( Freeware) கொண்டுள்ளது. பொதுவாக இலவச மென்பொருட்களின் மூலங்கள் நமக்குக் கிடைப்பதில்லை.

விண்டோஸ் மற்றும் லினக்ஸிலும் இயக்குதளத்திலும் இயங்கும் மென்பொருள்களை நாம் பயன்படுத்துவதால் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். திறந்த மூலம் என்பது சுதந்திரமான, தளைகளற்ற பொதுவாக விண்டோஸ் பயனர்களுக்கு இந்த மென்பொருட்கள் பொதுவாக GPL முறையில் வெளியிடப்படுவதால்,

 1. நீங்கள் சுதந்திரமாக எத்தனை பிரதிவேண்டுமானாலும் எடுக்கலாம், யாருக்கும் இலவசமாகக் கொடுக்கலாம். எத்தனை கணிணிகளிலும் நிறுவலாம்.

 2. உங்களுக்கு தரமான மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

 3. வீட்டு, தனிமனித, மற்றும் வணிக நிறுவனங்களில் இவைகளை நீங்கள் நிறுவலாம்.

 4. பொதுவாக இந்த மென்பொருட்களின் நிரல்கள் இந்த குறுவட்டோடு இணைக்கப்ப்டுவதில்லை. ஆனால் அவைகள் கிடைக்கக்கூடிய இணையத்தள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.

 5. இவைகளில் உள்ள மென்பொருட்கள் பொதுவாக எல்லா இயக்குதளங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டவைகள் ஆகும். இந்த முறை பின்பு நீங்கள் லினக்ஸிற்கு மாறும்பொழுது உங்கள் மாற்றத்தை எளிதாக்கும்.

இப்படிப்பட்ட குறுந்தட்டுகளை வழங்குபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

குறுந்தட்டு

இணையமுகவரி

ஓபன் CD (The Open CD)

http://theopencd.org/

ஓபன்சோர்ஸ் சாப்ட்வேர் CD (Open Source Software CD ).

http://osscd.sunsite.dk/

வின்லிப்ர் (WinLibre)

http://www.winlibre.com/en/index.php

க்னூவின்2 (Gnu Win 2)

http://gnuwin.epfl.ch/en/index.html


இந்த திறந்த மூல மென்பொருள்கள் குறுந்தட்டுகளைப் பற்றியும், அவற்றில் உள்ள மென்பொருட்களைப் பற்றியும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

எனது விண்டோஸ் XP கணிணியில் நான் உபயோகப்படுத்தும் சில திறந்தமூல மென்பொருட்கள்இது எனது அலுவலகக் கணிணி, அதனால .NET, Powerbuilder, SQL Server, Oracleன்னு இருக்கும். அதக்கண்டுக்கிடாதீங்க ;)

Thursday, January 19, 2006

MSN ஸ்பேசஸ் - ஒரு எளிய அறிமுகம்

திறமூல மற்றும் தளையறு மென்பொருள் ஆர்வலர்களின் எண்ண ஓட்டம்

எங்களைப் போன்ற திறமூல மற்றும் தளையறு மென்பொருள் ஆர்வலர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு மடங்கு வேலை. ஆத்துல ஒரு கால் மற்றும் சேத்துல ஒரு கால் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அப்படியல்ல. நீர்நில வாழ்வைகள் போன்று, நாங்கள் எப்படி திறமூல மற்றும் தளையறு அடிப்படையிலான மென்பொருள்களைத் தெரிந்து நிபுணத்துவம் பெறுகிறோமோ அதுபோல தனியுரிமை அடிப்படையிலான மென்பொருள்களையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியத்திற்கு உள்ளாவோம். எடுத்துக்காட்டாக ஓபன் ஆபிசை எப்படித் தெரிந்து நிபுணத்துவம் பெற்றிறுக்கிறோமோ அதுபோல தனியுரிமை அடிப்படையிலான மைக்ரோசாப்ட் மென்பொருள்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது எங்களுக்கு வருத்தம் கொடுக்கக் கூடிய ஒரு பெரிய வேலைச்சுமையே கிடையாது. இஷ்டப்பட்டு நாங்கள் செய்யும் கணிணி வேலை, எப்படி எங்களுக்கு ஒரு பெரிய சுமையாகும். நமக்கு பிடித்த, பிரியமான உணவு வகைகளை ஒரு கைபிடிப்பதுபோன்று, மனதிற்குப் பிடித்த காதலியோடு மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருப்பது போன்று கணிணியில் வேலை பார்ப்பது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான வேலையே. மன்னிக்கவும், இதில் கணிணி வேலை என்பதனை எல்லாம் கணிணி விளையாட்டு என்று மாற்றிக் கொள்ளவும். இஷ்டப்பட்டு நாங்கள் செய்யும் இந்தக் கணிணி வேலை எங்களுக்கு விளையாட்டே.

MSN ஸ்பேசஸ் - வரலாறு

இன்று நாம் பார்ர்கப்போகும் மென்பொருள் மைக்ரோசாப்டின் வலைப்பதிவு பற்றிய MSN ஸ்பேசஸ். MSN ஸ்பேசஸ் என்பது கூகுளின் பிளாக்கருக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் கொண்டுவந்த ஒரு வலைப்பதிவு வழங்கியாகும். இந்த விசயத்தில் கூகுள் ஏற்கனவே மைக்ரோசாப்டின் வேலையைச் திறம்படச் செய்து விட்டது. பைரா லேப்பிடமிருந்து 2003ல் பிளாக்கரை வாங்கி கூகுளின் பெயரில் தருமியாக ரீ-பிராண்ட் செய்து விட்டனர். வேறு எந்த நிறுவனமும் விலைக்கு வாங்க கிடைக்காததால் மைக்ரோசாப்ட் சொந்தமாக மண்டபத்தில் யாரும் எழுதிக்கொடுக்காமல் தாமாகவே ஆரம்பத்து விட்டனர்.இந்த MSN ஸ்பேசஸிலும் மைக்ரோசாப்ட் தன் வழக்கமான முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. அது பற்றி விளக்கமாக.

MSN ஸ்பேசஸ் கணக்குத் தொடக்கம் எனது அனுபவம்

MSN ஸ்பேசஸ் பற்றி தெரிந்து கொள்வதற்காக நான் MSN ஸ்பேசஸில் ஒரு புதிய பிளாக் தொடங்கினேன். அது பற்றிய எனது இனிய அனுபவங்கள் இதோ உங்களுக்காக.

ஹாட்மெயில் மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கான ஒரு அதிகப்படியான வசதியே

எனது முதல் எரிச்சலே, நான் வலைப்பதிவு தொடங்க, ஹாட்மெயில் மின்னஞ்சல் கணக்குக் கேட்டது. கணக்குக் கேட்ட எம்.ஜீ.ஆரைப் பார்த்த கருணாநிதி போல ஆகிய நான் , பின்பு உணர்ந்த பெற்ற ஞானம், MSN ஸ்பேசஸ் என்பது ஹாட்மெயில் மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கான ஒரு அதிகப்படியான வசதியே. பிளாக்கர் போன்று யாரும் எந்த மின்னஞ்சல் வைத்திருப்பவர்களுக்கும் ஏற்றதல்ல. மறைமுகமாக ஹாட்மெயில் மின்னஞ்சலைப் பிறர் தலையில் கட்ட இது ஏற்றது. குங்குமம் மற்றும் தமிழ்முரசுடன் பலசரக்கு தருவது போல.

வலைப்பதிவுகளின் சுதந்திரத்திற்கு எதிர் போக்கு

ஒரு புதிய வலைப்பதிவினைத்தொடங்கும் போது பொதுவாக நாம் சரி என்று சொல்லும் நிபந்தனைகளில் கூறப்பட்டுள்ள இந்தக்கருத்து, வலைப்பதிவுகளுக்கே எதிரானது.

"The Terms and Conditions that all users must agree to when signing up for an MSN Space, grant Microsoft permission to (1) use, copy, distribute, transmit, publicly display, publicly perform, reproduce, edit, modify, translate and reformat your Submission"

வலைப்பதிவுகள் என்பதே எனது கருத்தினை யாருக்கும் அஞ்சாமல் சுதந்திரமாக , எந்த வித தணிக்கையுமின்றி வெளியிடுவதே ஆகும். மைக்ரோசாப்ப்டின் இந்த நிலைப்பாடு வலைப்பதிவுகளின் சுதந்திர உணர்வுகளுக்கு முற்றிலும் எதிரானது. பத்திரிக்கை ஆசிரியர்களை விட மோசமாக உள்ளனர். இந்த வசதியைப் பயன்படுத்தி ஏற்கனவே சீனாவில் "மைக்கேல் அண்டி" என்பவரது சீன அரசின் பேச்சுரிமை சம்பந்தமான வலைப்பதிவையே தூக்கி விட்டனர். நல்ல வேலை இந்த நிபந்தனை மின்னஞ்சலுக்குப் பொறுத்தம் இல்லை.

பிளாக்கரிடமிருந்து வேறுபடும் விசயங்கள்

ஆனால் ஹாட்மெயிலோடு தொடர்புடையதால் MSN ஸ்பேசஸ், MSN மெசஞ்சரோடு மிகவும் நெருங்கிய தொடர்போடு உள்ளது.மற்றபடி மைக்ரோசாப்டின் வழக்கமான ஜிகினா வேலைகள் எங்கும் நீக்கமற் நிறைந்துள்ளன. நமக்கு விரும்பிய பாடல்தொகுப்பு, புகைப்பட ஆல்பங்கள் ஏற்படுத்தும் வசதி , மற்றும் அளவுக்கதிகமான தேவையற்ற டெம்ப்ளட்கள் என்று நிறைந்து உள்ளது. பிளாக்கரில் இல்லாத இரம்மியமாக பார்வைக்கு மற்றும் உணர்வு, பதிவுகளில் ஸ்மைலி போடும் வசதி , பதிவுகளை வகைப்படுத்தும் வசதி, பதிவுசெய்யும் சாளரத்திலே படங்களை வலையேற்றம் செய்யும் வசதி உள்ளது. பதிவுசெய்யும் சாளரத்திலேயே பதிலீடு செய்யும் முறை உள்ளது. இது வரவேற்க்கத்தக்க ஒன்றாகும்

MSN ஸ்பேசஸ் லோகோ Ubuntu லினக்ஸின் மாற்றிய வடிவம்

ஆனால் MSN ஸ்பேசஸ் ஏன் Ubuntu லினக்ஸ் என்ற லினக்ஸ்பரவலின்
லோகோவை மாற்றம் செய்து உபயோகப்படுத்துகின்றனர்? இதோ கீழே அந்த இரண்டு லோகோக்களும். பார்த்து விட்டு நீங்களே சொல்லுங்கள்.

Ubuntu லினக்ஸ் எனபது Mark Shuttleworth என்ற தென்னாப்பிரிக்கரால் , லினஸ் டார்வல்ட்ஸ் என்ற ஐரோப்பியரின் லினக்ஸ் முயற்சியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லப்பட ஆரம்பித்தது ஆகும். லினக்ஸ் உலகின் எல்லா இனத்தவராலும், மதத்தவராலும், இணைந்து செய்த ஒரு இலவச இயக்கு தளம். இதைக் குறிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு நிறத்தவர்கள் மற்றும் இனத்தவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே பிரதி எடுத்து விளையாண்டுள்ளனர் நமது எதிர் அணியினர்.

MSN ஸ்பேசஸ்Ubuntu லினக்ஸ்


Friday, January 13, 2006

வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட்(Thunderbird ) 1.5

வந்தாச்சு வந்தாச்சு தண்டர்பேர்ட் 1.5 , சும்மா நச்சுன்னு இருக்கு நம்ம தண்டர்பேர்ட் 1.5


தண்டர்பேர்ட் மின்னஞ்சல், RSS மற்றும் செய்தித்தொகுதிக்கான ஒரு முழு அளவிலான ஒரு பயன்பாட்டு பொருளாகும். மைக்ரோசாப்டின் அவுட்லுக் போன்ற ஒரு மின்னஞ்சல் செயலி. இது மொசிலா நிறுவனத்தால் இலவசமாக , திறந்த முறையில் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே மொசிலா பையர்பாக்ஸ் என்ற பெயரில் இணைய உலாவியை இலவசமாக வெளியிட்டு மைக்ரோசாப்டின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரசை விட அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்டது.

இந்தப் புதிய பதிவு 1.5 கீழ்க்கண்ட புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.

 • தானகவே புதிய பதிப்புகளைக் கண்டறிந்து தேவையானதை மட்டுமே உயர்தரப்படுத்தும் வசதி.
 • தானகவே மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிந்து நிறைவு செய்யும் வசதி
 • தானகவே பிழை நீக்கும் வசதி
 • மின்னஞ்சல்களில் தேடும் மேம்படித்தப்பட்ட வசதி
 • மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
 • போட்காஸ்டிங் மற்றும் RSS பயன்பாட்டு மேம்பட்ட வசதிகள்
 • தானகவே Draft என்ற பெயரில் அனுப்பாத அஞ்சல்களைச் சேகரிக்கும் வசதி.
என்பது போன்ற பலப்பல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் திறந்த நிரல்நிறை முறையில் வெளியிடப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக லினக்ஸ் போன்ற பாதுகாப்பான இயக்கு தளங்களிலும் இயங்குமாறு உள்ளது.

மறக்காமல் உபயோகித்துப் பாருங்கள்.

தமிழ்மணம் கூகிள் குழுமத்தில் கடைசி 15 மடல்கள் எனது தண்டர்பேர்டில்

சன்டீவி சிறப்பு நிகழ்ச்சிகளின் டெம்ப்ளட்

"சன் டீவியின் ஜங்க் - தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்" என்ற பெயரில் சன் டீவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்கனவே நன்றாக அலசி விட்டதால் இப்போது அடுத்த சிறப்பு நிகழ்ச்சியான பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை அலசுவோம். தீபாவளி சிறப்புநிகழ்ச்சிகளின் போது கூறிய அதே கருத்துக்களை இப்போதும் சிறிதளவு மாற்றமின்றி அப்படியே இன்னொரு முறை கூறுவதற்குப் பதில் என்னுடைய பழைய பதிவினை இன்னொருமுறை படித்துக் கொள்ளவும். ஏறத்தாழ தமிழ்நாட்டின் 45% பார்வையாளர்களைப்பெற்ற சன் டீவியை மட்டுமே நான் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வேன். மற்ற டீவிகளுக்கு ஒரு பெரிய 'NO'. ஜெயிக்கிற குதிரை பின்னாடி மட்டுமே நான் செல்வேன்.

முதன் முதலில் சன்னிற்கு ஒரு நன்றி. சன்னிற்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு டெம்ப்ளட் உள்ளது. அதை அவர்கள் எக் காரணம் கொண்டும் மாற்றமாட்டர்கள் என்று நினைக்கிறேன். எப்படியோ நான் தட்டச்சு செய்யும் நேரத்தை குறைத்ததற்கு நன்றி. இதை வைத்து நீங்கள் கூட சன் டீவியின் 2006ம் வருடத்திய தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியலை தயாரித்து விடலாம்.

இந்த வருடம் சரியாக விளம்பரம் கிடைக்க வில்லையோ என்னமோ மத்தியானம் படம் 2 1/2 மணி நேரமே ;)

இப்போது சிறப்பு நிகழ்ச்சிகள். நேயர்களின் வசதிக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. உதவிக்குறிப்புகள்

நேரம் - நிகழ்ச்சி வகை - நிமிடத்தில் 2005 தீபாவளி நிகழ்ச்சிகள் 2006 பொங்கல் நிகழ்ச்சிகள்
06:00 - 06:30 AM-(சினிமா 30 நிமிடங்கள்)
பாமாலை - பக்திப்பாடல் - உண்ணிகிருஷ்ணன்
தமிழிசை - சுதா ரகுநாதன்

06:30 - 07:00 AM-(சினிமா 30 நிமிடங்கள்)
இசைக் கோலாகலம் - ராஜேஸ் வைத்தியா
நாத சுகம் - திருப்புவனம் சுவாமிநாதன்

07:00 - 08:00 AM - (சினிமா 60 நிமிடங்கள்)
சிறப்பு வணக்கம் தமிழகம் - பாரத்
சிறப்பு வணக்கம் தமிழகம் - அர்ஜீன்

08:30 - 09:00 AM- (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு புதுப்பாடல்
சிறப்பு புதுப்பாடல்

09:00 - 09:30 AM - (சினிமா 30 நிமிடங்கள்)
நட்சத்திர சந்திப்பு - அசின்
நட்சத்திர சந்திப்பு - ஜெயம் ரவி

09:30 - 10:00 AM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு திரைக் கண்ணோட்டம்
சிறப்பு திரைக் கண்ணோட்டம்

10:00 - 10:30 AM - (சினிமா 30 நிமிடங்கள்)
நட்சத்திர சந்திப்பு - தனுஸ், செல்வராகவன்
நட்சத்திர சந்திப்பு - திரிசா

10:30 - 11:30 AM - சாலமன் பாப்பையா
சிறப்பு பட்டி மன்றம்
சிறப்பு பட்டி மன்றம்

11:30 - 02:30 PM - (சினிமா 150 நிமிடங்கள்)
படையப்பா - திரைப்படம்
குசி - திரைப்படம்

02:30 - 03:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்) - புதியது

சிறப்பு நகைச்சுவை நேரம்

03:00 - 03:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு நகைச்சுவை நேரம்
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பாசக்கிளிகள்

03:30 - 04:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - அது ஒரு கனாக்காலம்
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - கள்வனின் காதலி

04:00 - 04:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - மஜா
பிலிம்டுடே விருது

04:30 - 05:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - சிவகாசி
பிலிம்டுடே விருது

05:00 - 05:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
நட்சத்திர சந்திப்பு - வடிவேலு
கேள்விக்கென்ன பதில்

05:30 - 06:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
நட்சத்திர சந்திப்பு - விஜய்
நட்சத்திர சந்திப்பு - விஜய்

06:00 - 06:30 PM - (சினிமா 240 நிமிடங்கள்)
திரைப்படம் - வசூல்ராஜா MBBS
திரைப்படம் - தூள்

08:00 - 08:30 PM - (சினிமா அல்ல 30 நிமிடங்கள்)
சன் நியுஸ்
சன் நியுஸ்

08:30 - 10:30 PM
திரைப்படம் தொடர்ச்சி
திரைப்படம் தொடர்ச்சி

10:30 - 11:00 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
சிறப்பு திரைக் கண்ணோட்டம் - பம்பரக்கண்ணாலே
சிறப்பு தங்க வேட்டை

11:00 - 11:30 PM - (சினிமா 30 நிமிடங்கள்)
(தீபாவளிக்கு நிகழ்ச்சி இல்லை)
சிறப்பு காமெடி டைம்

தகவல் நன்றி:
சன் டீவி
தமிழ்முரசு

மற்ற தொலைக்காட்சி நிலையங்கள் எப்படி? அவர்களும் இப்படித்தானா? கண்டிப்பாக, யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.

மக்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி வகைகளைக் கொடுப்பதனாலே மட்டுமே சன் தமிழகத்தின் நம்பர் 1 தொலைக்காட்சியாக உள்ளது. இவ்வளவு சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளா?

அப்படியானால் மக்களுக்கு சினிமா மட்டுமே பிடிக்கின்றதா? வேறெதுவும் பிடிப்பதில்லையா?

இதில் பொங்கல் , அதன் மகத்துவம், அது ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஒன்றுமே இல்லையே? ஏன்?

அல்லது மக்கள் பொங்கலன்று தொலைக்காட்சியே பார்ப்பதில்லையா? குடும்பத்துடன் பொங்கல் மட்டுமே கொண்டாடுகிறார்களா?

தமிழ் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகள் என்று மற்றொரு முறையும் நிறுபித்து விட்டன.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. இந்த சினிமா நிகழ்ச்சிகளை மட்டுமே தரும் இந்தத் தொலைக்காட்சியை பார்ப்பவர்களை நினைத்தால் எனக்கு மனதில் தோன்றும் காட்சி,


இவர்களை எப்போது யார் திருத்துவார்கள்.

அப்துல்கலாம் போன்ற மேதைகளின் கடினமான உழைப்பினால் உருவான ராக்கெட்டுகள் மற்றும் சேட்டிலைட்டுகளில் நாம் இப்படிப்பட்ட பாடாவதி சினிமா நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் பாடல்..
"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..??"

ஆகா சுருக்கமாக, சன் டீவியின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பழைய பானையில் புதிய பொங்கல்.

பின்குறிப்பு:

எனக்கு காலம் பொன்போன்றது. நான் நேசனல் ஜியோகிராப் , பி.பி.சி, CNN, தவிர எந்தச் சேனலையும் கடந்த 5 வருடங்களாகப் பார்த்ததே இல்லை :)

அப்துல் கலாம் சினிமாவே பார்த்தது கிடையாது என்பதை இந்த நேரத்தில் எல்லோருக்கும் ஞாபகப் படுத்துகிறேன்.

எல்லோருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Tuesday, January 10, 2006

பில்கேட்ஸ் சோமாலியாவுக்கு உதவி செய்வதுதானே?உலக கோடீஸ்வரரான, மைக்ரோ சாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ், கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்படியே தமிழகமும் வந்தார். எதிர்க்கட்சித் தலைவரான கலைஞரை சந்தித்தவர், தமிழக முதல்வரையும் சந்தித்தார். தமிழகப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாகக் கணிப்பொறி தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்போவதாக, அறிக்கையும் வெளிவந்தது. கூடவே பல்லாயிரக்கணக்கான கோடிகளை இந்தியாவில் கொட்டப்போகிறார். அதனால் ஆயிரக்கணக்கில் இங்கே வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற பேச்சு ஒருபுறம். பில்கேட்ஸின் அறக்கட்டளை மூலம் இங்கே மருத்துவ உதவிகளை மேம்படுத்த நிதியுதவி என்றும் சொல்லப்பட்டது.

‘‘என்னடா... இவ்வளவு அக்கறை என்று, திகைக்க வேண்டாம். தமிழக ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி என்பது, ஒருவித மோசடி. அதற்கு வியாபாரப் பின்னணிதான் உள்ளது’’ என்கிறார் தமிழில் கணிப்பொறி மென்பொருள்களை உருவாக்கியிருக்கும் இரா.துரைப்பாண்டியன்.

‘பனெஷியா’ என்ற பெயரில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் துரைப்பாண்டி, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கோரிக்கை மனுவொன்றையும் அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.

‘‘சமீபத்தில் பில்கேட்ஸ் வந்தபோது, தமிழக ஆசிரியர்களுக்கு கம்ப்யூட்டரில் இலவச தொழில்நுட்பப் பயிற்சி என்றார். நமது அரசு அதற்கு சம்மதிக்கக்கூடாது. பில்கேட்ஸின் நோக்கம் வியாபாரத்தன்மை கொண்டது. எப்படி கிழக்கிந்திய கம்பெனி வியாபாரத்திற்காக உள்ளே நுழைந்து அப்போதைய மன்னர்களுக்குச் சலுகைகளை வாரிக்கொடுத்து பின்னாளில் இந்தியாவையே அடிமைப்படுத்திக் கொண்டார்களோ அதே வழிமுறைதான் இதுவும்.

தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியா முழுவதற்கும் சேர்த்தே கூறலாம். அடுத்த தலைமுறையினர் எப்படியும் கம்ப்யூட்டருக்குள்தான் வந்தாக வேண்டும். ஏதாவது ஓர் ஆசிரியர்களிடம்தான் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இப்போதே தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவச பயிற்சி என்று கொடுத்தால், அவர்கள் பில்கேட்ஸின் ‘மைக்ரோ சாஃப்ட்டின்’ மென்பொருளைத்தான் பழகமுடியும். அதைத்தான் எதிர்கால மாணவர்களுக்குச் சொல்லித் தரமுடியும். மற்றது எதையும் படிக்காததால் அதைப்பற்றி சொல்லித் தரமுடியாது. கடிவாளம் போட்ட குதிரை மாதிரி மைக்ரோ சாஃப்ட்டின் மென்பொருள் பற்றியே பாடம் நடத்துவார்கள்.

இந்தத் தலைமுறையின் பல்லாயிரம் ஆசிரியர்கள் அப்படி பயிற்சி எடுத்தால், அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் வேறுவழியின்றி அந்த சாஃப்ட்வேருக்கே பழக்கப்பட்டுப் போவார்கள்.

இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆதிவாசி மக்களிடம் சென்று, இலவச மருத்துவ முகாம், உதவி என்று ஓராண்டுக்கு நடத்துவார்கள். அலோபதி மருந்து மாத்திரைகளுக்குப் பழக்கப்படுத்துவார்கள். அந்த மக்களின் சொந்த வைத்தியம் அடிபட்டு மறைந்து போகும். ஒரு காலகட்டத்தில் இலவச சேவையை நிறுத்திக்கொள்வார்கள். பிறகு...? டாக்டர், மருந்து மாத்திரை, மருத்துவமனை என்று எல்லாவற்றையும் அவர்கள் பணம் கொடுத்தே வாங்கவேண்டும். அதுபோலத்தான் இது.

தமிழக ஆசிரியர்களுக்கு, பில்கேட்ஸ் கொடுக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி என்பதும் இந்த நோக்கம்தான். எதிர்காலத்தில் நாம் அனைவரும் அவரது சாஃப்ட்வேர் கம்பெனிக்குக் கட்டுப்பட்டுதான் கிடக்கவேண்டும். அதுவும் பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அடிமையாக. அதை இப்போதே தவிர்க்கவேண்டும். நாமே சொந்தக் காலில் நிற்கவேண்டும். அதற்கான வழிமுறைகளைத்தான் நாங்கள் கூறுகின்றோம். வியாபார நோக்கிலான சுயநலத்திற்கு நாட்டை அடகு வைக்கக்கூடாது’’ என்கிறோம்.

இதிலென்ன அடகு வைக்கும் தன்மை?

‘‘தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது. எந்த அமைச்சர் இருந்தாலும் அதுதான் நடக்கும். அந்த வளர்ச்சிக்கேற்ற மாறுதலும் இருக்கிறது. அடுத்த தலைமுறை டி.வி.யில் படம் பார்க்காது. கம்ப்யூட்டரிலேயே பார்க்கும்.

அந்த நிலையை பில்கேட்ஸின் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ‘இணையத் தொலைக்காட்சி’ என்ற புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து உலகெங்கும் புகுத்த இருக்கிறது. இது செயல்படவேண்டும் என்றால், அகன்ற அலைவரிசை இணையத் தொடர்பு வேண்டும். அதையும் மத்தியஅமைச்சர் தொடங்கி வைத்துவிட்டார். எதிர்கால டி.வி. சந்தை முழுவதும் கம்ப்யூட்டருக்கு மாறும். பெரிய... வியாபாரம்.

இங்கே உள்ள பல தொலைக்காட்சிகளும் ‘இணையத் தொலைக்காட்சிக்கு மாறியாகவேண்டும். அதற்காக இந்திய மன்னர்களுக்கு சலுகையைக் கொடுத்துவிட்டு, கிழக்கிந்திய கம்பெனி கால்பதித்ததைப்போல், பதித்துக் கொள்ளலாம்.

அதை மூடி மறைத்து, ஆசிரியர்களுக்கு இலவச பயிற்சி, இலவச மருத்துவ உதவி என்று வேடம் போடுகிறார்கள். சோமாலியா, எத்தியோப்பியா, ஆப்ரிக்க நாடுகளில் எல்லாம் மனித சமுதாயம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் அங்கே போய் உதவிசெய்ய வேண்டியதுதானே... செய்யமாட்டார்கள். காரணம், அங்கே இவர்களுக்கு வியாபாரம் ஆகாது. இதுமட்டுமல்ல... நமது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது.’

நீங்களும் உங்கள் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மென்பொருள்களை வடிவமைத்து உள்ளீர்கள்... அவை எப்படி வேறுபடுகின்றன?

‘‘நாங்கள் தயாரித்த சுமார் பதினான்கு சாஃப்ட்வேர்களை தமிழக அரசுக்கு இலவசமாகவே கொடுக்க இருக்கிறோம். தமிழக முதல்வருக்கும் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ஜெயக்குமாருக்கும் கோரிக்கையை அனுப்பி இருக்கின்றோம். பரிசீலனையில் உள்ளது.

ஏற்கெனவே தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சித் துறையில் நாங்கள் அளித்த சாஃப்ட்வேர்களைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். முழுக்க முழுக்க தேச நலன் கருதி இலவசமாக வழங்கியதுதான். அதற்கு முன்பு வேறு தனியார் நிறுவன சாஃப்ட்வேர்களை தமிழ் வளர்ச்சித் துறையில் பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அந்த நிறுவனத்திடம் மீண்டும் மீண்டும் பணத்தைக் கட்டி புதுப்பித்துக் கொள்ளவேண்டும் என்ற கண்டிஷனுடன்!

இப்போது நாங்கள் கொடுத்த சாப்ட்வேர் அப்படி அல்ல. சோர்ஸ் கோடு உள்ளிட்ட எல்லாம் முழுக்க இலவசம்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்கள் என்பவை சாப்பிடும் ‘கேக்’ மாதிரி. சுட்டுத் தருகிறார்கள். அதை வாங்கி சாப்பிட்டுக்கொள்ள (பயன்படுத்திக்கொள்ள) வேண்டும். முடிந்தபிறகு சாப்பிடவேண்டுமானால் மீண்டும் ஒரு கேக்கை பணம் கொடுத்து வாங்கவேண்டும். ஆனால் எங்களின் சாஃப்ட்வேரில். அந்த ‘கேக்’கை தயாரிக்க என்னென்ன தேவை. எப்படிக் கலக்கலாம், எந்த விதத்தில் எப்படிப்பட்ட பக்குவத்தில் ‘கேக்’கை சுட்டெடுக்கலாம் என்ற வழிமுறைகளும் உண்டு.

தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்கெனவே அவர்கள் பணம் கொடுத்து வாங்கியதை நிறுத்தியதில் பல லட்ச ரூபாய் அரசுக்கு லாபம் ஒருபுறம் என்பதோடு, நமது சாஃப்ட்வேர் நன்றாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். அப்படியே மற்ற எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களுக்கு இந்த சாஃப்ட்வேரில் பயிற்சி தரவேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ ஆயிரக்கணக்கான ஊழியர்களால் தயாரிக்கப்படுவது. நாங்கள் வழங்க உள்ள சாஃப்ட்வேர் அப்படி அல்ல. அதனால் ஒரு சில சிறிய குறைபாடு, வித்தியாசம் இருக்கலாம்.

மத்தியஅரசுக்குச் சொந்தமான ‘சீ_டாக்’ நிறுவனம் எதற்கு உள்ளது? மதிநுட்பமான, வியக்கும்படியான கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் எல்லோரும் அதில் உள்ளார்களே... முன்பு ‘சூப்பர் கம்ப்யூட்டர்_2000’த்தை இந்தியாவிற்குத் தர தடை விதித்திருந்தது அமெரிக்கா. அப்போது ‘சீ_டாக்’ விஞ்ஞானிகளே முயற்சித்து அமெரிக்கா தரமறுத்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட, பல மடங்கு சிறப்பு வாய்ந்த ‘பரம் _ 2000’ என்ற கம்ப்யூட்டரை கண்டுபிடித்தார்கள்.

அந்தத் திறமையெல்லாம் எங்கே போனது. முடக்கி வைத்தது யார்? அவர்களைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ‘மைக்ரோ சாஃப்ட்வேர்’ கம்பெனிக்குப் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஏன்? நிறையக் கேள்வி உள்ளது. நாங்கள் வழங்கிய சாஃப்ட்வேர்களில் சில சிறிய குறைபாடுகள் இருந்தால் அதை மத்தியஅரசின் ‘சீ_டாக்’ விஞ்ஞானிகள் மெருகேற்றி நாட்டிற்கு பயன்படுத்தலாமே.

அதன் முதல் முயற்சிதான் தமிழக முதல்வரையும், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜெயக்குமாரையும் அணுகியுள்ளோம். இது ‘வியாபார’ ரீதியில் செய்யப்படும் விஷயமல்ல. பதினான்கு சாஃப்ட்வேர்களை கொடுப்பதோடு நாங்கள் விலகிக்கொள்வோம்!’’ என்றார் துரைப்பாண்டி.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

Saturday, January 07, 2006

போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.

போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து.
இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
பனமரத்துல வவ்வாலா, நம்ம தமிழ்மணத்துக்கே சவாலா?

நமது கட்சியின் பிரச்சார எவுகணை, கலப்பைக் கலைவேந்தன், தமிழ்மணத்தை மணக்கச் செய்யும் தமிழ்மாலை, புரட்சி சுனாமி , பிளாக் புயல், நந்தவன நாயகன் பவுலடிகளார் நமது தமிழ்மணத்தை ஆதரித்து இப்போது பேசுவார்..

(இடியென கைதட்டல் மழை.... ;)

அன்புத் தாய்மார்களே, அருமை வலையுலக உடன்பிறப்புகளே, என் உயிரினும் மேலான பில்லியன்கணக்கான வலையுலக இரசிகர்களே , அலுவலக நேரத்தில் எட்டிப் பார்ர்க்கும் கழகக் கண்மணிகளே உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்.

எனக்கு முன் பேசிய அண்ணன் பிரகாசார் வரும் வலைப்பதிவுகள் தேர்தலில் இந்த வருடம் பல்வேறு தலைப்பில் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலே, சிறந்த வலைத்திரட்டிக்கான விருதில், 'தமிழ்மணம்' nominate செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறி அமைந்தார். நமது வேட்பாளர் தொழில்நுட்ப ரீதி, திரட்டியின் வேகம், ஒரிஜினல் ஐடியா, பின்னூட்டங்களைத் திரட்டும் வசதி, என்று பல்வேறு விதமான தன்மைகளால், வசதிகளால் பலமடங்கு தகுதியும், திறமையும் படைத்த செயல் வீரன் என்பதில் சந்தேகமேயில்லை.

எனவே வழக்கம் போல ஆயிரம் நொல்லை சொல்லிக்கொண்டு ஓட்டுச் சாவடிக்குச் செல்லாமல் இருப்பவர்களும், அலுவலக நேரத்தில் வலைப்பூ மேயும் என்போன்ற அயிரக்கணக்கான தமிழ்மண விசிறிகளும் மறக்காமல் நம் தமிழ்மணத்திற்கு ஓட்டுப் போடுமாறு வேண்டுகிறேன்.

நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் இந்தியா முழுவதும் வலைப்பூ பதிபவர்கள் மத்தியிலும், தமிழ் வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்மணத்தை அறிமுகப் படுத்த ஒரு நல்ல வாய்ப்பு.

எனவே மறந்து விடாதீர்கள்... உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திற்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வாக்கினைப் பதிவு செய்யும் முறைகள்

1. ஓட்டுச் சாவடிக்குச் செல்ல வலைத் தடம்: http://indibloggies.org/final-polls-begin

2. ஓட்டுச் சீட்டு வாங்கும் இடம்3. கையில் மைவக்கும் இடம்


4. மறைவிடத்தில் வாக்களிக்க வேண்டிய இடம் மற்றும் நமது வேட்பாளரின் பெயர்அப்பால நீங்க வீட்டுக்கு வந்துடலாம். அம்புட்டுதேன்.

ஓட்டுப்போட கடைசி நாள் 10 ஜனவரி 2005.

எனவே அலைகடலென , சைபர் வீதியில் திரண்டு வாரீர். உங்கள் பொன்னான வாக்குகளை நம் தமிழ்மணத்திற்கு அள்ளித்தாரீர்.

எனக்கு மேலும் சில, பல அலுவல்களும், இலச்சக்கணக்கான கூட்டங்களும் இருப்பதால் எனது பேச்சினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம், ஜெய்ஹிந்த்..